Showing posts with label அறிமுகம். Show all posts
Showing posts with label அறிமுகம். Show all posts

Saturday, November 21, 2015

முன்னோடி இந்தியர்கள் ஓர் அறிமுகம்!

ராமச்சந்திர குஹா
ராமச்சந்திர குஹா




சமகால இந்திய வரலாற்றாசிரியர்களில் தனித்துவம் வாய்ந்தவர் ராமச்சந்திர குஹா. அவர் எழுதிய ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, சுதந்திரம் பெற்ற பிறகான இந்தியாவின் மிகச் சிறந்த வரலாறு. அந்தப் புத்தகத்தை அடுத்து அவர் தொகுத்து வெளியிட்ட ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ (மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா), இன்றைய இந்தியா எப்படி உருவாகியிருக்கிறதோ அதற்குக் காரணமான 19 ஆளுமைகளின் எழுத்துக்களிலிருந்து முக்கியமான பகுதிகளையும், கூடவே அவர்களைப் பற்றிய நடுநிலையான அறிமுகத்தையும் தருகிறது.

‘உலகிலேயே மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் நாடு’ என்று குஹா கருதும் இந்தியாவுக்கு அந்தப் பண்பு வருவதற்குக் காரணமே ஈடிணையற்ற அதன் பன்மைத்தன்மைதான். ஆகவே, அந்தப் பன்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆளுமைகளைக் கொடுக்க வேண்டியதும் இது போன்ற ஒரு புத்தகத்தின் தலையாய கடமை. அந்தக் கடமையை அழகுற ஆற்றியிருக்கிறார் குஹா.

நவீன இந்தியாவின் முதல் சீர்த்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய், இஸ்லாமிய சீர்திருத்தவாதி சையது அகமது கான், சமூகப் போராளி ஜோதிராவ் புலே, விளிம்பு நிலைப் பெண்ணியவாதியான தாராபாய் ஷிண்டே, தீவிர தேசியவாதி திலகர், மிதவாதி கோகலே, தேசத் தந்தை காந்தி, முதல் பிரதமர் நேரு, சமூக நீதிப் புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிகர சீர்திருத்தவாதி பெரியார் என்று நவீன இந்திய வரலாற்றின் மாறுபட்ட போக்குகளைச் சேர்ந்தவர்களை இந்த நூலில் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறார் குஹா.

கூடவே, இந்துத்துவ மேலாதிக்கவாதி எம்.எஸ். கோல்வல்கர், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்பட்டாலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு பிரிக்க முடியாதவரான ஜின்னா, ஆங்கிலேயராக இருந்தாலும் இந்தியாவில் வந்து காந்தியால் ஈர்க்கப்பட்டு, பழங்குடியினருக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட வெரியர் எல்வின் என்று இப்படிப்பட்ட விசித்திரமான பன்மைத்தன்மையை இந்த நூலில் குஹா பிரதிபலிக்கச் செய்திருக்கிறார்.

முக்கியமான இந்த நூலை வாசிப்புக்கு உகந்த விதத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

நூலிலிருந்து

ஜின்னா:

இந்தியாவில் பெரும்பான்மையினரின் தேசமும் சிறுபான்மையினரின் தேசமும் உள்ளன என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால், பெரும்பான்மையை அடிப்படையாகக்கொண்டு அமையும் நாடாளுமன்ற ஆட்சியில் பெரும்பான்மையினரின் ஆட்சியே அமையும் என்பதே உண்மை.

அம்பேத்கர்:

சாதிக் கட்டுப்பாடுகளை நீக்கினால் மட்டும் தீண்டாமையை அடியோடு ஒழித்துவிட முடியாது… வீட்டுக்குள்ளும் மனித மனதுக்குள்ளும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதனை முழுதாகத் துடைத்து நீக்க ஒரே வழி கலப்புத் திருமணம்தான்.

காந்தி:

இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி.

கமலாதேவி சட்டோபாத்யாய:

பெண்ணிய இயக்கமானது ஆணைப் போல் நகலெடுக்கவோ ஆணுக்கு எதிராகப் போர் தொடுக்கவோ சொல்லவில்லை. பெண்களுக்குத் தங்கள் பலங்களை அறியத் தருவதும் எதிர்பால் மத்தியில் ஒருவித மரியாதையை வென்றெடுப்பதுமே அதன் நோக்கமாகும்.

நவீன இந்தியாவின் சிற்பிகள்

தொகுப்பாசிரியர்: ராமச்சந்திர குஹா

தமிழில்: வி. கிருஷ்ணமூர்த்தி

விலை: ரூ. 400

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை-14

தொலைபேசி: 044-4200 9603

மின்னஞ்சல்: support@nhm.in

Keywords: முன்னோடி, இந்தியர்கள், ஓர் அறிமுகம், நூல் அறிமுகம், புத்தகம்

நன்றி :- தி இந்து

வாசிப்பு இயக்கமாகும் ‘நம் கல்வி நம் உரிமை’




அரசுப் பள்ளிகளைக் கொண்டாடும் ‘நம் கல்வி நம் உரிமை’ புத்தகத்தை வெளியிடுவதில் ‘தி இந்து’ நாளிதழோடு கைகோத்துக்கொண்ட ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ தனது வாசிப்பு முகாம்கள் மூலமாகவும் அந்தப் புத்தகத்தைத் தமிழகமெங்கும் கொண்டுசெல்கிறது.

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் கடந்த மாதம் 24, 25 தேதிகளில் ‘நம் கல்வி நம் உரிமை’ புத்தகத்துக்கான முதல் வாசிப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பார்வைத் திறனற்ற பேராசிரியர் முருகேசனின் பங்கேற்பு அனைவரையும் ஈர்த்தது.

ஏழு ஏழு பேராகப் பிரித்துக்கொண்டு கல்லூரி வளாகத்தின் வெவ்வேறு இடங்களில் ஆசிரியர்கள் புத்தக வாசிப்பை மேற்கொண்டனர். குழுவில் உள்ள ஒவ்வொரு வரும் ஒரு அத்தியாயம் என்று வரிசையாக வாசிக்க, மற்றவர்கள் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு கண்ணாலும் காதாலும் சொற்களைப் பின்தொடர்ந்தார்கள். இடையிடையே விவாதங்கள், பகிர்தல்கள். நல்ல அனுபவம் அது.

குழு வாசிப்புக்குப் பிறகு தங்கள் கருத்துகளை ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்டனர். அரசுப் பள்ளிகளைக் காப்பதிலும், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதிலும் ‘தி இந்து’ காட்டிவரும் அக்கறை தொடர வேண்டும் என்றார்கள்.

அடுத்து, டிசம்பர் 5-ல் புதுச்சேரியிலும் (புதுச்சேரி அறிவியல் இயக்கம்), டிசம்பர் 26, 27 தேதிகளில் கல்பாக்கத்திலும் ‘நம் கல்வி நம் உரிமை’ புத்தகத்துக்கான வாசிப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. கல்பாக்கம் வாசிப்பு முகாமில் கூடவே, சு.கி ஜெயகரன் எழுதிய ‘மூதாதையரைத் தேடி…’ என்ற நூலும் இடம்பெறுகிறது.

இந்த முகாம்களில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் இந்த எண்களைத் தொடர்புகொள்ளலாம்: 7598225040, 9488011128 (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்); 9443481818, 9894842678, 9444746260 (புதுச்சேரி அறிவியல் இயக்கம்).

இந்த வாசிப்பு முகாம்கள் நல்ல தொடக்கம். நிற்கக் கூடாத தொடரோட்டம் இது!


நன்றி ;- தி இந்து

Friday, November 20, 2015

"நான் இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்!" -இரா. கார்த்திகேயன்




கரகர குரலில் ‘வாக்கி டாக்கி' தொடர்ந்து ஒலிக்கிறது... ‘ங்கொய்ய்ய்..' என்று ஓலமிட்டுக் கொண்டு கடக்கும்’ காவல்துறை உங்கள் நண்பன்' ஜீப்... கைகளில் புகார்களோடு மக்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும்... எந்த நேரத்திலும் அங்கு ஒரு ‘ஆக் ஷன்' காட்சி நடக்கலாம் என்கிற அளவில் அவரின் அலுவலகம் அவ்வளவு பிஸி!

திருப்பூர் மாநகரக் காவல்துறை துணை ஆணையராக இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்றுள்ள திருநாவுக்கரசுவுக்கு தன்னம்பிக்கை நூலாசிரியர் என்ற இன்னொரு முகமும் உண்டு.

அவர் எழுதிய முதல் படைப்பான ‘உன்னுள் யுத்தம் செய்’ புத்தகம் இளைஞர்களிடையே ‘டாக் ஆஃப் தி டவுன்!'.

புத்தகம் வெளியான சில நாட்க‌ளிலேயே முதல் பதிப்பு விற்றுத்தீர, இரண்டாம் பதிப்பு தயாராகி, தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஆளுமைத் திறன் குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளின் மேடைகளை அலங்கரித்தவர்.

மாணவர்கள் என்றில்லை, அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட அவரது பேச்சுக்கு ரசிகர்கள். சமீபத்தில் இவரது பணியிட மாற்றம் ஏற்படுத்திய வருத்தத்தில், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பலரும் தங்களது ஃபுரொபைலில் இவரின் ஒளிப்படத்தை வைத்து, இவருக்குப் பிரியாவிடை தந்தனர்.

"அப்பா, அம்மா இரண்டு பேரும் ஆசிரியர்கள். தேனி மாவட்டம் ரெங்கநாதபுரம்தான் சொந்த ஊர். வைகை அணை கட்டும்போது, கூலிக்கு மண் அள்ளியவர் என் தந்தை. பின்னர் கஷ்டப்பட்டுப் படித்து, உழைத்து அரசுப் பள்ளி ஆசிரியராகி எங்களை வழிநடத்தியவர்.

பத்தாம் வகுப்புவரை ரெங்கசமுத்திரம் அரசுப் பள்ளியிலும், பிளஸ் டூ படிப்பை, பள்ளியின் முதல் மாணவனாக ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தேன்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் படித்தேன். உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தக் கற்றுக்கொண்டது இங்கேதான்.

கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், இயற்பியல் துறைப் பேராசிரியர் முருகேசன், முதுநிலை படிக்கும்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ராமச்சந்திரன் ஆகிய மூவரும் கல்லூரிக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தவர்கள்.

வாழ்க்கையில் யதார்த்தமாக நடக்கும் ஒரு சம்பவம் நம் வாழ்க்கைக்கே பெரிய அடித்தளமாக அமைந்துவிடும். அந்த வகையில், கல்லூரிக் காலத்தில் பார்வையாளனாகச் சென்ற வினாடி வினா போட்டிக்கு, போட்டியாளர்கள் தவறவிடும் பதில்களை, பார்வையாளர்கள் சொல்லலாம். அப்படி, அங்கு நிறைய கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். அப்போது அங்கு இருந்த செல்லதுரை என்பவர், ‘உங்களது அறிவைப் பொதுத்தேர்வுகளுக்குப் பயன்படுத்துங்கள்' என்றார்.

சட்டம் பயின்றுகொண்டே பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து எழுதினேன். குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றேன். டி.எஸ்.பி.யாக விருதுநகர் மாவட்டம் வில்லிப்புத்தூரில் பணியைத் தொடங்கினேன். வீரப்பனைத் தேடி, சிறப்பு அதிரடிப்படை முகாமில் 7 ஆண்டுகள் காட்டிற்குள்ளேயே வாழ்ந்தேன். வால்டர் தேவாரம், விஜயகுமார், நட்ராஜ் ஆகியோரின் கீழ் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. முதல்வரின் வீரதீரச் செயல் விருதுடன், பதவி உயர்வும் கிடைத்தது. 2015-ம் ஆண்டு ஐ.பி.எஸ். ஆகப் பதவி உயர்வு பெற்றேன்.

சிறுவயதில் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் தொடர்ந்து படிப்பேன். திருக்குறளுக்குப் பலர் எழுதிய‌ உரையைப் படித்திருக்கிறேன். இவையே என் புத்தக வாசிப்பை விரிவுபடுத்தின‌. தமிழ் ஆர்வத்தைத் தூண்டி, பலரின் புத்தகங்களைத் தேடிப் படிக்க வைத்தன‌.

நான் படித்த காலத்தில் என்னைவிட நன்றாகப் படித்த மாணவர்கள் சிலர், பின்னாளில் வாழ்வின் மோசமான நிலைக்குச் சென்றதைப் பல்வேறு சம்பவங்கள் மூலம் உணர்ந்தேன். மேலும் இன்றைக்குக் கல்லூரி மாணவர்கள் பலரும் தங்கள் வாழ்வின் பொன்னான நேரத்தை கேளிக்கையிலும் வெட்டிப்பேச்சிலும் பொழுதுபோக்கிலும் செலுத்துவதால் லட்சியப் பாதை சிதறுவதை என் கண் முன்னே கண்டிருக்கிறேன்.

அப்படிப்பட்டவர்களுக்காகத்தான், ‘உன்னுள் யுத்தம் செய்' எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினேன்.

‘ஒவ்வொருவரிடமும் உள்ள தீமையை எதிர்த்து, நல்லதை உயர்த்தவும் எதிர்மறை எண்ணத்தை அழிக்கவும், இந்தப் புத்தகம் பயன்படுவதாக' இதைப் படித்த பலரும் சொல்கிறார்கள். இந்தப் புத்தகம் முன்பே கிடைத்திருந்தால், என் வாழ்க்கைப் பாதை, எப்போதோ மாறியிருக்கும் என என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பாராட்டினார்.

புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு, திருக்குறளோடு தன்னம்பிக்கைக் கதைகளைச் சொல்லும்விதமாக, ‘ஒரு குறள் ஒரு பொருள்' எனும் தலைப்பில் தமிழ்வாசல் பதிப்பகத்தின் மாத இதழில் எழுதி வருகிறேன்.

என் காவல் பணிகளுக்கிடையே எழுத்துப் பணிகளையும் கவனிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம், மனைவி லாவண்யா ஷோபனா. ‘இளைஞர்களைச் செதுக்கும் ஒரு உளி' என அவரே இந்தப் புத்தகத்தைப் பாராட்டிவிட்டார்!" என்று சொல்லிச் சிரித்துக் கைகுலுக்குகிறார் இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ், கம்பீரம் குறையாமல்!

Keywords: புத்தக அறிமுகம், நம்பிக்கை கதை, ஐபிஎஸ் பயிற்சி, ஐபிஎஸ் வழிகாட்டி, காவல்துறை துணை ஆணையர், தன்னம்பிக்கை நூலாசிரியர் உன்னுள் யுத்தம் செய்


நன்றி :- தி இந்து

என்னைப் பற்றி...சமஸ்

[samas.stamp.jpg]
04.12.1979-ல் பிறந்தேன். பூர்வீகம் மன்னார்குடி. தற்போது சென்னையில் வசிக்கிறேன்.பத்திரிகையாளன். இந்தியன் இனி பத்திரிகையில் தொடங்கிய பயணம் தினமலர், தினமணி, ஆனந்த விகடன், புதிய தலைமுறைத் தொலைக்காட்சி எனக் கடந்து இப்போது ‘தி இந்து’ தமிழில். சொல்லிக்கொள்ள வேறொன்றும் இல்லை. எந்த ஓர் எழுத்தாளனுக்கும் ஒரு குறிப்பேடு இருக்கும் அல்லவா; அவனுடைய எல்லா எழுத்துகளையும் சுமந்துகொண்டு? அப்படி என்னுடைய இன்னொரு குறிப்பேடாக இந்த வலைப்பூவைச் சொல்லலாம். இதுவரை நான் என் எழுத்துகளைச் சேகரித்துவைக்கவில்லை. இனி இந்த வலைப்பூ மூலம் அதைச் செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். இந்த வலைப்பூவில் இடம்பெற்றுள்ள படைப்புகள் யாவும் பத்திரிகைகளில் எடிட் செய்யப்படாத முழு வடிவமாகும்.கூடுமானவரை அவை எழுதப்பட்ட காலக்கிரமப்படி வரிசைப்படுத்தப்பட்டுள்ளன. படைப்பின் கீழுள்ள ஆண்டு,அது எழுதப்பட்ட ஆண்டையும் (வெளியான ஆண்டு அல்ல) பத்திரிகையின் பெயர் இதன் எடிட் செய்யப்பட வடிவம் பிரசுரமான பத்திரிகையையும் குறிக்கும். படிப்பவர்கள் கருத்தெழுதுங்கள்; காத்திருக்கிறேன். தொடர்புக்கு... 

writersamas@gmail.com

சமஸின் முக்கியமான நூல்கள்

சமஸின் முக்கியமான நூல்கள் 
சமஸ் எழுதிய ‘யாருடைய எலிகள் நாம்?’, ‘சாப்பாட்டுப் புராணம்’ இரு நூல்களையும் ரூ.300 சலுகை விலையில் பெற அணுகுங்கள்: samasbooks@gmail.com; 9444204501

வாங்கிவிட்டீர்களா?

வாங்கிவிட்டீர்களா? 

http://writersamas.blogspot.in/