பாரதியின் ‘வசன கவிதைகள்’ தமிழ்க் கவிதையின் இறுக்கத்தைத் தகர்த்தது. அதன் பிறகு ந.பிச்சமூர்த்தி, க.நா.சுப்ரமண்யம் போன்றோர் மேற்கில் எழுதப்பட்ட கவிதைகளை அடிப்படையாகக் கொண்டு இங்குப் புதுக்கவிதையைப் படைத்தனர். அவர்களுள் க.நா.சு. முற்றிலும் யாப்பைக் களைந்து சுத்த உரைநடையில் கவிதைகளை எழுதிப் பார்த்தார். இத்தன்மையால் தொன்மை கொண்ட தமிழ்க் கவிதைமரபு, புதுக்கவிதை வழியாகப் புதிய சமூகத்தின் குரல்களுக்கு வழிவிட்டது.

கிராமப்புற வாழ்வியலை, வட்டாரக் கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் அம்சங்கள் பாரதி காலம் தொட்டே தமிழ்க் கவிதையில் வெளிப்பட்டுவருபவை. ஞானக்கூத்தனின் சில கவிதைகளிலும் இதைப் பார்க்க முடிகிறது. கலாப்ரியா, விக்ரமாதித்யனிடம் வலுப்பெற்ற இந்தப் போக்கு எண்பதுகளின் இறுதியில் எழுதவந்த மு. சுயம்புலிங்கத்தின் கவிதைகளில் முழு வீச்சுடன் வெளிப்பட்டது. எழுத்தாளர் கோணங்கி, சுயம்புலிங்கத்தின் சிறப்பிதழாகக் கல்குதிரை இதழைக் கொண்டுவந்தார். ‘நாட்டுப் பூக்கள்’ என்னும் தலைப்பிலான அந்தத் தொகுப்பின் மூலம் ‘நாட்டுப் பூக்கள்’ சுயம்புலிங்கம் என்றே அவர் அறியப்பட்டார்.

தெற்கத்தி ஆன்மாக்களின் வெளிப்பாடு

மு.சுயம்புலிங்கத்தின் கவிதை மொழி, வட்டார வழக்கிலானது. கரிசல் நிலத்தில் ஈரம் பிடித்த சொற்கள் அவை. அது கி.ராஜநாராயணனின் கரிசல் மொழியின் நவீன வடிவம் எனலாம். கவிதைக்கெனப் பிரத்யேக சொற்களை அவர் தேடிச்செல்லவில்லை. சுதந்திர இந்தியாவின் கரிசல் கிராமத்தைத் தன் மொழியின் மூலம் துலக்கப்படுத்தியவர் கி.ரா. சுதந்திரக் கனவுகள் நொறுங்கிப் போன, நெருக்கடி நிலைக்குப் பிறகான கரிசல் நிலத்தைத் தன் கவிமொழியின் மூலம் காட்சிப்படுத்தியவர் சுயம்புலிங்கம்.

கரிசல் நிலத்தின் வறுமைதான் சுயம்புலிங்கத்தின் உரத்த குரலாக அவரது மொத்தக் கவிதையிலும் தொடர்ந்து வெளிப்படுகிறது. வறுமையின் பல்வேறு பரிமாணங்களைக் கவிக் காட்சிகள் மூலம் சித்திரிக்கிறார் சுயம்புலிங்கம். சோளக் கதிர்களைத் திருடிப் பிடிபடும் பெண், வானத்தை மிதிப்பதுபோலக் காலைத் தூக்கிக் கிடக்கிறாள் என்கிறது ஒரு கவிதை. பசியால் அழும் குழந்தை பூமியை மிதிக்கிறது. பூமி அதை வாங்கிக் கொள்கிறது என்கிறது அவரது மற்றொரு கவிதை. கரிசல் நிலத்தில் சூரியனைப் போல இறங்கி விளையாடுகிறது வறுமை. இந்தப் பஞ்சத்தைப் போக்க அரசு என்ன செய்தது எனக் கவிதை வழியாக சுயம்புலிங்கம் கேள்வியும் எழுப்புகிறார்.
சுயம்புலிங்கத்தின் கவிதைகளுக்குத் தீர்க்கமான அரசியல் பார்வை உண்டு. ஆனால் அதை அந்தரக்கனியாக மாற்றாமல் நமக்கு அருகே வைக்கிறார். தண்ணீரால் வயிறு ஊதப்பட்ட அடிமாட்டைத் தமிழ்ச் சமுதயாம் என்கிறார். கம்யூனிஸ்டுகளையும் ஊர் மடத் திண்ணையின் மூத்த கிழடுகளின் குரல் கொண்டு விமர்சிக்கிறார். கம்யூனிஸ்டுகள் முதலில் ஒரு தொண்டையில் பேச வேண்டும் என்கிறார்.

மக்களின் குரலில் கவிதை

தமிழில் சுயம்புலிங்கம் அளவுக்குப் பாட்டாளிவர்க்கக் குரலைப் பதிவுசெய்த கவிஞன் இல்லை எனலாம். ‘நாங்கள் தொள்ளாளிகள்/பீ மணக்கும் கிராமங்களில்/ வறுமை எரிக்கும் குடிசைகளில்/... முடங்கிப் போனோம்” என்கிறார். இவரது கவிதையில் கதைகளுக்கு இணையான மாந்தர்கள் வருகிறார். எல்லோரும் பாட்டாளிகள். வானத்தின் மேகங்களைப் பணியவைக்க முயலும் கரிசல் காட்டு விவசாயி, நகரின் ‘நடுசென்டரில்’ வசிக்கும் வீடற்றவன், குப்பைக் குவியல் இரைதேடும் தாய், பனையேறி, பசியால் அழும் சிறுவர்கள் என, வந்துகொண்டே இருக்கிறார்கள்.
அதுபோல வெள்ளைச் சோறும் சுயம்புலிங்கத்தின் கவிதைகளில் ஒரு கனவு போல வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பஞ்சம், கரிசல் நிலங்களைச் சோற்றுக்கு அலையவைத்த கதையை இவரது கவிதைகள் காவிய துயரத்துடன் பதிவுசெய்கின்றன. பஞ்சம் பிழைத்தல் என்பது அந்தக் காலகட்டத்தில் கரிசல் நில மக்களை இடப்பெயரச் செய்த மாபெரும் சமூக நிகழ்வு. அந்தக் காலகட்டம் வெள்ளைச் சோற்றை ஒரு கனவாக்கிவிட்டது என்பதை இவரது ஒரு கவிதை பதிவுசெய்கிறது, “நுகர்வோர்/கூட்டுறவுக் கடையில்/கொள்ளை மலிவு/அரிசி./மூன்று வேளையும்/நாங்கள்/நெல்லுச் சோறு தின்கிறோம்./எங்கள் வயிறெல்லாம்/அழகான தொப்பை.”
சுயம்புலிங்கம் கவிதைகளின் பின் பகுதியில் பஞ்சம் பிழைக்க வந்த சென்னை நகர வாழ்க்கை பதிவாகியிருக்கிறது. “கொழுத்த உடம்பும் கறுத்த மேனியுமாக/நெடுஞ்சாண் கிடையாகப்/படுத்துக் கிடக்கிறது அண்ணா சாலை” எனச் சென்னை நகரத்தை விவரிக்கத் தொடங்குகிறார் சுயம்புலிங்கம். நகரம் மனிதர்களை எப்படி அணுகுகிறது என்பதையும் இவரது கவிதை விவரிக்கிறது. இது ஒரு கிராமத்து மனிதனின் வியப்புடனும் விரக்தியுடனும் பதிவுசெய்யப்பட்டுள்ளது. மின்சார விளக்குகள் பூத்துக் குலுங்கும் பரபரப்பான நகரத்தில் கவிஞனின் மனம் ப்ளாட்பார வாசிகளிடமும், பேப்பர் பொறுக்குபவர்களிடமும் சிநேகம் கொள்கிறது. அவர்களுக்கு மேலே விழுந்துகொண்டிருக்கும் நகரமயமாக் கலை, உலகமயமாக்கலை, மழையை, வெயிலை பாலிதீன் கொட்டகைகளுக்குள் இருந்து எப்படித் தாங்கிக்கொள் கிறார்கள் எனச் சொல்கிறார் சுயம்புலிங்கம்.

பாட்டாளிகளின் வறுமையை, துயரத்தைச் சொல்லும் இவரது கவிதைகளுக்கு அவர்களைப் புரட்சி ஒருங்கிணைக்கும் கூக்குரலும் உண்டு. “போராட்டமே வாழ்க்கை/விலங்கை நொறுக்கு/ நாம் மனிதர்கள்” என்கிறார். இன்னொரு கவிதையில் சூரியனை வீழ்த்தும் அறிவியலைக் கற்போம் என அழைக்கிறார். சமூக, விஞ்ஞான மாற்றங்களை ஒரு போர் போல சித்திரிக்கும் சுயம்புலிங்கம் அவற்றை வீழ்த்த எளிய மனிதர்களின் சூத்திரங்களைக் கவிதையின் மூலம் தயாரிக்கிறார். ஆனால் இருபத்தியொன்றாம் நூற்றாண்டு எல்லோரையும் வெளியேற்றிவிடும் சூழலில், “எதுவும் கிடைக்காதபோது/களிமண் உருண்டையை வாயில் போட்டு/தண்ணீர் குடிக்கிறோம்/ஜீரணமாகிவிடுகிறது/எங்களுக்கு ஒரு குறையும் இல்லை/நாங்கள் சந்தோஷமாய் இருக்கிறோம்” எனத் தன் கவிதையைச் சுருட்டிக்கொள்கிறார்.

சுயம்புலிங்கத்தின் கவிதைகளில், வறுமையில் அழும் குழந்தையின் கால்பட்டு பூமி, சூரியன், மேகங்கள் போன்ற இயற்கைப் பேருக்கள் கலங்குகின்றன. ஒட்டுமொத்தமாக பார்த்தால் வறுமை செய்யப்போகும் புரட்சியின் முரசொலியாக இவரது கவிதைகள் இருக்கின்றன.
மு.சுயம்புலிங்கம், விளாத்திகுளம் அருகே வேப்பலோடை என்னும் சிற்றூரைச் சொந்த ஊராகக் கொண்டவர். நாட்டுப் பூக்கள் என்னும் தொகுப்பின் மூலம் பரவலான கவனம் பெற்ற இவர் சென்னையில் வசித்துவருகிறார். உயிர்மை வெளியீடாக அவரது கவிதைகள் தொகுக்கப் பட்டு ‘நிறம் அழிந்த வண்ணத்துப் பூச்சிகள்’ என்னும் பெயரில் வெளிவந்துள்ளது.
தமிழன்
கலைஞன் என்கிற
வார்த்தையைச் சுற்றி
கூகை இருட்டு அடைகிறது
புரட்சி என்கிற
வார்த்தையைச் சுற்றி
ஊத்தை படிகிறது
தமிழன் என்கிற
வார்த்தையைச் சுற்றி
உறக்கம் பாய் விரிக்கிறது
மக்கள் என்கிற
வார்த்தையைச் சுற்றி
வறுமையும் துப்பாக்கியும்
பெருமூச்சு விடுகிறது
தொடர்புக்கு: jeyakumar.r@thehindutamil.co.in

நன்றி :- தி இந்து