இரவு 11 மணிக்கு மேல், ரா.கி. ரங்கராஜன் "அண்ணாநகர் டைம்ஸ்' இதழில் "நாலு மூலை' என்ற தலைப்பில் எழுதிவந்த கட்டுரைகளின் தொகுப்பை "அல்லயன்ஸ்' பதிப்பகத்தார் வெளியிட்டிருப்பதாகக் கேள்விப்பட்டு மைலாப்பூர் சென்றேன். என்னைப் போலவே "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாசனுக்கும் "சோ' சார்தான் மானசீக குரு என்பதால், எனது நிலைமையைப் புரிந்து கொண்டு, அந்த இரவு வேளையிலும் தனது பதிப்பகத்தைத் திறந்து வைத்துக் காத்திருந்தார்.
ரா.கி. ரங்கராஜன் "குமுதம்' இதழிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு "அண்ணாநகர் டைம்ஸ்' இதழில் எழுதிவந்த "நாலு மூலை' அற்புதமான பதிவு. அவை அனைத்தையும் தொகுத்துப் புத்தகமாக யாராவது வெளியிட வேண்டும். பரவலாகத் தமிழ் வாசகர்களின் பார்வைக்கு அந்தப் பதிவுகள் வராமல் இருப்பது தமிழுக்கு இழப்பு.
"ஆனந்த விகடன்' பிரசுரமும், திருவரசு பதிப்பகமும் சில கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டிருப்பதாகத் தெரிகிறது. "அல்லயன்ஸ்' பதிப்பகம் "சும்மா இருக்காதா பேனா' என்கிற தலைப்பில் சில கட்டுரைகளைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறது. நான் தேடிச்சென்ற கட்டுரை கிடைக்கவில்லை என்பது ஒருபுறம் இருக்கட்டும்.
இந்த "அல்லயன்ஸ்' நிறுவனம் பற்றிய தகவல்கள் நான் தேடிப்போன புத்தகம் பற்றிய எண்ணத்தையே மறக்கடித்துவிட்டது. நூறு ஆண்டுகளைக் கடந்து இன்னும் பீடு நடை போட்டுக் கொண்டிருக்கும் "அல்லயன்ஸ்' நிறுவனம் தமிழுக்கும், தமிழ் எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் செய்து வரும் தமிழ்த் தொண்டு சொல்லி மாளாது. 1901-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட "அல்லயன்ஸ்' நிறுவனம்தான் தமிழகத்தின் பதிப்புலக முன்னோடி.
"தமிழில் நல்ல நூல்களை வெளியிட்டு வரும் அல்லயன்ஸ் ஸ்தாபகர் ஸ்ரீ குப்புஸ்வாமி ஐயரை நான் பாராட்டுகிறேன்' என்று மகாத்மா காந்தி தனது கையெழுத்தில் தந்திருக்கும் பாராட்டையும், 1937-இல் ஆஸ்திரியா நாட்டிலிருந்து தனது இரண்டு புத்தகங்களைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியிட அனுமதி அளித்து நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் எழுதிய கடிதத்தையும் இப்போதும் பொக்கிஷமாகப் போற்றிப் பாதுகாக்கி
றார் "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாசன். ராஜாஜியில் தொடங்கி, த.நா. குமாரசாமி, கி.வா. ஜகந்நாதன், பி.ஸ்ரீ., தி.ஜ.ர, கு.ப.ரா., வ.ரா., தேவன் என்று "அல்லயன்ஸ்' நிறுவனத்துடன் தொடர்புள்ள எழுத்தாளர்களின் பட்டியல் மிக மிக நீளம். சோ சாரும், நடிகர் சிவக்குமாரும் கூட "அல்லயன்ஸ்' வட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான்.
பக்கிம் சந்திரர், சரத் சந்திரர், தாகூர், காண்டேகர் போன்ற பிரபல எழுத்தாளர்களை கா.ஸ்ரீ.ஸ்ரீ. தமிழுக்கு அறிமுகப்படுத்த உறுதுணையாக இருந்தது "அல்லயன்ஸ்' நிறுவனம்தான். திருமயிலை மாட வீதியில் கபாலீஸ்வரர் ஆலயத்துக்கு எதிரில் அமைந்துள்ள "அல்லயன்ஸ்' நிறுவனத்திற்கு இன்னொரு பெருமையும் உண்டு. இந்த நிறுவனத்தின் திண்ணையில் அமர்ந்துதான் அன்றைய சுதந்திரப் போராட்டத் தலைவர்கள் காங்கிரஸ் இயக்கத்தைத் தொடங்குவதற்குப் பிள்ளையார் சுழி போட்டார்கள் என்பதுதான் அது.
"அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாசன் எனக்கு மட்டுமல்ல, அனைத்து தமிழர்களுக்கும் ஓர் இன்ப அதிர்ச்சியைத் தர இருக்கிறார். சீனி. விஸ்வநாதன் தனது வாழ்நாள் முழுவதையும் செலவிட்டுத் தொகுத்த "காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகள்', "அல்லயன்ஸ்' நிறுவனத்தால் மறுபதிப்பு செய்யப்பட இருக்கிறது. 16 பாகங்களாக வெளிவர இருக்கும் இந்தப் புத்தகம்தான் மகாகவி பாரதியின் படைப்புகள் பற்றிய ஆதாரப் பூர்வமான தொகுப்பு. முன்பு நான் சீனி. விஸ்வநாதனுக்கும், இந்தப் பணியில் ஈடுபட அவருக்கு உதவிய நல்லி குப்புசாமி செட்டியாருக்கும் பாராட்டுகளைத் தெரிவித்திருந்தேன். இப்போது, "காலவரிசைப் படுத்தப்பட்ட பாரதி படைப்புகளை' 16 பாகங்களாக வெளிக்கொணரும் "அல்லயன்ஸ்' ஸ்ரீநிவாசனுக்கு பாரதி அன்பர்களின் சார்பிலும், தினமணி வாசகர்கள் சார்பிலும், தமிழ்கூறு நல்லுலகத்தின் சார்பிலும் நன்றி, நன்றி, நன்றி!
இந்திய சமுதாயத்தை மிகுதியான மன உளைச்சலுக்கு ஆளாக்கும் பிரச்னை எது என்று கேட்டால் "தலைமுறை இடைவெளி' என்பதாகத்தான் இருக்கும். இன்றைய இந்தியா இரண்டு மாறுபட்ட பிரச்னைகளுக்கு ஆளாகி இருக்கிறது. அதிகரித்து வரும் இளைஞர் கூட்டமும், பெருகிவரும் முதியோர்களும்தான் அந்த இருவேறு உலகங்கள். அதிலும் குறிப்பாக, முதியோரில் பெண்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவது துரதிர்ஷ்டவசமானது.
முதியோர் பிரச்னையை மருத்துவ ரீதியாகவும், மனோதத்துவ ரீதியாகவும் அணுகும் முயற்சியில் தமிழகத்தில் முதன் முதலில் ஈடுபட்டவர் முதியோர் நல மருத்துவர் பத்மஸ்ரீ வ.செ. நடராசன். முதியோர் நல மருத்துவம் என்கிற கோட்பாட்டை சென்னை மருத்துவக் கல்லூரியில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் அவர்தான். குடும்பப் பிரச்னைகளும், தீர்வுகளும் பற்றிய அற்புதமான புத்தகம் ஒன்றை வெளிக் கொணர்ந்திருக்கிறார் டாக்டர் வ.செ. நடராசன். புத்தகத்தின் பெயர் "ஏன் இந்த இடைவெளி' .
""முதியவர்கள் தனிக்குடித்தனம் போக ஒரு சூழ்நிலையைக் குடும்பத்தில் உருவாக்க வேண்டாம் அல்லது முதியோர் இல்லங்களுக்கு அனுப்பிவைக்க வேண்டாம். முதியோர்களை உங்களோடு வைத்துக் கொள்ளுங்கள். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு'' என்று 1980-இல் எழுதிய டாக்டர் நடராசனே, இப்போது "முதியோர் இல்லங்கள் வேண்டும், வேண்டும், அவசியம் வேண்டும். நகர்ப்புறத்தில் மட்டுமல்ல, கிராமங்களிலும்கூட' என்று எழுதுகிறார். அதன் காரணங்களையும் விளக்குகிறார்.
நெல்லை மாவட்டம் இலஞ்சி, சென்னை அண்ணாநகர் போன்ற இடங்களில் தனித்து வாழும் முதியோருக்கு உணவு வழங்கும் திட்டம் பற்றிய குறிப்புகள் பயனுள்ளவை. இதுபோன்ற அமைப்புகள் எல்லா நகரங்களிலும் உருவானால்கூடத் தேவலாம் போலிருக்கிறது.
முதியோரும் சரி, இளைய தலைமுறையினரும் சரி, "ஏன் இந்த இடைவெளி' புத்தகத்தைக் கட்டாயம் படிக்க வேண்டும். படித்தால், நிச்சயமாக இடைவெளி குறையும். அடுத்த தலைமுறைக்கு நல்லதொரு முன்னுதாரணமாக வாழ்ந்துகாட்ட முடியும். ஒவ்வொரு வீட்டிலும் "ஏன் இந்த இடைவெளி' புத்தகம் வாங்கப்பட வேண்டும் என்பதுதான் எனது பரிந்துரை!
கவியரசர் கண்ணதாசனுடன் பயணிக்கும்போது, யாராவது தர்மம் செய்வதைத் தடுத்தாலோ, குதர்க்கமாகப் பேசினாலோ அவருக்குப் பிடிக்காது. ""முடிந்தால் தர்மம் செய், இல்லையென்றால் பேசாமல் இரு, தர்மம் செய்வதைத் தடுக்காதே. அதேபோல, நீ போடும் சில்லறைக் காசைப் பிச்சைக்காரன் என்ன செய்கிறான் என்று போலீஸ்காரன் வேலை பார்க்காதே'' என்பார். தர்மம் செய்வது இன்றும் சில்லறைக் காசுகளைத்தான். பத்து ரூபாய் இல்லாமல் டீயும், பொறையும்கூடக் கிடைக்காது. மனிதன் இன்னும் சில்லறைகளைத்தான் தர்மமாகப் போடுகிறான் என்கிற உண்மையைப் படம் பிடிக்கிறது "ஆனந்த விகடன்' சொல்வனத்தில் வெளியாகி இருந்த கவிஞர் மு. மகுடீஸ்வரனின் "கருணை' என்கிற கவிதை.
பேருந்து வாசலில்
புரையோடிய கண்ணும்
கையில் குழந்தையுமாக
அழுக்குப் பெண்ணுருவம்
கை நீட்ட
சட்டைப்பை துழாவி
இரண்டு ரூபாய் நாணயமிட்டேன்.
தடி ஊன்றி
தள்ளாடிய பெரியவர் ஒருவரின்
கை நீட்டலுக்கு
ஒரு ரூபாய் இட்டேன்.
காத்திருப்பின் நீட்சியில்
"அண்ணா...' என
ஒரு சிறுமி கையேந்தியபோது
என் சட்டைப்பையில்
கருணை தீர்ந்து
ரூபாய்த் தாள்களே
மிச்சமிருந்தன!
நன்றி :- தினமணி
No comments:
Post a Comment