Tuesday, November 3, 2015

குடும்பத்தைப் புரியவைக்கும் புத்தகம்



விஞ்ஞானி டார்வின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி கண்டுபிடித்த தத்துவம் உயிரியல் அறிவியல் துறையில் புது வெளிச்சத்தைப் பாய்ச்சியது. கம்யூனிஸ்ட் தத்துவத்தை உருவாக்கியவரான காரல் மார்க்ஸ் உபரி மதிப்பைப் பற்றிக் கண்டுபிடித்த தத்துவம் அரசியல் - பொருளாதாரத் துறையில் தலைகீழ் மாற்றத்தை ஏற்படுத்தியது. காரல் மார்க்ஸின் நண்பரான ஏங்கெல்ஸின் ‘குடும்பம், தனிச் சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம்’ என்ற இந்தப் புத்தகம் மனித குல வரலாற்றை அறிவியல் ரீதியில் புரிந்துகொள்ள உதவியது. அதற்கு முன்பிருந்த கருத்தாக்கங்களை புரட்டிப்போட்ட சாதனைகளை இந்த புத்தகங்கள் சாதித்துள்ளன.

காரல் மார்க்ஸ் மறைவுக்குப் பின், அவர் எழுதி வைத்திருந்த குறிப்புகளிலிருந்து, ஏங்கெல்ஸ் இந்த நூலை 1884-ல் ஜெர்மன் மொழியில் எழுதினார். 1949- ல் ருஷ்ய மொழிபெயர்ப்பும், 1972-ல் ஆங்கில மொழிபெயர்ப்பும் வெளிவந்தன. பின்னர் பல மொழிகளிலும் இந்த நூல் வெளிவந்தது.

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவை இல்லாத காலங்களும் இருந்துள்ளன என்பதை இந்த நூல் பதிவு செய்கிறது. மார்கனின் ‘பண்டைய சமுதாயம்’ என்ற நூல் இந்த நூலுக்கு அடிப்படையாக அமைந்துள்ளது.

ஆண்-பெண் உறவை இந்த நூல் விரிவாக அலசுகிறது. வரைமுறையற்ற புணர்ச்சி, ஒரு தார மணம், பலதார மணம், பல கணவர் மணம், குழு மண முறை, இணை மண முறை ஆகியவற்றின் மூலமாக இந்த உறவு மேலான வடிவத்தை நோக்கி நகர்ந்துகொண்டே இருப்பதைத் இந்த நூல் சித்தரிக்கிறது. இந்த முறைகளிலும் காதல் புறக்கணிக்கப்பட்டதை இது விவாதிக்கிறது. சமூகத்தில் அறவே மறுக்கப்பட்ட காதல் இலக்கியங்களில் போற்றப்பட்டதையும் இது சுட்டிக்காட்டுகிறது. ஒரு சமத்துவ சமூகம் உருவாகும்போதுதான் ஒடுக்குமுறையும் அடக்குமுறையும் இல்லாத சுதந்திரக்காதல் அனைவருக்கும் சாத்தியப்படும் என இந்த நூல் இறுதியாகக் கூறுகிறது.

தனிச் சொத்து தோன்றியவுடன் அதற்கு முந்தைய புராதன தாய்வழிச் சமூகம் சிதைக்கப்பட்டு, ஆணாதிக்கத் தந்தை வழிச்சமூகம் உருவான வரலாற்றின் பகுதி இதில் விவரிக்கப்படுகிறது. அதனால், பெண் அடிமையாக்கப்பட்ட நிகழ்வுப் போக்குகளும் விவரிக்கப்படுகின்றன. கூலி உழைப்பு உருவானபோது அதன்கூடவே பாலியல் தொழிலும் தோன்றியது.

ஒருதார மண முறையில் கற்பு எனும் ஒழுக்கம் பெண்ணுக்கு மட்டும் கற்பிக்கப்பட்டதால் பொது மகளிர் முறை ஆண்களுக்கு வடிகாலாக அமைந்தது. இதற்கு எதிராகப் பெண்கள் போர்க்கொடி தூக்கிவந்துள்ளனர். ஒருதார மண முறை பெண்களைச் சமூக உற்பத்தியிலிருந்து விலக்கி வைத்து, அவர்களை கூண்டுப் பறவைகளாக்கியது.

உற்பத்திச் சாதனங்கள் பொதுவுடைமையாகும்போது, கூலி உழைப்பும் பாட்டாளி வர்க்கமும் மறைந்துவிடுவதைப்போல் பாலியல் தொழிலும் மறைந்துபோகும். அத்துடன் ஒருதார மணம் ஆணுக்கும் என்றாகிவிடும். ஏனெனில் பொதுவுடைமைச் சமூகத்தில் தனிப்பட்ட குடும்பம் சமுதாயத்தின் பொருளாதார அலகாக இருப்பதும் முடிவுக்கு வரும். காதல் உயர்ந்த நிலையில் போற்றப்படும்.

எந்த அமைப்பும் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கு எதிராக நிற்கும்போது, அழியும். அவ்விடத்தில் புதிய அமைப்பு உருவாகும் என்பது மார்க்சியத்தின் கோட்பாடு. அந்தக் கோட்பாட்டை இந்த நூல் வலுப்படுத்துகிறது. இந்தக் கோட்பாடு ஒருதார மண முறைக்கும் பொருந்தக்கூடும். ஏனெனில், ஒருதார மணமுறை உலகில் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே உருவான முதல் வேலைப் பிரிவினை.

பண்டைய குலங்கள் எனும் சமூகக்குழுக்கள் தேவைக்குப் பொருத்தமற்றதாகி, உற்பத்தி சக்திகளுடன் முரண்பட்டு நிற்கும்போது, புதிதாகத் தோன்றிய வர்க்கப் பிரிவினையை நிரந்தரமாக்கவும், மனிதனை மனிதன் சுரண்டுவதை நிரந்தரப்படுத்தவும், உற்பத்திசக்திகளின் வளர்ச்சியைத் தூண்டவுமே அரசு என்ற அமைப்பு உதித்தது. முடிவில் வர்க்கங்களற்ற சமூகம் நிறுவப்படும்.

அப்போது, இந்த அரசின் தேவை சமூகத்துக்குத் தேவையில்லாமல் போய் அரசு உலர்ந்து உதிர்ந்துபோகும் என்று இந்த நூல் தெளிவுபடுத்துகிறது. ஒரு நாட்டின் வரலாற்றைப் புரிந்துகொள்ள இந்த நூல் துணையாக இருக்கும்.

தொடர்புக்கு: veeveekalai@gmail.com

குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் 
பிரடெரிக் ஏங்கெல்ஸ் 
வெளியீடு : நியூசெஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிமிடெட் 
அம்பத்தூர், சென்னை 98 
தொடர்புக்கு: 26251968, 26359906 
விலை : ரூபாய்.150

சோவியத் யூனியன் இருந்தபோது புத்தகத்தின் விலை மிகமிகக் குறைவு.

நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment