உலகமெங்கும் ஸ்மார்ட் போனில் செய்தி வாசிக்கும் பழக்கம் அதிகரித்துகொண்டுவரும் நிலையில், அச்சு இதழியலின் அந்திமக் காலம், இந்தியாவையும் நெருங்கிக்கொண்டிருக்கிறது என்ற வாதம் பரப்பப்பட்டுவருகிறது. இந்த நிலையில், தன்னுடைய 20-ம் ஆண்டு சிறப்பிதழை 'இந்திய நவீன இதழியலின் சிறப்பிதழாக' அமர்க்களமாகக் கொண்டுவந்துள்ளது ‘அவுட்லுக்'.
இந்தியாவில் 70-களுக்குப் பிறகே ஆங்கில வார இதழ்கள் பிரபலமடைய ஆரம்பித்தன. இந்த வரிசையில் சற்றே பின்தங்கி 1995-ல் சேர்ந்த `அவுட்லுக்' தனித்தன்மையையும் துணிச்சலையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொண்டுள்ளது.
சுருக்கமாக 'அவுட்லுக்'கை வரையறுக்க இந்த ஒரு உதாரணம் போதும்: எல்லா இதழ்களும் 'தங்களுடைய இதழ் ஏன் பிடிக்கும்' என்று பிரபலங்களின் கருத்தைப் பிரசுரிக்கும் நிலையில், 'இந்த இதழ் ஏன் பிடிக்கவில்லை' என்ற பகுதியை நீண்டகாலம் கொண்டுவந்தது 'அவுட்லுக்'.
சிறப்பிதழ்களில் பொது வழக்காக, தங்களுடைய பழைய இதழ்களின் சிறந்த பகுதிகள், தங்கள் இதழைப் பற்றிய பாராட்டுகள், சில நேரம் முகஸ்துதிகள் போன்றவையே நிரம்பியிருக்கும். ஆனால், அப்படிச் செய்யாமலிருப்பதுதான் 'அவுட்லுக்'கின் மரபு.
தனக்குப் போட்டி பத்திரிகையாக இருந்தாலும் வயதில் மூத்த இதழான 'இந்தியா டுடே' இதழின் பழைய அட்டை, அதன் நிறுவனர் அருண் பூரியின் படங்களை முழுப் பக்கத்துக்குப் பிரசுரித்து, பாராட்டும் தன்மை இந்தியாவில் எத்தனை இதழ்களுக்கு உள்ளது?
அதேபோல, வடநாட்டு ஆங்கிலப் பத்திரிகை நிறுவனங்களின் பார்வை வட்டத்துக்குள் மாநில மொழி இதழ்கள்-நாளிதழ்கள் எல்லாம் மருந்துக்குக்கூட இடம்பெறாது. ஆனால், தமிழ் தொடங்கி ஒவ்வொரு மாநில மொழி இதழ்கள் பற்றியும் விரிவான அலசல் கட்டுரைகள் இந்தச் சிறப்பிதழில் இடம்பிடித்துள்ளன. அத்துடன் இந்தியாவில் நவீன இதழியலின் தன்மைகள், பங்களிப்பு, வரலாறு பற்றி பல்வேறு நிபுணர்கள் எழுதிய கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.
மேலும் 'அவுட்லுக்' எப்படித் தயாராகிறது, எந்தெந்தக் கட்டங்களைத் தாண்டி வருகிறது என்பது சுருக்கமாகத் தரப்பட்டிருக்கிறது; அரிய, பழைய படங்கள், பல்வேறு இதழ்களின் முக்கிய அட்டைப் படங்கள் மீள்பிரசுரம் செய்யப்பட்டுள்ளன; பிரபல அமெரிக்க இதழ்களான 'நியூஸ்வீக்', 'டைம்', 'நியூயார்க்கர்' தவிர, 'ஆசியா வீக்' பற்றிய விரிவான கட்டுரைகள்; 20 பிரபல எழுத்தாளர்களின் 20 வார்த்தைக் கதைகள்; 'அவுட்லுக்' செய்தியாளர்களின் முந்தைய இதழியல் அனுபவங்கள்; அதன் நீண்டகால ஆசிரியர் வினோத் மேத்தா, முன்னதாக ஆசிரியர் பதவி வகித்த பாலியல் சார்ந்த இதழான 'டெபோனர்' பற்றிய கட்டுரை... சிறப்பிதழ் பட்டியல் நீள்கிறது. பொது வாசகர்களுக்குப் புதிய வாசிப்பனுபவத்தைத் தருவதுடன் ஊடகவியல் மாணவர்களுக்கான பாடப் புத்தகமாகவும் பயன்படக்கூடியது இந்தச் சிறப்பிதழ்!.
நன்றி :- தி இந்து
No comments:
Post a Comment