விடுதலைப் புலிகளுக்கும் சிங்கள ராணுவத்துக்கும்
இடையிலான போரில்
கட்டாயமாக உட்படுத்தப்பட்டு,
பிறகு மீட்கப்பட்டு மறுவாழ்வு முகாம்களில் உள்ள சிறார்கள்
பலரின் கவிதைகள், ஓவியங்களைத் தொகுத்து
ஒரு புத்தகமாகச் சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியிட்டார்
இலங்கையைச் சேர்ந்த மனநல மருத்துவர் எஸ். சிவதாஸ்
சிறார்களின் எதிர்கால நம்பிக்கை
இந்தக் கவிதைகளையும் ஓவியங்களையும் பார்க்கும் போது எல்லா சோகங்களையும் இழப்புகளையும் மீறி அந்தச் சிறார்களின் நம்பிக்கை துலக்கமாகத் தெரிகிறது. அந்த முகாம்களில் வாழும் சிறார்களில் அனைவரும் தங்கள் குடும்பத்தினரில் ஒருவரையாவது இழந்தவர்கள்; வீடிழந்து, உறவிழந்து, வாழ்விழந்து தங்களுக்கு எந்தவிதத்திலும் பொறுப்பில்லாத பெரும் தவறுக்கு பலியாகி இன்று நிற்பவர்கள். சற்று பிசகினாலும்கூட வளர்ந்த பிறகு அவர்கள் அவநம்பிக்கையாளர்களாக உருமாறிவிடும் வாய்ப்புகள் நிறைய இருக்கின்றன. அப்படி ஏதும் நிகழ்ந்துவிடாமல் அந்தச் சிறார்களைக் காக்கும் பொறுப்பு அந்தச் சமூகத்தின் பெரியவர்களையும் தலைவர்களையுமே சார்ந்தது. அப்படிப்பட்ட பொறுப்புணர்வு கொண்டவர்களுள் ஒருவரான டாக்டர் எஸ். சிவதாஸ் பாராட்டுக்குரியவர்.
இந்த நூலை, இதில் உள்ள படைப்புகளை, வளரும் கவிஞர்களின், ஓவியர்களின் ஆரம்ப கால முயற்சியாகவே பார்க்கவேண்டும். எந்தச் சூழலில் அவர்கள் இப்படிப்பட்ட படைப்புகளைப் படைத்திருக்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்க வேண்டும். இந்த நூல் உருவாகிய விதத்தை டாக்டர் எஸ். சிவதாஸ் சொல்கிறார்.
“ஒரு நாள் தம்பி கதன் என்னிடம் தனது கவிதைகள் எல்லாவற்றையும் தொகுத்துத் தந்து 'நான் விபுலானந்தர் பிறந்த காரைதீவினை பிறப்பிடமாக கொண்டவன், நான் கவிஞனாக மிளிர வேண்டும், இவற்றைப் பிரசுரிக்க நீங்கள் உதவ வேண்டும்' என வினயமாகக் கேட்டுக்கொண்டான். மேலும் பலர் ஓவியங்களைக் காட்சிக்கு வைக்குமாறும் தங்களுக்கு இசைக்கருவி வாங்கித் தருமாறு கேட்டனர். இவற்றுக்கு ஆவன செய்வதாகக் கூறிவிட்டு வந்தேன். மெல்ல மெல்ல எனது பணி இவர்களது நலனை மையமாகக் கொண்டு செயற்படத் தொடங்கியது. அதற்கு வளமாக சர்வதேச சிறுவர் தினத்தைப் பயன்படுத்திக்கொண்டேன். 'வானவில்' என்ற பெயரில் ஓவியக் கண்காட்சியினை ஏற்பாடு செய்திருந்தேன். அதில் போரில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்கள் மட்டுமல்லாமல், இடம்பெயர்ந்து முகாம்களில் வாழும் சிறார்கள் மற்றும் சிறுவர் காப்பகங்களில் வாழும் சிறார்களினுடையவை என நூற்றுக்கு மேற்பட்ட ஓவியங்களும், என்னால் முகாம்களில் எடுக்கப்பட்ட சிறார்களின் ஒளிப்படங்கள் சிலவற்றையும் காட்சிப்படுத்தினேன். இது பலருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியது. அத்துடன் எமது நடவடிக்கைகளுக்கான அங்கீகாரமும் கிடைக்கப்பெற்றதுடன் என்னுள் எதிர்காலம் பற்றி நம்பிக்கையையும் விதைத்தது. அந்த ஒளிப்படங்களில் சில இந்நூலில் இடம்பெறுகின்றன. அவற்றுக்கு இசைவான சிறார்களின் கவிதைகளும் இடம்பெறுகின்றன. எமது அந்த நிகழ்விற்கான அழைப்பிதழ் கூட போரில் ஈடுபடுத்தப்பட்ட சிறார்களின் ஒருவனது வண்ண ஓவியத்திலேயே அமைந்திருந்தது. அந்த ஓவியமும்கூட இந் நூலில் இடம்பெற்றுள்ளது.''
சத்தியமும் மகிழ்ச்சியும்
ஒரு மகத்தான கவிஞனின் தொகுப்பு வெளிவந்து அதனால் ஒரு மொழிக்குக் கிடைக்கும் நன்மையைவிட இது போன்ற புத்தகங்களால் கிடைக்கக் கூடிய சமூக நன்மை மிகவும் அதிகம் என்பதே இதுபோன்ற முயற்சிகளை மிகவும் முக்கியமானவையாக ஆக்குகிறது. போரால் சகலத்தையும் இழந்து தவித்துக்கொண்டிருக்கும் அந்தச் சிறார்களுக்கு இந்தப் புத்தகம் எவ்வளவு மகிழ்ச்சியையும் நம்பிக்கை யையும் தந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகளை எழுதிய சிறார்கள் நாளைக்கு மகத்தான கவிஞர் களாகவும் உருவாகக் கூடும். அதற்கான கவித்துவத்தைவிட சத்தியமும் நம்பிக்கையும் மிகுதியாகக் காணப்படுகிறது இந்தத் தொகுப்பில்.
அதேசமயம், நல்ல வடிவமைப்பில் உருவாகியிருக்கும் இந்தப் புத்தகத்தில் பிழை திருத்தத்தில் சற்று கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
அழிய முடியாத கவிதைகள்
கோபுரங்களும் குடிமனைகளும்
காணாமல்போனது
இரத்தத்துளிகளே எங்கும் படிவுகளாய்
சந்திர சூரிய உடல்கள்
உயிரற்றுக்கிடந்தது
உறைந்த காற்றில் கவிவடித்து
நாங்கள் சுவாசித்தபடி..
அத்தனையும் சோகங்களாய்
எம்மிலே பதிய
சுமக்க முடியாத சிலுவை ஒன்றை
சுமந்து கொண்டிருந்தோம்.
அமைதி
துப்பாக்கிகள்
மனுக்களுடன் நிற்கின்றன,
தன்னைப் பற்றும் கைகளை
வெறித்துப் பார்த்தபடி.....
கண்களில் உலவுகிறது
அமைதி,
சுடுகாட்டு சாம்பலை
இன்று உட்கொண்டு
உயிர் வாழ்ந்த படி.
- புத்தகம் பெற
தொடர்புகொள்ள: sivathas28@gamil.com
Keywords: புரிந்துகொள்ளுங்கள், நாங்கள் சிறுவர்கள், கவிதைகள், ஓவியங்கள், சிறார்கள், நம்பிக்கை
தி இந்து
No comments:
Post a Comment