Thursday, October 29, 2015

சங்க இலக்கியமும் சைவர்களும் – 2 -முனைவர் கோ.ந. முத்துக்குமாரசுவாமி


தொடர்ச்சி.. 
nakkeerar1சங்கப் புறப்பாடல்களும் திருமுறைகளும்
சங்க இலக்கியங்களில் பத்தியுணர்வைப் பாடு பொருளாகக் கொண்ட ஒரே நூல் மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரனார் அருளிய திருமுருகாற்றுப்படை. இது சங்க இலக்கியமாகிய பத்துப்பாட்டில் கடவுள் வாழ்த்துப் போல நூலின் முதலில் அமைந்துள்ளது. திருமுருகாற்றுப்படை பதினொன்றாம் திருமுறையில் திருமுறைப் பாடலாகவும் இடம்பெற்றுள்ள சிறப்பினையுடையது. பரிபாடல் முதலியவற்றில் சிலபாடல்கள் முருகன் திருமால் முதலிய கடவுள்களைப் பற்றியனவென்றாலும் அவை அகப்பொருட் பாடலாகச் சார்த்து வகையில் பாடப்பெற்றனவே யன்றித் தனித்த பத்திப்பாடல்கள் அல்ல.
நக்கீரர் பாடிய பாடல்கள் சங்க இலக்கியத்தில் எட்டுத்தொகையில் அகநானூறில் 15பாடல்களும், குறுந்தொகையில் 8பாடல்களும், நற்றிணையில் 7 பாடல்களும், புறநானூறில் 3 பாடல்களும் பத்துப்பாட்டில் திருமுருகாற்றுப்படையும் நெடுநல்வாடையும் என இரண்டு நூல்களும் உள்ளன . இப்பாடல்களின் பாடுபொருள்களை நுணுகி ஆராய்ந்தால் அகப்பொருளையும் புறப்பொருளையும் பாடிய நக்கீரர் உளம் முருகனைப் பாடுதற்கமைந்த வளர்ச்சி புலப்படும். அகப்பொருளில் முப்பது பாடல்களைப் பாடிய நக்கீரர் புறத்தில் இரண்டே பாடல்களைப் பாடியுள்ளார். அதில் பொருண்மொழிக்காஞ்சி யென்னுந் துறையில் பாடிய பாடல், உலகவாழ்க்கை இத்தகையது எனத் தெளிந்த அனுபவ முதிர்ச்சியில் பாடியது.
“தெண்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய ஒருமையோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலுந் துஞ்சான்
கடுமாப் பார்க்குங் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி யுடுப்பவை யிரண்டே
பிறவு மெல்லா மோரொக் கும்மே”
பத்தியுணர்விற்கு அடைப்படையான மன `வைராக்கியம்` நக்கீரர் பெருமானின் இப்பாடல்வரிகளில் வெளிப்படுகின்றது. “கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார், ஓடும் செம்பொனும் ஒக்கவே நோக்குவா”ருக்கு உரிய ஆன்மிக ஒழுக்கம் இச்சங்கப்பாடலில் வெளியாகும் உணர்ச்சியின் முதிர்ச்சியே.
சங்கப் புறப்பொருள் இலக்கியங்களில் வள்ளல்களையும் அரசர்களையும் அண்டியே பிழைக்கவேண்டிய சமூகமைப்பில் இருந்த புலவர் பாணர் முதலிய  இரவலர்கள் புரவலர்களை நாடிச் சென்று பொய்யும் மெய்யும் கூறிப் புகழ்ந்து சலித்த நிலைமையைக் காணுகின்றோம்.

“இரவலர் புரவலர் நீயு மல்லை, புரவலர் இரவலர்க் கில்லையு மல்லர்” (புறம் 163), “முற்றிய திருவின் மூவராயினும் பெட்பின் றீதல் யாம்வேண்டலமே”(205), ‘வரிசைக் கிரங்குமிப் பரிசில் வாழ்க்கை”(206) என்பன போன்ற இரவலர்களின் வாக்குகளில் மனிதர்களைப் புகழ்ந்து பேசி அவர்கள் கொடுக்கும் பொருளில் வாழும் இரவலர் வாழ்க்கை கசந்துபோன மனநிலை தெளிவாகின்றது.

இரந்துவாழும் வாழ்க்கை இனியதாக இல்லமையால் ‘இன்னா தம்மவிவ் வுலகம்” என்ற அறிவும், “இனியகாண்கிதன் இயல்புணர்ந்தோரே” (புறம் 194) என்ற தெளிவும் பிறந்தது. இதன் எதிர்வினைதான் திருமுறைகளில் உள்ள, “நச்சிநீர் பிறன்கடை நடந்துசெல்ல நாளையும், உச்சிவம் மெனும்முரை யுணர்ந்துகேட்ப தன்முனம்”, “சோறு கூறை யின்றியே துவண்டுதூர மாய்நுமக் , கேறு சுற்ற மெள்கவே யிடுக்கணுய்ப்ப தன்முனம்” ஈசனை அடைவீர் என்று அறிவுரை கூறியதும்,“பொய்மையாளர்களைப் பாடாமல் எந்தை புகலூர் பாடுமின்” என்று புலவர்களை ஆற்றுப்படுத்தியதும் போன்ற திருப்பாடல்கள்.

மணிவாசகப் பெருமான் திருவெம்பாவையில் பெண்ணொருத்தியின் கூற்றாக “எய்யாமற் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்” என வேண்டுகின்றார். எய்த்தல் என்றால்.’இவனுக்கு எத்துணை முறை உதவுதல்’ என்ற மனச்சலிப்புக் கொள்ளல். இதன் உண்மைப் பொருளை உணரவேண்டுமாயின் புறநானூறு 203 செய்யுளைப் பாடிய ஊன்பொதி பசுங்குடையாரின் மனநிலையைப் பெறுதல் வேண்டும்.
அவர் இளஞ்சேட் சென்னியை நோக்கிக்,

 ”கழிந்த காலம் பெய்தேனெனக் கருதி மழை பெய்யாது மாறினும், முற்காலத்து விளைந்தேனெனக் கருதி நிலம் விளைவை ஒழியினும் எல்லாவுயிர்கட்கும் உயிர்வாழ்க்கையில்லை. அதுபோல இன்னமும் எமக்குப் பரிசில் தாருமென்று சொல்லி எம்போல்வார் இரப்பின் அவர்க்கு முன்னும் பரிசில் கொண்டீரென்று நும்போல்வார் மறுத்தல் இன்னாது.—அதனால் பூண்கடனெந்தைநீ யிரவலர் புரவே”  எனப்பாடினார்.

மழையும் நிலமும்போல , சிவனே! நீ மறுக்காது சலித்துக் கொள்ளாது எமக்கருள வேண்டும் என வேண்டும் உணர்ச்சி புறநானூற்றுப் பாடலைப் படியாது அடைய முடியுமோ?

ஆதனுங்கன் என்னும் வள்ளலைக் கள்ளில் ஆத்திரேயன் ( ஆத்திரேயன் என்பது அந்தணர்களின் கோத்திரங்களில் ஒன்று) என்னும் புலவர்,

” ஆதனுங்க! யான் ஒன்றைச் சொல்ல நினைப்பின் நினது புகழல்லது சொல்வது இல்லை; நின்னையுடைய யான் நின்னை மறப்பின், மறக்குங் காலமாவது எதுவெனச் சொல்லக் கேட்பாயாக.என்னுடைய உயிரானது என்னைவிட்டு நீங்குங் காலத்தும் என்னை யான் மறக்குங் காலம் உண்டாயின் அப்பொழுது மறப்பேனல்லது மறவேன்” (புறம் 175)என்று பாடினார். அதாவது அவர் தன்னைத் தான் மறக்குங் காலத்தில்தான்  வள்ளலை மறப்பேன்; நினைவுள்ளவரை மறவேன் மறவேன் என்றார்.

இந்த உணர்வைத் திருமுறைகளில் பல இடங்களில் காணலாம். மனிதனை மறவேன் என்று பாடிய புலவரினம் சிவனை மறவேன் எனப்பாடிய மாற்றம் அறியத்தக்கது.

சிவனை நினையாத நாள்,“ஓவுநாள், உணர்வழியுநாள், உயர் பாடைமேல் போகுநாள்” என்று பாடிய நம்பியாரூரர் திருப்பாண்டித்திருப்பதிகம் முழுவதும் இவ்வுணர்ச்சி ததும்பப் பாடியருளியது காண்க. மணிவாசகர், ”வாக்குன் மணி வார்த்தைக்காக்கி” என்றது, ‘ஆதனுங்க ! யானொன்றைச் சொல்ல நினைப்பின் நினது புகழல்லது சொல்லாமையான்’ என்ற சங்கப்பாடல் வரியின் மறு வாசிப்பாக இருத்தலை நோக்குக.

கடலுண்மாய்ந்த இளம்பெருவழுதி, தன்னுடைய, “உண்டா லம்மவிவ் வுலகம்’ எனும் அருமையான பாடலில், “ உண்டா லம்மவிவ் வுலகம் — — –தமக்கென முயலா நோன்றாட், பிறர்க்கென முயலுந ருண்மை யானே” என்றார். அத்தகையோரை எம்பிரான் காப்பாற்றுவன் எனத் திருஞானசம்பந்தர்,“தாமென்று மனந்தளராத் தகுதியராய், உலகத்துக் காமென்று தவம்புரிவார் தமைக்காக்குங் கருணையினான்” எனப்பாடினார். தம்பொருட்டன்றி பிறர் பொருட்டு வாழுதல் இவ்விருவகை இலக்கியங்களிலும் போற்றப்படுதல் காண்க.

avvaiyar1பெருந்தலைச் சாத்தனார் மூவன், பரிசில் நீட்டித்தானை நோக்கி ,”நின் நசைதர வந்துநின் னிசைநுவல் பரிசிலேன், வறுவியன் பெயர்கோ வாண்மேம் படுந, ஈயா யாயினும் இரங்குவே னல்லேன்” எனப் பாடினார். நம்பியாரூரர், நாட்டியத்தான்குடி நம்பியை நோக்கி, “பேணீராகிலும் பெருமையை உணர்வே, பிறவே னாகிலும் மறவேன், காணீ ராகிலும் காண்பனென் மனத்தால்,கருதீ ராகிலும் கருதி, நானே லும்மடி பாடுதல் ஒழியேன், நாட்டியத்தான் குடி நம்பி” எனப் பாடினார். இவ்விரு கூற்றுக்களையும் ஒப்பு நோக்கி மகிழ்க.
ஔவையார் தன்னிடத்து அதியமான், “ பலநாள் பயின்று பலரொடு செல்லினும், தலைநாட் போன்ற விருப்பின” (புறம் 101)னாக இருத்தலைப் பாடியமையைப்போலத் திருஞானசம்பந்தர், குளச்சிறையாரின் பண்பினை,“கணங்களாய் வரினுந் தமியராய் வரினும்,அடியவர் தங்களைக் கண்டால், குணங்கொடு பணியும் குலச்சிறை” எனப்பாடினார். ஐயாறுடை அடிகளும் தமக்கு அவ்வாறே, “சங்கை ஒன்றும் இன்றியே, தலைநாள் கடைநாள் ஒக்கவே” அருளுடையனாய் இருத்தலை நம்பியரூரர் பாடினார்.
ஏணிச்சேரி முடமோசியார் எனும் புலவர் யாவரினும் முன்னே நினைக்கப்படுமவனாகிய ஆய் அண்டிரனைப் பின் நினைத்த குற்றத்தால் தனது உள்ளம் அமிழ்ந்து போவதாக என்றார்.

“முன்னுள்ளு வோனைப் பின்னுள்ளி னேனே
ஆழ்கென் னுள்ளம்” (132)
நம்பியாரூரர் திருவாரூர் இறைவனை முன்பே நினையாத மூடனாகத் தம்மைப் பழித்துக் கொள்ளுகின்றார்.
“வன்னாக நாண்வரைவில் லங்கிகணை அரிபகழி
தன்னாகம் உறவாங்கிப் புரமெரித்த தன்மையனை
முன்னாக நினையாத மூர்க்கனேன்”(51-6)
இவ்வொப்புக்கள் ஒரு சிலவே. விரித்தும் நுணுகியும் காண்போருக்குச் சொல்லிலும் பொருளலும் சங்க இலக்கியத்திற்கும் சைவத் திருமுறைகளுக்கும் ஒரு மரபுத் தொடர்ச்சி யிருத்தல் நன்கு வெளியாகும். இயற்கை வருணனைகளில் ஒப்புமை மிக விரிவானது. அது குறித்து இங்கு பேசப்படவில்லை.

சங்க இலக்கியமும் சைவதத்துவமும்

சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.

சைவதத்துவத்தில், ‘உலகம்’ கானல் நீர்போல போலித் தோற்றமோ, முயற்கொம்பு போல இல்பொருளோ அன்று. உலகம் தோற்றக் கேடுகள் உள்ள உள்பொருளே. சங்க இலக்கியங்கள் உலகத்தியற்கையினை,“மன்னா வுலகம்”(புறநா 165), “நில்லா வுலகத்து நிலைமை தூக்கி” (பெரும்பாண் 466) எனக் கூறுதல் காண்க. தொல்காப்பியம் புறத்திணையியலும் (23) “பாங்கருஞ் சிறப்பின் பல்லாற்றானும், `நில்லா வுலகம்` புல்லிய நெறித்தே” என்றது. நில்லா உலகம் – நிலைபேறு இல்லாத உலகியற்கை. தெய்வ்ச் சேக்கிழாரும் தொல்காப்பியத்தை ஒட்டி, “ நில்லா வுலகியல்பு கண்டு நிலையா வாழ்க்கை அல்லேன் எனஅறத் துறந்தார்” எனக் கூறினார். (திருநா.புராணம் 37)

மன்னாவுலகத்தில் மன்னுதல் குறித்த சிந்தனை சங்ககாலத்தில் இருந்தது. அது கொடை முதலியவற்றால், தாமாய்ந்தாலும் தம் புகழ்நிறுவதால் அமையும் எனக் கருதப்பட்டது. “மன்னா வுலகத்து மன்னுதல் குறித்தோர் தம்புகழ் நிறீஇத் தாமாய்ந் தனரே” (புறம்62) என்பதால் அது பெறப்படும். நிலையில்லாத உலகத்துச் செய்யப்பட்ட அறம் காரணமாக ஒருவன் எய்திய புகழும் மறையும் என்பது சைவம் கண்ட உண்மை.

“இவ்வுலகத்துப் புகழை விரும்பி அடைந்த ஒருவன், இறந்தபின் இவ்வுடலை விட்டு வேறோர் உடலை அடையும்போது, கழிந்தவுடலின் வந்த புகழ் எடுத்தவுடலில் வந்து பொருந்துமே? அதுவல்லாமல், முற்பிறப்பில் இன்ன புகழையுடையான் இவனென்று பிறராலறிந்து சொல்லத்தான் படுமோ?, அதுவுமல்லாமல் ஒருவன் தான் முற்பிறப்பில் இன்ன புகழையுடையவனாக இருந்தேன் என்று அறியத்தான் இயலுமோ?” எனச் சிவநெறி வினவும்.
வீடு பேறு ஒன்றே நித்தியம். பிறவனைத்தும் அநித்தியம். எனவே நிலையிலாத வுலகத்துப் பிறந்தோர் நிலைத்த முத்தியின்பத்தைப் பெற முயல வேண்டும் எனச் சிவநெறியும் திருமுறைகளும் கூறும். இது தெய்வப்புலவர் திருவள்ளுவரிடமிருந்து பெற்ற உண்மையே.

“கற்றீண்டு மெய்ப்பொருள் கண்டார் தலைப்படுவார்
 மற்றீண்டு வாரா நெறி” (359)
என்ற திருக்குறளையும், அதற்குப் பரிமேலழகர் செய்த உரையும் காண்க.

சைவசித்தாந்தம் பதமுத்தி , பரமுத்தி என இருவகை முத்திகளைக் குறித்துப் பேசும். பதமுத்திஎன்பது சுவர்க்கம் முதலிய மேலுலகங்களை அடைந்து அங்குள்ள போகங்களை அனுபவிக்கும் முத்தி. அரி, அயன் முதலியவைகளும் பத முத்தியே. இம்முத்தி நல்வினையாகிய புண்ணியத்தின் பயனாக அடைவது. போகத்தை அனுபவித்து முடிந்தவுடன் புண்ணியமும் தீர்ந்துவிடும். அப்பொழுது அப்பதமுத்தியை அனுபவித்த உயிர் மீண்டும் உலகில் தவஞ்செய் சார்பினில் வந்து தோன்றி மலபரிபாகமும் சத்திநிபாதமும் எய்தி பரமுத்தி எய்தும். பரமுத்தியே மேலான முத்தி. இம்முத்தி அடைந்தோர் மீண்டும் பிறவி எய்துவது இல்லை. பதமுத்தி, பசித்து உண்டு மீண்டும் பசிப்பானை ஒக்கும் எனச் சாத்திரம் பேசும். (சிவஞானபோதம் சூ8 அதி 2)

பதமுத்தி, பரமுத்தி எனும் இருவகை முத்திகளைப் பற்றிச் சைவசித்தாந்தம் கூறுவது சங்கத்தமிழர்களின் தத்துவ உணர்ச்சியின் முதிர்ச்சியே. கோப்பெருஞ்சோழனைப் புல்லாற்றூர் எயிற்றியனார் பாடல் ஒன்றில் (புறம்214) பதமுத்தி, பரமுத்தி இரண்டினையும் பற்றிப் பேசுகின்றார்.
“உயர்ந்த விருப்பத்தையுடைய உயர்ந்தோர்க்குத் தாம் செய்யப்பட்ட நல்வினைக்கூற்றிலே அதனை அனுபவித்தல் உண்டாமாயின் அவர்க்கு இருவினைய்யும் செய்யப்படாத உம்பர் உலகத்தின்கண் இன்பம் அனுபவித்தலும் கூடும்;( “தொய்யா வுலகத்து நுகர்ச்சியுங் கூடும்” நுகர்ச்சிமட்டும் உண்டு. வினை செய்வது இவ்வுலகில் இல்லை)
“தொய்யா வுலகத்து நுகர்ச்சி யில்லெனின்,
மாறிப் பிறப்பி னின்மையுங் கூடும்”
அவ்வுலகத்தின்கண் நுகர்ச்சியில்லையாயின் , மாறிப் பிறத்தலிலே கூடும் பிறப்பின்கண் இன்மை எய்தவுங் கூடும்.
“மாறிப் பிறவா ராயினு மிமயத்துக்
கோடுயர்ந் தன்ன தம்மிசை நட்டுத்
தீதில் யாக்கையொடு மாய்தல்தவத் தலையே”
மாறிப்பிறவாரென்று சொல்லுவாருளராயின் தமது புகழை நிலைபெறுத்தி வசையில்லாத உடம்பொடு கூடி நின்று (அதாவது, தாம் எடுத்துள்ள இப்பிறப்பிலேயே) இறத்தல் (மீண்டும் பிறக்க ஏதுவாகாமல் இறத்தல்) மிகத்தலையாயது. அதனால் எவ்வாற்றானும் நல்வினை செய்தல் அழகிது.
மெய்கண்டார்
மெய்கண்டார்
இப்பாடலில் மாறிப் பிறவாமையே தலையாய முத்தி என்றும் அதனை எடுத்துள்ள இப்பிறப்பிலேயே அடைவதற்குரியவற்றைச் மேற்கொள்ள வேண்டும் எனும் சங்கநூற் கருத்தைச் சைவம் தன்னுடைய கொள்கையாகக் கொண்டுள்ளது. இச்செய்யுளில் உள்ள “மாறிப் பிறவாராயினும்” எனும் தொடரை இதே பொருளில், சிவஞானபோதம் சூ2மூன்றாம் அதிகரணம் “ இனி, இவ்வான்மாக்கள் மாறிப் பிறந்து வரும் என்றது” என எடுத்தாண்டுள்ளது அறியத்தக்கது.

உயிர்களைச் சங்க இலக்கியம் `மன்னுயிர்`(பதிற்று15,18,20,24, புறநா19) ,‘மன்பதை’(பதிற்று40,42,72,77) எனும் சொற்களால் குறிக்கின்றது. மன்னுயிர்என்றால் நிலையான உயிர்கள் என்பது பொருள். மன் – நிலைபேறு. தெய்வப்புலவர் திருவள்ளுவருக்கும் இதுவே கருத்து. `மன்னுயிர்`குறள்244), ‘மன்னுயிர்க்கு’(குறள்318). ‘உயிர்களெல்லாம் நித்தமாகலின் , மன்னுயிரென்றார்’, என்பது உரைக்குறிப்பு. `மன்னுயிர்ப் பன்மையும் (புறநா19) என்னும் தொடருக்கு ’நிலைபெற்ற உயிரது பன்மையும்’ என்பது பழையவுரை. அதே போன்று, ‘மன்பதை’(புறநா210,356) உயிர்ப்பன்மை என்பது பொருள். எனவே, உயிர்கள் பல என்பதும், அவை அழிவதில்லை என்பது பழந்தமிழர் கொள்கை என்பது பெற்றாம். உயிர்கள், எண்ணரிதாய் , நித்தமாய்” என்று சித்தாந்த சாத்திரம் கூறும்

நம் இந்திய நாட்டில் தோன்றிய சமயதத்துவங்கள், உலோகாயதம் தவிர, அனைத்தும் வினைகொள்கை அல்லது கருமக்கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளன. அவற்றுள் சைவம் கூறும் வினைக்கொள்கை பிறவற்றினின்றும் வேறு பட்டது. அவ்வேறுபாட்டிற்குக் காரணம் அது தமிழர் சிந்தையில் முகிழ்த்தது என்பதுதான்.

வினை, விதி, ஊழ், பால் என்னும் சொற்கள் தம்முள் சிறு வேறுபாட்டுடன் ஒரேபொருளைத் தருவன. சங்க இலக்கியங்கள், இவற்றுள், பால் என்ற சொல்லையே பெரிதும் எடுத்து வழங்கும். “பால்தர வந்த பழவிறற் றாயம்” (புறம்75, விதி தரப்பட்டுத் தம்பால் வந்த அரசுரிமை), “நல்லியக் கோடனை உடையை வாழியெற் புணர்ந்த பாலே” (புறம்176, நல்லியக் கோடனைத் துணையாக நீ உடையையாதலான், என்னைப் பொருந்திய விதியே).

”நல்லைமன் றம்ம பாலே மெல்லியற்
றுணைமலர்ப் பிணைய லன்னவிவர்
மணமகிழ் இயற்கை காட்டியோயே”
(குறுந்-229 இத்தலைமக்களின் திருமணத்தைக் காட்டிய விதியே நீ நல்லை ).
”ஒன்றே வேறே யென்றிரு பால்வயின்
ஒன்றி யுயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப”
(களவியல்-2)
இத்தொல்காப்பிய சூத்திரத்தில் வரும் முதலிலுள்ள ‘பால்,’ இடம் என்று பொருள்படும். ‘பாலதாணை’ என்பதற்குப் ‘பால்வரை தெய்வத்தின்’ ஆணையாலே’ என்பது பொருள். பால்வரை தெய்வமென்பது எல்லார்க்கு மின்பத் துன்பத்திற்குக் காரணமாகிய இருவினையையும் வகுக்கும் தெய்வம் என்பது பொருள். (தொல்.சொ.54.சேனா) அதாவது வினை தானே பலனையூட்டாது. வினை செய்தானையும் வினையையும் வினை செய்தவனையும் அறிந்து அவ்வினைக்கும் மேலாம் தெய்வம் பலனை வகுத்து ஊட்டும் என்பது பண்டைத் தமிழர் கருத்து. தெய்வப் புலவர் திருவள்ளுவரும் “வகுத்தான் வகுத்த வகையல்லால் கோடி, தொகுத்தாருக்கும் துய்த்த லரிது”(377) என்றார். தெய்வம் வகுத்த வகையானல்லது ஒருவனுக்கு நுகர்தலுண்டாகாது. அத்தெய்வம், ஓருயிர் செய்த வினையின் பயன் பிறிதோருயிரின்கட் செல்லாமல் அவ்வுயிர்க்கே வகுத்தலின், வள்ளுவர் ‘வகுத்தான்’ என்றார். அதனையே தொல்காப்பியர், ‘பால்வரைத் தெய்வம்’ என்றார்.

செந்தமிழ்நாட்டுக்கு வந்தேறிய பிறசமயங்கள் எல்லாம் வினையே பலனைத் தரும் என்ற கருத்துடையனவாக இருக்க, பண்டைத் தமிழர் வினை வகுத்தான் வகுத்த வழியே செய்தானைச் சாரும் என்ற கருத்தினர். இது சைவசித்தாந்தத்தில் வினைக்கோட்பாடும். இதனைத் தெய்வச் சேக்கிழார்,
“செய்வினையுஞ் செய்வானும் அதன்பயனும் கொடுப்பானும்
மெய்வகையால் நான்காகும் விதித்தபொருள் எனக்கொண்டே
இவ்வியல்பு சைவநெறி அல்லவற்றுக் கில்லையென
உய்வகையாற் பொருள்சிவ னென்றருளாலே உணர்ந்தறிந்தார்”
(சாக்கிய 5)
என்றருளினார்.


புறநானூற்றில் கவுணியன் பூங்குன்றனார் எனும் புலவர் பெருமான் பாடியதாகவுள்ள “யாதும் ஊரே யாவருங்கேளிர்” (192) எனும் உலகப் புகழ்பெற்ற பாடலை அனைவரும் அறிவர்.

“யாது மூரே யாவருங் கேளிர்
தீது நன்றும் பிறர்தர வாரா
நோதலுந் தணிதலு மவற்றோ ரன்ன
சாதலும் புதுவ தன்றே வாழ்தல்
இனிதென்று மகிழ்ந்தன்று மிலமே முனிவின்
இன்னா தென்றலு மிலமே …. 
… திறவோர்
காட்சியிற் றெளிந்தன மாகலின் மாட்சியிற்
பெரியோரை வியத்தலு மிலமே
சிறியோரை யிகழ்த லதனினு மிலமே”
இப்பாடலில் அமைந்துள்ள உண்மைகள் பிறருக்கெல்லாம் வெறும் சொற்பொருளையே அளிக்கச் சிவநெறிச் சாதகர்களுக்கு அவை சாதனைப் படிகளாக அமைந்துள்ளன;. அனுபவப் பொருளாக உணர்த்துகின்றன.

யாருக்கு உண்மையிலேயே “யாதும் ஊரே யாவருங் கேளிர்” எனும் உணர்ச்சியுண்டாதல் கூடும்? அந்தந்த வூர்களிலெல்லாம் எப்பொழுதோ வாழ்ந்து அங்கிருந்த உயிர்களுடன் ஏதோ ஒருவகை உறவு கொண்டிருந்தவர்களுக்கே அவ்வுறவு உணர்ச்சி உண்டாகும். வெறும் வாயளவில் அவ்வுணர்ச்சியுண்டாகாது.

அப்பாடலின் இடையிலுள்ள அடிகளில், பேரியாற்றின் நீரின் வழியேபோம் மிதவை போல, அரிய உயிர் ஊழின்(நியதி) வழியே  படும் என்பது கூறப்பட்டது. எனவே சிவநெறி கூறுமாறு வினையின் வழி பிறப்பென்பது பெறப்படும். முதற் பிறப்பிலிருந்து உயிர் முத்தி அடைகின்றவரை எடுக்கின்ற பிறப்புக்கள் எண்ணிக்கையில் அடங்கா. வினைக்கேற்ப, அவ்வுயிர்கள் பெறுகின்ற உடலும் அவை பிறக்கின்ற இடங்களும் அளவிலாதன.

அதனால்தான் மாணிக்கவசகர்,
“புல்லாய்ப் பூடாய்ப் புழுவாய் மரமாகி
பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
செல்லாஅ நின்றவித் தாவர சங்கமத்துள்
எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன்”
(சிவபுராணம் 26-31)
என்று பாடினார்.
manikka_vasagar_statueஎல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார்.

அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று  எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு இடத்தில் மற்றொரு உயிருடன் ஏதோ ஒருவகையில் உறவு உடையதாகும். அப்படி எண்ணற்ற பிறவி எடுத்து உழல்கையில் ஒவ்வோருயிரும் மற்றொன்றனொடு ஏதோ ஒரு பிறவியில் உறவுடையதாகவே இருக்கும். இவ்வாறு ஒவ்வோ ருயிரும் பிறவுயிரொடு எங்கோ எப்போதோ கொண்டிருந்த உறவின் காரணமாக இன்றும் கேளாகும். ஓருடல் விட்டு மற்றோருடல் எடுக்கையில் முந்தைய உடலில் செய்த செயல்கள் மறந்தொழிவது போல இவ்வுறவும் மறந்து போகின்றது..


இத் தாவரசங்கமத்துள் எல்லாப் பிறவியும் பிறந்திளைத்த ஞானியராகிய ஆன்மநேயர்கள் இவ்வுண்மையை (கணியன் பூங்குன்றனார் கூறுவதுபோலத் திறவோர் காட்சியின்) உணர்த்தும்போதுதான் நம்மவரால் இந்த கேண்மையை உணர்ந்து கொள்ள முடிகின்றது. பட்டினத்தடிகள் கூறுகின்றார்:

“யானொன் றுணர்த்துவன் எந்தை மேனாள்
அகில லோகமும் அனந்த யோனியும்
நிகிலமுந் தோன்றநீ நினைந்தநாள் தொடங்கி
எனைப்பல யோனியும் நினைப்பரும் பேதத்
தியாரும் யாவையும் எனக்குத் தனித்தனித்
தாய ராகியுந் தந்தைய ராகியும்
வந்தி லாதவர் இல்லை யானவர்
தந்தைய ராகியுந் தாய ராகியும்
வந்திராததும் இல்லை முந்து
பிறவா நிலனும் இல்லை அவ்வயின்
இறவா நிலனும் இல்லை பிறிதில்
என்னைத் தின்னா உயிர்களும் இல்லையானவை
தம்மைத் தினா தொழிந்ததும் இல்லை அனைத்தே
காலமுஞ் சென்றதி யானிதன் மேலினி
இளைக்குமா றிலனே”
(திருக்கழுமல மும்மணிக்கோவை-7)
பட்டினத்தடிகளின் இத்திருப்பாடலின் பொருளை உணர்ந்தவருக்குச் சைவர் “யாதுமூரே யாவருங் கேளிர்” எனும் அடிகளுக்குக் கொள்ளும் பொருளுக்கும் பிறர் பொருள் கொள்ளுவதற்கும் உள்ள வேறுபாடு தெற்றென விளங்கும். பிறர் காண்பது உலகியல் ஒற்றுமை; சைவர் விழைவது ஆன்மநேய உறவும் ஒற்றுமையும்..

ஒருவர்க்குத் தீமை நன்மை சுகம் துக்கம்யென்பன அவர் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப சிவன் அறிந்து அருந்துவித்தலால் விளைவதன்றி ஒருவரால் ஒருவருக்கு நன்மையோ கெடுதலோ விளைவித்துவிட முடியாது என்பது சிவநெறி. எனக்குப் பிறர் தீமை செய்தாரென்றும் பிறர்க்கு யான் நன்மை செய்தேனென்றும் எண்ணுவதை ‘மனப்பசை’ என்று ஞானாமிர்தம் கூறும். இந்தமமதையை மனக் ‘கோணல்’ என்று கூறும் சிவஞானசித்தியார்,(10:2) இந்தக் கோணலை ஞானவெரியால் வெதுப்பி நிமிர்த்துச்செவ்வே நின்றிடவேண்டும் என்று சித்தியார் விதிக்கின்றது. “தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்ற பூங்குன்றனாரின் ஞானமொழி, மனக்கோணலை வெதுப்பி நிமிர்த்தும் ஞானவெரியாகிய இச்சிந்தனைக்கு அடிகோலுகின்றது, நோதலும் பரிதலும் நுண்ணுணர்வின்மையின் விளைவு என்பது சைவம்.

இவ்வாறு அனைத்தும் ஒருநியதியின்படி, (நியதி, ஊழ், வினை, விதி, பால் ஒருபொருட்சொற்கள்) சிவனின் ஆணையால் நடைபெறுகின்றன என்றறிந்த சிவநெறிச்சீலர், கணியன் பூங்குன்றனார் மொழியுமாறு, வாழ்வினை இன்னாதென்று முனிதலும் இலர்; இனிதென்று மகிழ்தலும் இலர்; “நன்றே செய்வாய் பிழைசெய்வாய் , நானோ இதற்கு நாயகமே”(திருவாசகம்,500) என்றிருப்பர். எல்லாம் சிவன் செயலென்று உணர்தலினாலே, சிவஞானிகள், பெரியாரை வியத்தலும், சிறியாரை இகழ்தலும் செய்வதில்லை.
moovar-stage-adheenamசிவஞானக் களஞ்சியமான கணியன் பூங்குன்றனாரின் இப்பாடலைச் சங்கப்புறப்பாடல் என்று கூறி ஒதுக்கும் அளவுக்குச் சைவர்கள் தமிழறிவு மங்கியவர்கள் அல்லர்.
சைவ ஆதீனங்களிலும் திருமடங்களிலும் சங்கநூற்கள் கற்பிக்கப்படுவதில்லை என ஒரு குறையும் இக்கருத்தரங்கில் கூறப்பட்டது. இக்குற்றச்சாட்டு ஏற்புடையது தானா எனச் சிந்திக்க வேண்டும்.
திருமடங்களும் சைவ ஆதீனங்களும் தமிழ்இலக்கியம் கற்பிக்கும் கல்லூரிகள் அல்ல. தகுதியுடையோருக்கும் விரும்புவோருக்கும் சித்தாந்த சாத்திரக்கல்வி யளித்துச் சிவதன்மத்தில் ஒழுகப் பயிற்றுவிக்கும் கருத்துடன் தோற்றுவிக்கப்பட்டனவாகும். இங்கு பயில்வோர் பெரும்பாலும் திருமடத்திலும் ஆதீனத்திலும் பணிபுரிவோரும் தம்பிரான்களுமேயாவர். தம்பிரான்சுவாமிகள் நைட்டிகப் பிரம்மசாரிகள். காமங்கடிந்த புலனடக்கம் இவர்களுக்கு விதிக்கப்பட்ட இன்றியமையாத ஒழுக்கமாகும்.

“பெண்மை வியவார் பெயரு மெடுத்தோதார் —  — வீடில் புலப்பகையினார்” எனத் துறவற இலக்கணம் விதிக்க, புலனின்பங்களை வியக்கும் சங்கப் பாடல்களை பாடமாக அவர்களுக்குப் போதிப்பது எவ்வாறு சாத்தியமாகும்?

“வனைந்துவர லிளமுலை ஞெமுங்கப் பல்லூழ்
விளங்குதொடி முன்கை வளைந்துபுறஞ் சுற்ற
நின்மார் படைதலி னினிதாகின்றே”
(அகம்58)
“குக்கூ வென்றது கோழி யதனெதிர்
துட்கென் றற்றென் றூஉ நெஞ்சந்
தோடோய் காதலர்ப் பிரிக்கும்
வாள்போல் வைகறை வந்தன்றா லெனவே”
(குறுந்-157)
“பெருங்கதவு பொருத யானை மருப்பி
னிரும்புசெய் தொடியி னேர வாகி
மாக்க ணடைய மார்பகம் பொருந்தி
முயங்கல் விடாஅ லிவையென மயங்கி
யானோ மென்னவு மொல்லார் தாமற்
றிவைபா ராட்டிய பருவமு முளவே
யினியே,புதல்வற் றடுத்த பாலொடு தடைஇத்
திதலை யணிந்த கேழ்கிள ரகலம்
வீங்க முயங்கல் யாம்வேண் டினமே
தீம்பால் படுத றாமஞ் சினரே”
(அகம் 26)
என இவைபோன்ற செய்யுட்களும், ‘கூறத் தகாத வாய்பாட்டாற்” கூறும் கைக்கிளைப் பாடல்களும்,
“உக்கத்து மேலு நடுவுயர்ந்து வாள்வாய
கொக்குரித் தன்ன கொடுமடாய் நின்னையான்
புக்ககலம் புல்லினெஞ் சூன்றும் புறம்புல்லி
னக்குளுத்துப் புல்லலு மாற்றே னருளீமோ
பக்கத்துப் புல்லச் சிறிது”
(கலி-94)
ஏஎ யிஃதொத்த னாணிலன் றன்னொடு
மேவேமென் பாரையு மேவினன் கைப்பற்று
மேவினன் மேவாக் கடையு மவையெல்லா
நீயறிதி யானஃ தறிகல்லேன் பூவமன்ற
மெல்லிணர் செல்லாக் கொடியன்னாய் நின்னையான்
புல்லினி தாகலிற் புல்லினெ னெல்லா
தமக்கினி தென்று வலிதிற் பிறர்க்கின்னா
செய்வது நன்றாமோ மற்று”
(கலி-62)
என்பன போன்ற ‘இளமைதீர் திறம்’, ‘காமத்து மிகுதிறம்’, ‘மிக்க காமத்து மிடல்’ ஆகிய பெருந்திணைப் பாடல்களைத் துறவிகளுக்குக் கற்பித்தல் தகவுடைத்தாகுமா?

புறநானூற்றில், புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலர், நக்கீரர், பரணர், நல்லுருத்திரனார், நல்லந்துவனார் போன்றோர்களின் பாடல்களோடு, சிற்றினம் என ஆன்றோரால் கடியப்பட்டார் சூழலில் அவரோடுகூடி மதுவும் புலாலும் வுண்டு மங்கையருடன் களித்திருக்கும் புரவலர்களைப் போற்றிப் புகழும் பாடல்களும் உள்ளன. ஊரெரியூட்டுதலையும் உயிர்க்கொலையையும், பெண்களின் கண்ணீர்க்கம்பலையையும் வீரம் எனும் பெயரால் நியாயப்படுத்தலை ஆன்மநேயத்தை மக்களிடையே பரப்ப விரும்பும் துறவிகள் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்? சைவப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் உகந்தனவற்றை ஏற்றுப் போற்றியே வந்துள்ளனர்.

முடிவுரை:

1. அகம் புறம் உணர்விலான் அறிவிலாச்சாவி என்பது சைவத் தமிழறிஞர்கள் கருத்து.
2. சங்க இலக்கியங்களின் மரபுத்தொடர்ச்சியும் வளர்ச்சியுமே திருமுறை இலக்கியம்.
3. சங்க இலக்கியப் பயிற்சியின்றித் திருமுறைகளின் இலக்கியச் சுவையை முழுமையாக அனுபவிக்க இயலாது.
4. சங்க இலக்கியங்களில் பண்டைத் தமிழர்களின் உயிர், உலகு, இறை, வினை பற்றிய கருத்துக்கள் காணப்படுகின்றன. அவற்றின் அறிவு சார்ந்த பரிணாம வளர்ச்சியே சைவசித்தாந்தம்.
5. சங்க இலக்கியங்கள் சைவர்களாலேயே காப்பாற்றப் பட்டன.
6. சங்க இலக்கியங்களின் செல்வாக்கு இடைக்காலத்தில் மங்கியதென்றால், அதற்கு வரலாற்றடிப்படையில் வேறு காரணங்கள் உண்டா என ஆராயப்பட வேண்டும்.
7. சங்க இலக்கியங்களின் செல்வாக்கு இடைக் காலத்தில் மங்கியதற்குச் சைவர்கள்தாம் காரணம் என்று கூறுவது இவ்விருவகை இலக்கியங்களையும் ஆழ்ந்து நோக்காது ஒரு சலசலப்பிற்காகப் போகிற போக்கில் எதையாவது சொல்லிச் செல்லுகின்ற அவசரக் கோலமே யன்றி வேறொன்றுமன்று.

(முற்றும்)  நன்றி :-http://www.tamilhindu.com/2015/02/

No comments:

Post a Comment