கொறுக்கையூர் காரிநாயனார் என்பவரால் இயற்றப்பெற்ற நூல் கணக்கதிகாரம். இந்நூலை சிதம்பர முதலியார் 1902-ஆம் ஆண்டு பதிப்பித்து வழங்கியுள்ளார். அப்பதிப்பை அடியாகக்கொண்டு அக்காலக் கணக்கியலின் நுட்பங்களுள் ஒன்றாகிய எலுமிச்சம் பழக் கணக்கைக் காண்போம்.
வரதராசபுரம் என்ற நகரத்தில் ஒரு பணக்காரனுக்கு எலுமிச்சம் பழத்தோட்டம் இருந்தது. அத்தோட்டத்துக்கு ஐந்து வாயில்கள் உண்டு. ஒவ்வொரு வாயிலுக்கும் ஒவ்வொரு காவலராக ஐந்து காவல்காரர்கள் இருந்தனர். அவ்வூர் அரசன் நீராடச் சென்றபோது, அத்தோட்டத்தில் எலுமிச்சம்பழம் ஒன்றை அறுத்து வரும்படி ஊழியனுக்கு ஆணையிட்டான்.
ஊழியக்காரனைத் பழத்தோட்டக்காரன் தடுத்தான். அரச ஊழியன், காவல்காரனிடம் பின்வருமாறு உடன்படிக்கை செய்து கொண்டான். "நான் அறுத்துவரும் பழத்தில் உனக்குப் பாதி தந்து, என் பாகத்திலும் ஒரு பழம் தருகிறேன்' என்றான். காவல்காரன் இசைந்தான். மற்ற வாயில் காவல்காரர்களிடமும் இவ்வாறே உடன்படிக்கை செய்யப்பட்டது.
அரச ஊழியன் தோட்டத்தில் புகுந்து பழங்களை அறுத்து வந்து ஐந்து வாயில் காவலருக்கும் பாதி பாதி பகுத்துக் கொடுத்துவிட்டு, தன் பங்கிலும் ஒவ்வொரு பழம் கொடுத்துவிட்டு அரசனுக்கும் ஒரு பழம் கொடுத்துவிட்டான். அப்படியானால் அவன் அறுத்து வந்த பழங்கள் எத்தனை? - இதுதான் கணக்கு!
இதற்கான விடை: மேற்கணக்கின்படி அரச ஊழியன் அறுத்து வந்த பழங்களின் எண்ணிக்கை 94. விளக்கம்: தோட்டத்தில் நுழைந்த அரச ஊழியன் 94 பழங்களைப் பறித்துக் கொண்டான். முதல் வாயில்காரனுக்கு ஒப்பந்தப்படி பாதி பழம் (94-இல் பாதி) 47-ம், தன் பங்கில் ஒன்றுமாக (47+1) 48 பழம் தந்தான். மீதமுள்ள 46 பழங்களில் இரண்டாவது வாயிற்காரனுக்குப் பாதி விகிதப்படி 23-ம், தன் பங்கிற்கு ஒரு பழமுமாக 24 பழங்களைத் தந்தான். மீதமுள்ள 22 பழங்களில் மூன்றாவது வாயிற்காரனுக்குப் பாதி விகிதப்படி 11-ம், தன் பங்கிற்கு ஒரு பழமுமாக 12 பழங்களைத் தந்தான்.
மீதமுள்ள 10 பழங்களில் நான்காவது வாயிற்காரனுக்குப் பாதி விகிதப்படி 5-ம், தன் பங்கிற்கு ஒரு பழமுமாக 6 பழங்களைத் தந்தான். மீதமுள்ள 4 பழங்களில் ஐந்தாவது வாயிற்காரனுக்குப் பாதி விகிதப்படி 2-ம், தன் பங்கிற்கு ஒரு பழமுமாக 3 பழங்களைத் தந்தான். நிறைவாக எஞ்சிய ஒன்றை அரசனிடம் கொண்டு போய்க் கொடுத்தான்.
அரச ஊழியன் பறித்த 94 பழங்களின் கணக்கு விபரம் வருமாறு:
முதல் வாயிற் காரனுக்கு
இரண்டாம் வாயிற்காரனுக்கு
மூன்றாம் வாயிற்காரனுக்கு
நான்காம் வாயிற்காரனுக்கு
ஐந்தாம் வாயிற்காரனுக்கு
அரசனுக்கு
அறுத்த பழங்கள் மொத்தம் :
-முனைவர் அ. சிவபெருமான்
நன்றி :-தினமணி
நன்றி :-தினமணி
No comments:
Post a Comment