பழந்தமிழ் இலக்கியத்தின் பள்ளியாகத் திகழ்ந்தவர் ரசிகமணி டி.கே.சி. அவரது ‘வட்டத் தொட்டி’ என்னும் இலக்கிய அமைப்பு தமிழ் அறிஞர்கள் பலர் உருவாகக் களம் அமைத்துக் கொடுத்தது. டி.கே.சி. போல் பின்னாளில் நவீனத் தமிழ் இலக்கியத்தின் சிந்தனைப் பள்ளிகளுள் ஒன்றாக விளங்கியவர் பேராசிரியர் எஸ். ஆல்பர்ட். இவரது கலந்துரையாடல்கள் அடுத்த தலைமுறை ஆளுமைகள் பல உருவாகக் காரணமாயின.
டி.கே.சி பழந்தமிழ் இலக்கியத்தின் அருஞ்சுவையைக் குன்றாமல் எடுத்துச் சொல்லக்கூடிய ஆற்றல் உள்ளவர். அதுகுறித்த தன் ரசனையைக் கட்டுரைகளாக எழுதியிருக்கிறார். ஆனால், படைப்பு என்று எதுவும் எழுதியதில்லை. அதேபோல நவீனத் தமிழ் இலக்கியத்தின், நவீன சினிமாவின் ரசனை அனுபவத்தைச் சுவைபட எடுத்துரைக்கக்கூடியவர் ஆல்பர்ட். இவரும் படைப்பு என்று எதுவும் எழுதியதில்லை. இந்த வகையில் பேராசிரியரை நவீன இலக்கியத்தின் டி.கே.சி. எனலாம்.
குற்றாலக் குறவஞ்சியிலும் கம்பராமாயணத்திலும் பொதிந்திருக்கும் சுவையை டி.கே.சி. விளம்புவதுபோல நகுலன், சுந்தர ராமசாமி, ஞானக்கூத்தன் ஆகிய நவீனக் கவிகளின் கவிதானுபவத்தைச் சித்திரமாக எழுப்பிக் காட்டக்கூடியவர் ஆல்பர்ட். ஆங்கிலப் பேராசிரியராக இருந்தபோதிலும் பழந்தமிழ் இலக்கியத்தின் சுவை அறிந்தவராகவும் இருக்கிறார்.
எஸ். ஆல்பர்ட் திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றியவர். நாற்பதாண்டு காலம் இலக்கிய நல்லாசிரியராக விளங்கிய இவர் தற்போது சென்னையில் வசிக்கிறார். எம்.டி. முத்துக்குமாரசாமி, அம்ஷன் குமார், வெளி ரங்கராஜன், இமையம், ராஜன்குறை, கோ. ராஜாராம், நாகூர் ரூமி, ஜே.டி.ஜெர்ரி போன்ற ஆளுமைகள் உருவாகக் காரணமாக இருந்தவர். அவரது பங்களிப்பைக் கவுரவிக்கும் வகையில் அவரது மாணவர்களில் ஒருவரான எஸ். அற்புதராஜ் பேராசிரியர் ஆல்பர்ட் குறித்த தொகுப்பு நூலைக் கொண்டுவந்திருக்கிறார்.
இதில் தொகுக்கப்பட்டுள்ள அவரது கட்டுரைகளின் மூலம் பேராசிரியரின் பன்முக ரசனை வெளிப்படுகிறது. இலக்கியம் அல்லாமல் சினிமாவிலும் ஓவியங்களிலும் ஆர்வமும் அறிவும் உள்ளவராகவும் பேராசிரியர் இருந்துள்ளார்.
வங்கத்தின் `புதிய அலை சினிமா'வை தன் எழுத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். சத்யஜித் ராயின் தீவிரமான ரசிகராக அறியப்படும் ஆல்பர்ட் ‘சாருலதா’ குறித்து நுட்பமான கட்டுரை ஒன்றை எழுதியிருக்கிறார். ஓவியத்தின் நுட்பங்கள் குறித்த அவரது ஆழமான பார்வை அவரது கட்டுரைகள் மூலம் வெளிப்பட்டுள்ளது. நாடகங்கள் குறித்தும் எழுதியுள்ளார்.
முத்தமிழ் இலக்கியத்தையும் பேசும் பேராசிரியரின் இந்தத் தொகுப்பில் நவீனக் கவிதையியல் குறித்த கட்டுரைகள்தான் அதிகமாக இருக்கின்றன. அவர் நவீனக் கவிதையின் போக்கை நுட்மாக அவதானித்துவந்ததை இதன் மூலம் அறிந்துகொள்ள முடிகிறது. எது கவிதை, தமிழ் நவீனக் கவிதைக்கான இலக்கணங்கள் எவை என அவர் ஆங்கில மரபை முன்வைத்து விளக்க முற்படுகிறார். சொல்லுக்கு அப்பால் செல்லும் நவீனக் கவிதையின் சித்திரத்தை, ‘சூளைச் செங்கல் குவியலிலே/ தனிக் கல் ஒன்று சரிகிறது’ என்ற ஞானக்கூத்தனின் கவிதையைக் கொண்டு எழுப்பிக் காட்டுகிறார்.
தமிழ்க் கவிதைக்கு எழுபது மிக முக்கியமான காலகட்டம். ஆத்மாநாம், சுகுமாரன், ஆனந்த், கலாப்ரியா, கல்யாண்ஜீ, கோ.ராஜாராம், தேவதச்சன், தேவதேவன் எனப் புதிய படையே கிளம்பி வருகிறது. அந்தக் காலகட்டத்தின் கவிதைகளை மதிப்பிட்டு ‘எழுபதுகளில் தமிழ்க் கவிதை’ என்று எழுதியிருக்கிறார். ஒரே ஒரு தொகுப்புடன் எழுதாமல் விட்டுவிட்ட நாரணோ ஜெயராமன் கவிதையையும் குறிப்பிடுகிறார்.
அந்தக் காலகட்டத்தில் உருவான வானம்பாடிக் கவிதைகளைக் குறித்துச் செறிவாகக் கட்டுரையில் மதிப்பிடுகிறார். ‘எழுபதுகளில் கவிதையில் நிகழ்ந்த ஒரு உரத்த நிஜம் வானம்பாடிகள்’ என்கிறார். அவர்களின் கவிதைகள் நேரடியாக இருந்ததற்கான காரணங்களை சமூகப் பின்னணியிலிருந்து அலசிப் பார்க்கிறார்.
பேராசிரியர் குறித்துத் தமிழின் முக்கியமான ஆளுமைகள் எழுதிய கட்டுரைகளும் இதில் தொகுக்கப் பட்டுள்ளன. அவற்றில் எஸ்.வி. ராஜதுரை, எம்.டி. முத்துகுமாரசாமி, அம்ஷன் குமார், ராஜன்குறை ஆகியோரது கட்டுரைகள், பேராசிரியரின் ஆளுமை குறித்த துல்லியமான மனச் சித்திரத்தை உருவாக்கு கின்றன.
பேராசிரியரின் கட்டுரை மொழி சிநேகமானது; எடையற்றது; உள்ளடக்கத்தில் செறிவுடையது. சுருங்கச் சொல்லுதல் என்பதையும் இந்தக் கட்டுரைகள் மூலம் உணர முடிகிறது. எழுத்துகள் மிதமிஞ்சி உற்பத்திசெய்யப்படும் இந்தக் காலகட்டத்தில் பேராசிரியரின் இந்தக் கட்டுரைகள், வாசிப்புக்குச் சுவை கூட்டுகின்றன.
ஆல்பர்ட்டின் கட்டுரையிலிருந்து…
பிரெஞ்சு மொழி எழுத்தாளன் காம்யு (Camus) ஒரு சினிமாவில் உட்கார்ந்திருக்கிறான். பக்கத்தில் ஒரு பெண்; அருகில் கணவன். திரையில் கதாநாயகன் படும் துயரங்களை கண்ணீர் வடிக்கிறாள் மனைவி. அழுகையை நிறுத்துமாறு மன்றாடுகிறான் கணவன். கண்ணீருக்கிடையில் அவள் சொல்கிறாள், “சற்று விடுங்கள் என்னை, அழுது தீர்த்துக்கொள்கிறேன்” என்று. இந்த நிகழ்ச்சியைத் தன் குறிப்புப் புத்தகத்தில் எழுதி வைத்த காம்யு, இதைப் பற்றிய தன் எண்ணங்களை நமக்குச் சொல்லவில்லை. நமக்கு என்ன படுகிறது?
1.பொது இடத்தில் நாலுபேர் மத்தியில் அழலாமா என்று அவள் கவலைப்படவில்லை.
2. கணவனை அருகில் வைத்துக்கொண்டு யாரோ ஒரு அந்நியக் கதாநாயகனுக்காகக் கண்ணீர் விடுகிறோமே என்று அவள் வெட்கப்படவில்லை. மாறாக ‘இன்னும் கொஞ்சம் அழுதுகொள்கிறேன்’ என்கிறாள்.
3. ஏதோ அழுது சுகங்காணவே சினிமாவுக்கு வந்திருப்பாள் போலிருக்கிறது.
இந்தக் குறிப்பில் வேடிக்கைதான் தொனிக்கிறது… இந்தப் பெண்ணுடைய அனுபவம் விநோதமானது. இவள் பிறனுக்காக அழவில்லை. தனக்காகத்தான் அழுதுகொண்டாள். தன்னுடைய துயரங்களை நினைத்துக்கொண்டிருக்கலாம் என்று சொல்லக் கூடாதா? சொல்லலாம். ஆனால், இந்தப் பெண் தனக்காக அழுதாலும்கூட இவள் தன் அயலானில் தன்னைக் கண்டிருக்கிறாள். இப்படி ஒருவரில் ஒருவரைக் கண்டு ஒருவரில் ஒருவர் கலந்து எல்லாம் தன்மயமாகும் வாழ்க்கை அனுபவம் இனியது.
பேராசிரியர் எஸ். ஆல்பர்ட்
தொகுப்பாசிரியர்: எஸ். அற்புதராஜ்
வெளியீடு: மலைகள் பதிப்பகம், 119 முதல் மாடி,
கடலூரி மெயின் ரோடு, அம்மாப்பேட்டை
சேலம்-636 003. விலை ரூ. 250.
தொலைபேசி: 89255 54467
- மண்குதிரை
தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in
நன்றி :- தி இந்து
No comments:
Post a Comment