Tuesday, October 27, 2015

சாதனையாளர்களின் சரித்திரம் எழுதுவதே என் பணி! -


திருமதி தி.சுபாஷிணி 1953-ஆம் ஆண்டு  ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்தவர். ஆனால், பத்து வயதிலேயே சென்னைக்கு வந்துவிட்டார். மதுரை பல்கலைக்கழகத்தில் வரலாற்றுப் பாடத்தில் இளங்கலையும், சென்னை பல்கலைக்கழகத்தில் 1974-75களில் இதழியல் டிப்ளமாவும் படித்தவர். திருநெல்வேலி தி.க.சிவசங்கரன் பிள்ளையுடன் தந்தை - மகள் உறவுடன் பழகியவர். பல்வேறு இலக்கிய வட்டங்களில் வலம் வந்துகொண்டே, வல்லமை.காம் என்ற இணையத்திலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது முன்னணியில் இருக்கும் நவீன இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள் என இவருடைய நட்புவட்டம் பரந்து விரிந்தது. பல நூல்களை எழுதியிருந்தாலும், இவரை பலருக்கும் அடையாளம் காட்டியது திருக்குறளை "ஹைக்கூ' வடிவில் கொண்டுவந்ததுதான். சாதிப்பதற்கும், எழுதுவதற்கும் வயது ஒரு தடையில்லை என்பதை நிரூபித்திருக்கும் அவரை, தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசியதிலிருந்து...

உங்கள் படைப்பிலக்கிய உலகின் முகவரி யார்?

என்னுடைய முகவரியே காந்தியவாதியான ப.ஈ. திருமலை மகள் என்பதுதான். அவர் வினோபாவுடன் பூமிதான இயக்கத்தில் ஈடுபட்டவர். 1942 "வெள்ளையனே வெளியேறு' இயக்கத்தின்போது தன் படிப்பை நிறுத்திவிட்டு, சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அதற்காகவே தன் சொத்துகளை வழங்கியவர். அ. சீனிவாச ராகவனின் மாணவர். நீதியரசர் மகராஜன் மூலம் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரின் அறிமுகம் இவருக்குக் கிடைத்தது. அவரது நட்பால் சத்தியத்தின் தரிசனத்தைப் பார்த்தவர்.

ரசிகமணி டி.கே.சி.க்காகவே 12 ஆண்டு காலம் "உலக இதய ஒளி' எனும் காலாண்டு இலக்கிய இதழை நடத்தியவர். மதுரையில் காந்திய தத்துவப் பிரச்சாரகராக "காந்தி நினைவு நிதி' அலுவலகத்தில் பணியாற்றியவர். அக்காலத்தில் ஜவகர்லால் நேரு, டாக்டர் ராஜேந்திர பிரசாத், டாக்டர் ராதாகிருஷ்ணன் முதலிய பல ஆளுமைகள் காந்தி அருங்காட்சியகத்துக்கு வருவார்கள். பேராசிரியர் அ. சீனிவாச ராகவன், டாக்டர் தெ.பொ.மீ., குன்றக்குடி அடிகளார் முதலிய இலக்கிய ஆளுமைகளின் சொற்பொழிவுகள் அங்கே நடைபெறும். பள்ளி, கல்லூரி நேரங்கள் தவிர, நாங்கள் இந்தச் சூழலில்தான் வளர்ந்தோம். அப்போது என் தந்தை கம்பனுக்கும், காந்திக்கும் கவியரங்கமும், பட்டிமன்றமும் நடத்தினார். இதையெல்லாம் பார்த்து வளர்ந்ததாலோ என்னவோ என்னுள்ளும் இலக்கியத்தின், காந்தியத்தின் தாக்கம் ஏற்பட்டு, எழுத வேண்டும் என்ற உத்வேகம் பிறந்தது.

"ரசிகமணி' டி.கே.சி.யின் குடும்பத்தினருடனான நட்பு - உறவு எப்படிப்பட்டது?

தமிழூர் ச.வே.சு. ஐயா ஆலோசனையின் பேரில் ரசிகமணி டி.கே. சிதம்பரநாத முதலியாரின் வரலாற்றினை நூலாக எழுதத் தொடங்கினேன். அதற்கான தரவுகளைச் சேகரிக்கும்போது, ரசிகமணியின் பெயரன் தீப. நடராஜன், தீப. குற்றாலிங்கம் ஆகியோரை தென்காசியில் சந்தித்தேன். அதிலிருந்து அவர்கள் குடும்பத்தார், சுற்றத்தாருடன் நல்ல உறவு ஏற்பட்டது. டி.கே.சி.யின் வரலாறும், அவரது பண்பு, வாழ்வியல் அனைத்தையும் உள்ளடக்கிய நூலாக "தடம் பதித்த மாமனிதன் ரசிகமணி டிகேசி' என்று நூல் வெளியிட்டேன். இப்புத்தக வெளியிட்டு விழா ஒரே சமயத்தில் சென்னை, தென்காசி, திருநெல்வேலி, திண்டுக்கல், ராஜபாளையம், புதுவை, கோவை ஆகிய 7 இடங்களில் நடந்தது மறக்கமுடியாத நிகழ்ச்சி.

வினோபாஜியுடன் பணியாற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனைப் பற்றி நூல் எழுதியிருக்கிறீர்கள்... அவரை எப்படித் தெரியும்?

என் தந்தையுடன் பூதான இயக்கத்தில் பணியாற்றிய கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனுடன் சிறுவயது முதலே நாங்கள் பழகியிருக்கிறோம். ஒன்றாக வளர்ந்திருக்கிறோம். 40 ஆண்டுகளுக்குப் பிறகு அவரை மீண்டும் சந்தித்தேன். அவரது பணிகளைப் பற்றி அறிந்தேன். அவரை நாங்கள் "கிருஷ்ணம்மாக்கா' என்றுதான் அழைப்போம். அவர் வாழ்க்கைச் சாதனைகளை "நடை நின்றுயர் நாயகி' என்ற நூலாக வடித்தேன். அதற்கு காந்தி நினைவு நிதி "காந்தி இலக்கிய நூலுக்கான' முதற்பரிசு கிடைத்தது.

எத்தனை நூல்கள் வெளியிட்டிருக்கிறீர்கள்?

ஹைக்கூ வடிவில் திருக்குறள் கருத்துக்கள், தமிழகப் பெண்ணின் சாதனைப் பரல்கள், தமிழ் வளர்ந்தது இப்படித்தான், பன்முகப் பார்வையில் பைந்தமிழ் இலக்கியம், வண்ணதாசனின் வண்ணச் சிறகுகள் போன்றவை. குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், வித்வான் ல. சண்முகசுந்தரம், அவரது கவி சொல்லும் விதம், அவருடைய நூல்கள் ஆகியவற்றைப் பற்றி "கண்டறியாதன கண்டேன்' என்னும் நூல் வெளியிட்டேன்.

ரசிகமணி நூலுக்காக நான், திருநெல்வேலி தி.க.சிவசங்கரன் பிள்ளை ஐயாவை பார்க்கச் சென்றதையும் அவருடன் உரையாடியதையும் அவரது கருத்துகளையும் இணைத்து "தந்தைமை தவழும் வளவு வீடு' எனும் நூலாக்கி, அவரது 86ஆவது பிறந்தநாளில் பரிசளித்தேன்.

வல்லமை.காமில் எழுதிய கட்டுரைகளைத் தொகுத்து "உணர்வறியும் உணர்வு' என நூலாக வெளியிட்டேன். அந்த நூலுக்கு 2014க்கான திருப்பூர் அரிமா சங்கத்தின் "சக்தி' விருது கிடைத்தது. பிறந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர் என்பதால், ஆண்டாளுக்கு ஒரு பள்ளியெழுச்சி பாடவேண்டும் என்ற ஆசையில், முப்பது பாடல்களில் "நாச்சியார் பள்ளியெழுச்சி' பாடியுள்ளேன். இதுவரை வெளிவந்திருக்கும் 13 நூல்களில் 10 நூல்களின் பதிப்புச் செலவை என் மகள்கள் இருவருமே ஏற்று வெளியிட்டுள்ளனர்.

எப்போதிலிருந்து எழுதத் தொடங்கினீர்கள்?

எனது 55ஆவது வயதில் எதிர்பாராத அருமையான ஒரு வாய்ப்புக் கிட்டியது. மைசூரிலுள்ள இந்திய மொழிகளின் நடுவண் நிறுவனத்தில் தமிழ்ச் செம்மொழிக்கான நிறுவனம் செயல்படத் தொடங்கிய நேரம் அது. எனக்கு அங்கு "மெய்ப்புத் திருத்துநர்' வேலை கிடைத்தது. அதுதான் என் வாழ்வில் வசந்த காலம். எல்லோரும் நூலகத்திலிருந்து செம்பதிப்பு, பதிப்பு, மொழிபெயர்ப்பு என அனைத்துத் திட்டப்பணிகளிலும் பணிபுரிந்தோம். இங்கிருந்துதான் என் எழுத்து உருவானது. குறிப்பாக தமிழூர் ச.வே.சுப்பிரமணியன் ஐயாவின் ஊக்கம் என்னை நிறைய ஆய்வுக் கட்டுரைகளை எழுதத் தூண்டியது.

"குறுகத் தரித்த குறளை' மேலும் குறுக்கி "ஹைக்கூ'வாக எழுத வேண்டும் என்று எப்படித் தோன்றியது?

என்னுடன் பணிபுரிந்தவர்களில் யு.ஜெயபாரதியும், ந.தேவியும் எனக்கு மிகவும் நெருக்கமானவர்கள். ஜெயபாரதி ஒரு நாள், "அம்மா! உங்கள் கவிதைகளில் எளிமை இருப்பதால், நாம் ஏன் திருக்குறளை மேலும் எளிமைப்படுத்தி "ஹைக்கூ' வடிவில் தரக்கூடாது?' என்று கேட்டார். உடனே நானும் ஜெயபாரதி, ந.தேவி மூவரும்  அப்பணியைச் செய்யத் தொடங்கினோம். திருக்குறளில் மிகச்சிறந்த 10 உரைகளைத் தேர்ந்தெடுத்து, அதன் நேரடி பொருளைக் கண்டு, உள்வாங்கிக் கொண்டு, குறளின் எழுசீரை ஐந்து சீராக்கி, அதற்கொரு வடிவமும் கொடுத்தோம். இந்நூல் தோழியர் மூவரின் முயற்சியால் உருவானது.

அவற்றில் ஒன்றைக் கூற முடியுமா?

"பிறர்க் கின்னா முற்பகல் செயின் / தமக்கு இன்னாபிற்பகல் தாமே வரும்' என்ற குறளை,

முன் செய்யின்
பின் 
விளையும் 

என்று உருவாக்கினோம். மைசூரில் உருவான இந்நூல், செம்மொழி நிறுவனம் சென்னைக்கு மாற்றப்பட்டதால், நாங்களும் சென்னைக்கு வந்து, அந்நூலை வெளியிட்டோம்.

தாங்கள் பணிபுரிந்துவரும் அமைப்புகளைப் பற்றி...

சென்னை தி.நகரில் உள்ள தக்கர் பாபா வித்தியாலயாவில் போர்டு மெம்பராகவும், தக்கர் பாபா பெண்கள் விடுதியில் கமிட்டி மெம்பராகவும், பம்மல் ஞானானந்தா டிரஸ்டில் டிரஸ்ட் உறுப்பினராகவும், தி.நகர், காந்தி பயிற்சி மையத்தில் உறுப்பினராகவும் இருக்கிறேன்.

தங்களின் எதிர்கால இலக்கிய இலக்கு...

இலக்கியவாதிகள், சாதனையாளர்கள், காந்தியவாதிகள், சமூக ஆர்வலர்கள் போன்றோரின் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதுதான்.  தற்போது பலரும் அறியாத மிகச்சிறந்த காந்தியவாதியான "தக்கர் பாபா' பற்றிய வாழ்க்கை வரலாற்றை எழுதி வருகிறேன்.

நன்றி :-இடைமருதூர் கி.மஞ்சுளா :தினமணி

No comments:

Post a Comment