Saturday, November 21, 2015

முன்னோடி இந்தியர்கள் ஓர் அறிமுகம்!

ராமச்சந்திர குஹா
ராமச்சந்திர குஹா




சமகால இந்திய வரலாற்றாசிரியர்களில் தனித்துவம் வாய்ந்தவர் ராமச்சந்திர குஹா. அவர் எழுதிய ‘இந்திய வரலாறு: காந்திக்குப் பிறகு’, சுதந்திரம் பெற்ற பிறகான இந்தியாவின் மிகச் சிறந்த வரலாறு. அந்தப் புத்தகத்தை அடுத்து அவர் தொகுத்து வெளியிட்ட ‘நவீன இந்தியாவின் சிற்பிகள்’ (மேக்கர்ஸ் ஆஃப் மாடர்ன் இந்தியா), இன்றைய இந்தியா எப்படி உருவாகியிருக்கிறதோ அதற்குக் காரணமான 19 ஆளுமைகளின் எழுத்துக்களிலிருந்து முக்கியமான பகுதிகளையும், கூடவே அவர்களைப் பற்றிய நடுநிலையான அறிமுகத்தையும் தருகிறது.

‘உலகிலேயே மிகவும் ஆர்வத்தைத் தூண்டும் நாடு’ என்று குஹா கருதும் இந்தியாவுக்கு அந்தப் பண்பு வருவதற்குக் காரணமே ஈடிணையற்ற அதன் பன்மைத்தன்மைதான். ஆகவே, அந்தப் பன்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும் ஆளுமைகளைக் கொடுக்க வேண்டியதும் இது போன்ற ஒரு புத்தகத்தின் தலையாய கடமை. அந்தக் கடமையை அழகுற ஆற்றியிருக்கிறார் குஹா.

நவீன இந்தியாவின் முதல் சீர்த்திருத்தவாதி ராஜாராம் மோகன்ராய், இஸ்லாமிய சீர்திருத்தவாதி சையது அகமது கான், சமூகப் போராளி ஜோதிராவ் புலே, விளிம்பு நிலைப் பெண்ணியவாதியான தாராபாய் ஷிண்டே, தீவிர தேசியவாதி திலகர், மிதவாதி கோகலே, தேசத் தந்தை காந்தி, முதல் பிரதமர் நேரு, சமூக நீதிப் புரட்சியாளர் அம்பேத்கர், புரட்சிகர சீர்திருத்தவாதி பெரியார் என்று நவீன இந்திய வரலாற்றின் மாறுபட்ட போக்குகளைச் சேர்ந்தவர்களை இந்த நூலில் பிரதிநிதித்துவப்படுத்தியிருக்கிறார் குஹா.

கூடவே, இந்துத்துவ மேலாதிக்கவாதி எம்.எஸ். கோல்வல்கர், பாகிஸ்தானின் தந்தை என்று அழைக்கப்பட்டாலும் இந்திய சுதந்திரப் போராட்டத்தோடு பிரிக்க முடியாதவரான ஜின்னா, ஆங்கிலேயராக இருந்தாலும் இந்தியாவில் வந்து காந்தியால் ஈர்க்கப்பட்டு, பழங்குடியினருக்காகத் தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக்கொண்ட வெரியர் எல்வின் என்று இப்படிப்பட்ட விசித்திரமான பன்மைத்தன்மையை இந்த நூலில் குஹா பிரதிபலிக்கச் செய்திருக்கிறார்.

முக்கியமான இந்த நூலை வாசிப்புக்கு உகந்த விதத்தில் வி. கிருஷ்ணமூர்த்தி தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்.

நூலிலிருந்து

ஜின்னா:

இந்தியாவில் பெரும்பான்மையினரின் தேசமும் சிறுபான்மையினரின் தேசமும் உள்ளன என்ற உண்மையை ஏற்றுக்கொண்டால், பெரும்பான்மையை அடிப்படையாகக்கொண்டு அமையும் நாடாளுமன்ற ஆட்சியில் பெரும்பான்மையினரின் ஆட்சியே அமையும் என்பதே உண்மை.

அம்பேத்கர்:

சாதிக் கட்டுப்பாடுகளை நீக்கினால் மட்டும் தீண்டாமையை அடியோடு ஒழித்துவிட முடியாது… வீட்டுக்குள்ளும் மனித மனதுக்குள்ளும் அது தொடர்ந்துகொண்டுதான் இருக்கும். அதனை முழுதாகத் துடைத்து நீக்க ஒரே வழி கலப்புத் திருமணம்தான்.

காந்தி:

இன்று உலகில் எண்ணற்ற மக்கள் உயிரோடிருக்கிறார்கள் என்றால் அதன் பொருள் உலகம் தொடர்வது ஆயுத பலத்தினால் அல்ல. மாறாக உண்மை அல்லது அன்பு ஆகியவற்றின் பலத்தினால்தான் என்று பொருள். இத்தனை யுத்தங்கள் நடந்த பின்னரும் உலகம் அழியவில்லை என்பதே இந்த சக்திகளின் மறுக்க முடியாத வெற்றி.

கமலாதேவி சட்டோபாத்யாய:

பெண்ணிய இயக்கமானது ஆணைப் போல் நகலெடுக்கவோ ஆணுக்கு எதிராகப் போர் தொடுக்கவோ சொல்லவில்லை. பெண்களுக்குத் தங்கள் பலங்களை அறியத் தருவதும் எதிர்பால் மத்தியில் ஒருவித மரியாதையை வென்றெடுப்பதுமே அதன் நோக்கமாகும்.

நவீன இந்தியாவின் சிற்பிகள்

தொகுப்பாசிரியர்: ராமச்சந்திர குஹா

தமிழில்: வி. கிருஷ்ணமூர்த்தி

விலை: ரூ. 400

வெளியீடு: கிழக்கு பதிப்பகம், சென்னை-14

தொலைபேசி: 044-4200 9603

மின்னஞ்சல்: support@nhm.in

Keywords: முன்னோடி, இந்தியர்கள், ஓர் அறிமுகம், நூல் அறிமுகம், புத்தகம்

நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment