Pandiyaraja <pipiraja@gmail.com>: Oct 30 10:15PM -0700
அன்புடையீர்!
குறிப்பிட்ட நாளுக்கு ஒருநாள் முன்னதாகவே வருகிறது சிறுபாணாற்றுப்படை
முதற்பாடம். செரிக்க நேரமெடுக்கும் என்ற காரணத்தால் கொஞ்சமாகவே
கொடுத்திருக்கிறேன். அதனால்தான் இத்துணை சீக்கிரம். பழகப் பழக அகப்பை
பெரிதாகும். வந்து விழுவதும் அதிகமாகும்.
நன்றி.
சுவைத்துவிட்டுச் சொல்லுங்கள். அருமையான உணவு எனில் அதை ஆக்கியவருக்குத்தான்
பெருமை. எடுத்துப்போட்டவருக்கு அல்ல.
ப.பாண்டியராஜா
*மாநில மடந்தை*
மிகவும் அழகான ஓர் உருவகத்துடன் தன் பாடலைத் தொடங்குகிறார் சிறுபாணாற்றுப்படைப் புலவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார். இந்தப் பெரிய நிலவுலகத்தை ஒரு மடந்தையாகப் பார்க்கிறார் அவர். தம் பாடலின் தொடக்கக் காட்சியாக அவர் நம் கண்முன் காட்டுவது நெடுந்தொலைவில் நீண்டுகிடக்கும் ஒரு நெடிய மலைத்தொடர். அந்த மலைத்தொடரை மாநில மடந்தையின் பருத்த தோள்களாகக் காட்டுகிறார் அவர்.
அந்த மலையினின்றும் இழிந்து வருகிறது ஓர் காட்டாறு. மலை முகடுகளினின்றும் தாவிக் குதித்து வரும் இந்தக் காட்டாறு, அந்த நில மடந்தையின் மார்புகளினின்றும் கீழே விழுந்து அசைந்துகொண்டிருக்கும் முத்து மாலையைப் போன்று இருக்கிறதாம். தாவிவிழும் அந்தக் காட்டாறு இருமருங்குப் பாறைகளிலிலும் முட்டிமோதி அல்லல்பட்டு, பின்னர் நெடுந்தொலைவு பயணம்செய்து நாட்டுக்குள் வரும்போது முற்றிலும் காய்ந்துபோன ஆறாக மாறிநிற்கிறது.
கருமணல் நிறைந்த காய்ந்துபோன காட்டாறு நிலமடந்தையின் கூந்தல் விரிந்து கிடப்பதைப் போல் பரந்து கிடக்கிறது. கரையோரத்து மரங்களில் குயில்கள் குத்திக்குடைவதால் உதிர்ந்த பூக்கள் அந்த மணற்கூந்தலில் சூடிய மலர்களாய்க் காட்சியளிக்கின்றன. ஆற்றின் ஓரங்களில் அலையலையாய்க் கிடக்கும் நுண்ணிய கருமணல், நிலமடந்தையின் தலைப்புறத்தில் நீண்டு சுருண்டுகிடக்கும் மயிர்ச்சுருளாய்த் தெரிகின்றன.
இதோ இந்த உருவகத்தைப் புலவரின் சொற்களில் படியுங்கள்:-
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போலச்
செல் புனல் உழந்த சேய் வரல் கான்யாற்றுக்
கொல் கரை நறும் பொழில் குயில் குடைந்து உதிர்த்த
புதுப் பூஞ் செம்மல் சூடிப் புடை நெறித்துக்
கதுப்பு விரித்து அன்ன காழ் அக நுணங்கு அறல்
இதன் அடிநேர்ப் பொருள்:
(பச்சை)மணியாகிய மலையே தோள்களாகவுள்ள பெரிய நிலமாகிய மகளின்
அழகிய முலையின்கண் கிடந்து அசைந்துநிற்கும் முத்துமாலை போல,
ஓடுகின்ற நீர் வருந்தின, தொலைவினின்றும் வருகின்ற, காட்டாற்றின்
இடிகரையில் உள்ள மணமிக்க பொழிலிடத்தே குயில்கள் (அலகால்)குடைந்து உதிர்த்த
புதிய பூக்களாகிய வாடலைச் சூடி, (தம்)பக்கங்களில் அறல்பட்டு,
5
தலைமயிர் விரித்ததைப் போன்ற கரியநிறத்தைக் கொண்ட நுண்ணிய கருமணல்,
இனி, இந்த உருவகத்தை ஒவ்வொரு அடியாகவும், ஒவ்வொரு சொல்லாகவும் எடுத்து அசைபோடுவோம்.
முதல் இரு அடிகளை முற்றிலும் வேறாக உரைகாரர்கள் பிரித்துக் கூறுவர்.
‘பணைத்தோள் மாநில மடந்தை, மணிமலை அணிமுலைத் துயல்வரும் ஆரம்போல’ என்று மணிமலையை அணிமுலைக்கு உருவகமாகக் கொள்வர். ஒரு பாடலில் எடுத்த எடுப்பில் முதல் அடியை ஒடித்து மடக்கி இவ்வாறு பொருள்கொள்ளும் வண்ணம் ஒரு புலவர் பாடியிருப்பாரா என்பது ஐயமே. மேலும் இவ்வாறு கொள்வது உருவகத்தின் ஒட்டுமொத்தப்பார்வைக்கு உகந்ததாக இல்லை என்பது என் கருத்து. எனவேதான் மணிமலை என்பது பணைத்தோளுக்கு உருவகமாகக் கொள்ளப்பட்டுள்ளது.
பணை என்பதற்கு மூங்கில் என்ற பொருள் இருந்தாலும், இங்கு பருமை என்ற பொருளே பொருத்தம் எனத் தோன்றுகிறது. பச்சை மரங்களால் போர்த்தப்பட்ட மலைத்தொடரை மணி மலை என்கிறார். மணி என்பது எந்த விலையுயர்ந்த கல்லாகவும் இருக்கலாம். இங்கு அது மரகத மணி.
*மணி மிடைந்து அன்ன குன்றம் கவைஇய* - அகம் 14/4
என்று அகநானூற்றில் வருவதைக் காணலாம். எனவே பச்சை மரகதத்தைப் பதித்தது போன்ற
பச்சைப்பசேலென்ற நெடிய மலையே நிலமடந்தையின் தோள்களாம். இதனையே உருவகமாக,
மணி மலைப் பணைத் தோள் மா நில மடந்தை
என்கிறார் புலவர். இதோ (பச்சை மரகத)மணி மலையைப் பாருங்கள்.
<https://lh3.
சரி, இது எப்படி ஒரு மங்கையின் தோளாகும்? இந்த மலையையே ஒரு நெடிய
மலைத்தொடராகப் பாருங்கள். அந்த மலைத்தொடரே பருத்த தோள்களாம். இதோ அந்தத் தோள்.
<https://lh3.
இங்கே இந்த மலைத்தொடரை அடுத்திருக்கும் மலை முகடுகள்தான் மங்கையின் முலைகள்
என்பதை வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் அது உருவகத்தின் நீட்டிப்பாகவே
அமைகிறது. இவ்வாறு சொல்வது ஏகதேச உருவகம் ஆகும் என்பர்.
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேரா தார் – குறள் 1:10
என்ற குறளில் பிறவியைப் பெருங்கடல் என்றவர், இறைவன் அடியே அதனை நீந்திக் கடக்க
உதவும் தெப்பம் என்று கூறவில்லை. இதைப்போலவேதான் நெடுமலையைத் தோளாகச் சொன்னவர்
அதனை அடுத்திருக்கும் சிறுகுன்றுகளை மார்புகளாகச் சொல்லவில்லை.
மலை முகடுகளை மார்புகளாகச் சொல்லாமற் சொன்னவர், அந்த மார்பிலாடும் ஆரமாக
ஆற்றினைச் சொல்லவில்லை என்பதைக் கவனிக்கவேண்டும். மாறாக அதனை ஓர் உவமம்
ஆக்குகிறார். முதலில், ஒரு தொலைவுக் காட்சியாக, மார்பிலிருந்து தொங்கும்
மாலையை மலைகளினூடே பாய்ந்துவரும் காட்டாறாகச் சொன்ன புலவர், பின்னர்
அண்மைக்காட்சியாக அதே ஆற்று மணற்பரப்பை மடந்தையின் கூந்தலுக்கு (கதுப்பு
விரித்தன்ன) உவமையாக்குகிறார். ஏதேனும் ஓரிடத்தில் இதனை உருவகம்
ஆக்கியிருந்தால் அடுத்த இடத்தில் அது உருவக நீட்சியாக இல்லாமற் இடர்ப்படும்
என்றே, ஆற்றினைப்பற்றிய இரண்டு இடங்களிலும் புலவர் அதனை உவமைகளாகக்
கூறியுள்ளார் எனலாம்.
புலவர் காட்டாற்றை, ‘அணி முலைத் துயல்வரூஉம் ஆரம் போல‘ என்று கூறுகிறார்.
துயல்வருதல் என்பது முன்னும் பின்னும் ஆடுதல். இந்தச் சொல்லுக்கு இங்கு என்ன
வேலை? மார்பின் இருபக்கங்களினின்றும் இறங்கித் தொங்கி முன்னும் பின்னும்
ஆடிக்கொண்டிருக்கும் மாலையைப் போன்ற காட்டாறு எப்படியிருக்கும்? ஒன்றை நாம்
கவனிக்கவேண்டும். இது தொலைவுக்காட்சி. எனவே தூரத்து மலையில் இப்படி ஒரு
காட்சியைப் புலவர் பார்த்திருக்கவேண்டும். அவர் பார்த்த காட்சி என்னவாக
இருக்கும்? அடுத்தடுத்த இரண்டு மலைச்சரிவுகளிலிருந்து இறங்கி வரும் இரண்டு
காட்டாறுகள் அடிவாரத்தில் ஒன்றாய் விழுந்து, பின் எழுந்து முன்பக்கமாய்ச்
சிறிது ஓடித் தாவிக்குதிக்கிறது என்று கற்பனைசெய்துகொள்ளலாம். இதோ பாருங்கள்
ஒப்புமையை:-
<https://lh3.
ஆக, இவ்வாறு குதித்துக் குதித்து வரும் காட்டாறினையே புலவர் துயல்வரும்
மாலைக்கு உவமையாகக் கூறியிருக்கிறார் எனலாம்.
அடுத்து, செல்புனல் உழந்த சேய்வரல் கான்யாறு என்பதை, செல் புனல் உழந்த
கான்யாறு, சேய்வரல் கான்யாறு என இரண்டாகப் பிரிக்கலாம். பாறையிடுக்குகளில்
அடித்துக்கொண்டும், மோதிக்கொண்டும் வரும் ஆற்றையே செல் புனல் உழந்த என்கிறார்.
உழந்த என்றால் வருந்திய என்று பொருள். தொலைதூரத்திலிருந்து அந்த ஆறு வருவதாகப்
புலவர் கூறுகிறார். சேய் என்பது சேய்மை என்ற பொருளில் மிகுந்த தொலைவைக்
குறிக்கும். மலையை விட்டிறங்கி வெகுதூரம் கடந்து வந்த ஆற்றின் கரையில் இப்போது
|
Picture comparisons are super.
|
Saturday, October 31, 2015
சிறுபாணாற்றுப்படை – சிறுபாணன் செல்வழி – ஒரு படவிளக்க உரை
Labels:
நூல் அறிமுகம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment