Thursday, October 15, 2015

நம் மருத்துவத்துக்கு நோபல் கிடைக்குமா? -பி.ஏ.கிருஷ்ணன்



சித்த மருத்துவம் பற்றிய தெளிவான புத்தகங்கள் இல்லாததற்கு மத்திய - மாநில அரசுகளே காரணம்.

இந்த வருடம் மருத்துவத்துக்கான நோபல் பரிசு சீனத்தைச் சேர்ந்த டு யுயு என்ற 85 வயது மூதாட்டிக்குக் கிடைத்திருக்கிறது. சீனாவுக்கு அறிவியல் துறையில் கிடைத்திருக்கும் முதல் பரிசு இது. மலேரியாவுக்கு எதிரான மருந்தைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுகிறது. டு யுயு, ஆர்டிமிசியா அனுவா (Artemisia Annua) என்ற செடியிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட ஆர்டிமிசினின் என்ற மலேரியா ஒழிப்புச் செயலாற்றும் கூற்றை (active component) கண்டுபிடித்து, அதைப் பெருமளவில் தயாரிக்கும் வழிமுறையை வகுத்ததற்காகப் பரிசு பெறுகிறார்.

ஆர்டிமிசியா என்ற பெயருடையவர் கிரேக்க வரலாற்றில் புகழ் பெற்ற பெண் வீரர். கப்பற்படைத் தலைவர். உலக ஓவிய வரலாற்றிலும் ஆர்டிமிசியா என்ற பெண் ஓவியருக்கு முக்கியமான இடம் இருக்கிறது. எனவே, ஆர்டிமிசினினைக் கண்டுபிடித்தவரும் ஒரு பெண்ணாக இருப்பது மிகவும் பொருத்தம்.

கண்டுபிடிக்கப்பட்ட கதை

வியட்நாமில் நடந்த போரில், போர்க்களத்தில் மடிந்த வீர்ர்களை விட மலேரியாவால் மடிந்த வீரர்களே அதிமாக இருந்தார்கள். கொய்னா அதிக பலனை அளிக்கவில்லை. ஹோசிமின் மாவோவைக் கேட்டுக்கொண்டதன் பேரில் சீனாவில் மலேரியாவுக்கு எதிரான ஆராய்ச்சி தீவிரமாக நடந்தது. ஆர்டிமிசியா என்று அறியப்படும் செடிக்கு மலேரியா எதிர்ப்புத் தன்மை இருப்பதை சீனர்கள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அறிந்திருந்தனர். 2400 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சீன மருத்துவப் புத்தகம் அதைப் பற்றிப் பேசுகிறது. ஆனால், செடியின் உண்மையான பயன் சரிவரத் தெரியவில்லை. அதைப் பயன்படுத்தி சிலர் குணமடைந்தார்கள். பலர் குணமடையவில்லை. டு யுயு ஆர்டிமிசினின் என்ற செயலாற்றும் கூறைச் செடியிலிருந்து பிரித்தெடுத்தார். செயலாற்றும் கூறைப் பிரித்தெடுப்பதென்பது சாதாரணமான செயலல்ல. பல வருடங்கள் சோதனைச்சாலையில் உழைக்க வேண்டும். இந்த உழைப்பின் வெற்றிக்குத்தான் பரிசு.

பரிசு தரும் செய்திகள்

இந்தப் பரிசு, இரு முக்கியமான செய்திகளை நமக்குத் தருகிறது. முதலாவது, தற்கால அறிவியலுக்கு மேற்கத்திய மருத்துவ முறை, பாரம்பரிய மருத்துவ முறை என்ற பாகுபாடெல்லாம் கிடையாது. பாரம்பரிய மருத்துவமுறையில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதாலேயே அதைச் சந்தேகக் கண்ணோடு நோக்குவதும் கிடையாது. இரண்டாவது, எந்த மருந்தையும் தெளிவாக வகுக்கப்பட்ட வரைமுறைகளின் கீழ் பரிசோதனை செய்து, அதன் வீரியத்தை உறுதிசெய்தால் அதைத் தற்கால அறிவியல் நிச்சயம் ஏற்றுக்கொள்ளும்.

நமது நிலை என்ன?

ஆர்டிமிசினின் கண்டுபிடித்த பிறகு டு யுயு பல வருடங்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். குறிப்பிடத்தக்க வெற்றி ஏதும் கிட்டவில்லை என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். தாவரத்திலிருந்து புது மருந்து கண்டுபிடிப்பு என்பது பல ஆண்டுகளுக்கு ஒரு முறை நடப்பது. அதற்கு மிகவும் தீவிரமாக முயற்சி செய்ய வேண்டும்.

இந்தியாவிலும் ஆயுர்வேத, சித்த மருந்துகளின் செயலாற்றும் கூறுகளைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் பல விஞ்ஞானிகள் ஈடுபட்டிருக்கிறார்கள். இவர்கள் வெற்றிபெரும் வாய்ப்பு இருக்கிறதா? ஆயுர்வேதத்தை அப்புறம் பார்க்கலாம். தமிழ்நாட்டுக்கே சொந்தமான சித்த மருத்துவத்தில் என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போம்.

பப்மெட் (pubmed) என்ற வலைத் தேடல் கருவி ஒன்று இருக்கிறது. ஒவ்வொரு துறையிலும் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எத்தனை பதிப்பிக்கப்பட்டிருக்கின்றன. எந்த அறிவியல் பத்திரிகையில் பதிக்கப்பட்டிருக் கின்றன என்பதை அது நமக்குத் துல்லியமாகத் தெரிவிக்கின்றது. இதில் தேடினால், சித்த மருத்துவத்தில் கடந்த பத்து ஆண்டுகளில் பிரசுரமான ஆராய்ச்சிக் கட்டுரைகள் 153 மட்டுமே. ஆயுர்வேதத்தில் 2,471 ஆராய்ச்சிக் கட்டுரைகள். இதே நேரத்தில் சீனப் பாரம்பரிய மருத்துவக் கட்டுரைகள் 32,000-க்கும் மேல் வந்திருக்கின்றன.

சித்த மருத்துவக் கட்டுரைகளை மேலும் ஆராய்ந்தால், எலி போன்ற மற்ற உயிரினங்களின் மீது செலுத்திச் செய்யப்பட்ட மருந்துப் பரிசோதனைகள் பற்றிய கட்டுரைகள் 45 மட்டுமே. இவற்றில் சில கட்டுரைகள் சித்த மருந்தின் விஷத் தன்மையைப் பற்றியவை.

சித்த மருத்துவ ஆராய்ச்சிக் கட்டுரைகள் வருகின்றன என்பதே வரவேற்கத்தக்க செய்திதான். ஆனால், ஏன் ஆராய்ச்சிக் கட்டுரைகள் மிகக் குறைவாக இருக்கின்றன? ஏன் அவை குறிப்பிடத்தக்கவையாக இல்லை? இதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. சிலவற்றை ஆராய்வோம்.

ஆயுஷ் வலைதளம்

மத்திய அரசின் ஆயுஷ் வலைதளத்தில் எழுதப்பட்டிருக்கும் சித்த மருத்துவத்தின் வரலாற்றைப் படித்துப்பார்த்தால், அறிவியலுக்கும் இந்தத் துறையிலிருந்து அரசுக்கு ஆலோசனை அளிப்பவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையோ என்ற சந்தேகம் நமக்கு வரலாம். அது கூறுவதைக் கேளுங்கள்:

`பாரம்பரியம் சிவபெருமான் சித்த மருத்துவ முறையை பார்வதிக்கு அளித்தார் என்றும் அவர் அதை நந்தி தேவருக்கு அளிக்க, அவர் அவற்றைச் சித்தர்களுக்கு அளித்தார்' என்றும் சொல்கிறது.

`சித்தர்கள் அந்தக் காலத்தின் மிகப் பெரிய விஞ்ஞானிகள்.’ இப்படிச் சொல்லிவிட்டு இதையும் பேசுகிறது!

‘பாரம்பரியம் சித்த மருத்து முறையைக் கண்டுபிடித்தவர் அகத்தியர் என்று சொல்கிறது. அவர் எழுதிய புத்தகங்கள் இன்றும் மருத்துவத்துக்கும் அறுவை சிகிச்சைக்கும் பாட நூல்களாக இருக்கின்றன.’

வேறு எந்தத் தகவல்களும் இல்லாமல் ஒரு மருத்துவமுறையின் வரலாற்றை இப்படி எழுதி, அதை மத்தியஅரசு வலைதளத்தில் கூசாமல் பதிவுசெய்வது இந்தியாவில் மட்டுமே நடக்கக் கூடிய அதிசயம்.

உண்மையிலேயே பாட நூல்களின் நிலைமை என்ன?

சித்த மருத்துவ நண்பர் ஒருவரிடம் கேட்டதில் அவர் சொன்னது: ‘சித்த மருத்துவம்’, ‘நோய்களுக்குச் சித்தப் பரிகாரம்’என்று தமிழக அரசால் வெளியிடப்பட்ட இரண்டு நூல்கள் இருக்கின்றன. ஆனால், கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேல் பாடப்புத்தகங்களில் எந்த மாறுதலும் செய்யப்படவில்லை.

எல்லா மருந்து முறைகளுக்கும் மருந்தியல் குறிப்பு நூல் (pharmacopoeia) ஒன்று இருப்பது மிகவும் அவசியம். இந்த நூல் அந்தந்த முறைகளில் உபயோகிக்கப்படும் மருந்துகளைப் பற்றியும் அவற்றின் வேதியியல் கூறுகளைப் பற்றியும் விரிவான தகவல்களைத் தரும். சித்த மருத்துவத்தைப் பொறுத்தவரையில் இந்தப் புத்தகத்தின் முதல் பகுதி வெளிவந்திருக்கிறது. இரண்டாம் பகுதி, மூன்று வருடங்களுக்கு முன் பதிப்பிக்கப்பட்டு விட்டதாம். ஆனாலும் இன்னும் பொதுமக்களுக்கோ சித்த மருத்துவர்களுக்கோ கிடைப்பதில்லை என்று சொல்கிறார்கள். நான் பார்த்த அளவில் முதல் பகுதி 73 செடி, வேர், மரப்பட்டை, பழம் போன்றவற்றைப் பற்றிய குறிப்புகளை மட்டும் தருகிறது. அவற்றின் கலவைகளால் தயாரிக்கப்படும் மருந்துகளைப் பற்றி எந்தத் தகவலையும் தருவதில்லை. இது முழுமை பெறாத முயற்சி. எனவே, சித்த மருத்துவர்களுக்குச் சந்தேகம் வந்தால் அதைத் தீர்த்துக்கொள்வதற்கு எந்த நம்பகத்தன்மை கொண்ட புத்தகமும் கிடையாது என்பது தெளிவு.

இந்த நிலைமைக்கு மத்திய, மாநில அரசுகள் காரணம் என்றாலும், சித்த மருத்துவத்தில் இன்று முன்னிலையில் இருப்பவர்களும் முக்கியமான காரணம் என்று நான் சொல்லத் தயங்க மாட்டேன். படிப்பதற்குச் சரியான புத்தகங்கள் இல்லாமல், மருந்துகளின் பயன்களைப் பற்றிய சரியான குறிப்பு நூல் இல்லாமல் படித்து வெளியில் வரும் மாணவர்களிடம் ஆராய்ச்சியைப் பற்றிய தெளிவான புரிதல்களை எதிர்பார்ப்பது நியாயம் இல்லை. அவர்கள் முனைந்து ஆராய்ச்சியில் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கவும் முடியாது.

நோபல் பரிசை விடுங்கள். எந்தக் குறிப்பிடத்தக்க பரிசும் எட்டாத் தொலைவில்தான் இருக்கிறது.

- பி.ஏ. கிருஷ்ணன், ‘புலிநகக்கொன்றை’, ‘கலங்கிய நதி’ ஆகிய நாவல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: tigerclaw@gmail.com

நன்றி:-தி இந்து

No comments:

Post a Comment