Saturday, October 3, 2015

மீத்தேன் எதிர்ப்பு .- தேவை மரபு மாறா மனிதர்கள் - மருதம் கோகி


காவிரி டெல்டாவை மிகப் பெரும் அச்சம் சூழ்ந்திருக்கிறது. முப்போகம் நெல் விளைந்த தஞ்சை பூமியின் அடையாளம் கொஞ்சகொஞ்சமாய் மாறிவருகிறது. பெட்ரோலியம் உள்ளிட்ட இயற்கை வளங்கள், அங்கு வாழ்ந்துகொண்டிருக்கும் மக்களுக்குக் கேடாய் மாறியிருக்கின்றன.

பெட்ரோலிய எண்ணெய் தோண்டியெடுப்பதற்காக அந்த மண்ணில் ஓ.என்.ஜி.சி. ஆரம்பத்தில் காலடி எடுத்து வைத்தது. இப்போது மீத்தேன் வாயு, ஷேல் காஸ் என அங்கு பூமியை பிளந்தெடுத்து வாரி அள்ளிச் செல்வதற்கான நடவடிக்கைகள், அந்த மண்ணைப் பாலைவனமாக மாற்றிவிடுமோ என்ற அச்சத்தில் அப்பகுதி மக்கள் ஆழ்ந்துள்ளனர்.

இந்த அச்சமே மக்களைப் போராட்டக் களத்தில் இறக்கியுள்ளது. இந்தப் போராட்டங்கள் தொடங்கியது எப்படி என்பதை மருதம் கோகி எழுதியுள்ள இந்த நூல் விவரிக்கிறது.

மன்னார்குடி பகுதியில் நிலக்கரி படிமம் கண்டுபிடிப்பு, நிலக்கரி படிமங்களுக்கு இடையில் மீத்தேன் இருப்பது கண்டுபிடிப்பு, அந்த மீத்தேனை எடுக்க மத்திய, மாநில அரசுகளுடன் தனியார் நிறுவனம் ஒப்பந்தம் செய்துகொண்டது என இந்த நடவடிக்கையின் ஒவ்வொரு கட்டத்தையும் மருதம் கோகி தனது நூலில் பதிவு செய்துள்ளார்.

மக்களின் எதிர்ப்புகளைப் புறந்தள்ளி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திட்டத்துக்கு அனுமதி அளித்தது. அதன் தொடர்ச்சியாக விவசாயிகள் சங்கத் தலைவர் மன்னார்குடி எஸ். ரங்கநாதன் ஏற்பாட்டில் தஞ்சாவூரில் நடைபெற்ற கருத்தரங்கம் மீத்தேன் திட்டம் குறித்த முழுமையான புரிதலை ஏற்படுத்தியது. மீத்தேன் திட்டத்தை ரத்துசெய்யக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கலானது. நெருப்பாய்க் கனன்றுகொண்டிருந்த போராட்டம் நம்மாழ்வாரின் வருகைக்குப் பிறகு பற்றி எரியத் தொடங்கியது. மீத்தேன் போராட்டக் களத்திலேயே நம்மாழ்வாரின் உயிரும் பிரிந்தது. போராட்டத்தை மேலும் எழுச்சி பெற்றது.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் தஞ்சை தொகுதியின் மையப் பிரச்சினையாக மீத்தேன் விவகாரம் உருப்பெற்றது. வலுவான மக்கள் இயக்கங்களால் மீத்தேன் திட்டம் தற்போது தற்காலிகமாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த எல்லா நிகழ்வுகளின் வரிசைக் கிரமமான தொகுப்பாக மருதம் கோகியின் இந்த நூல் திகழ்கிறது.

மீத்தேனைத் தொடர்ந்து தற்போது அதைப் போலவே பல லட்சம் கோடி லாபத்தைக் கொடுக்கக்கூடிய ஷேல் கேஸ் மீதும் பன்னாட்டுப் பகாசுர கம்பெனிகளின் கண்களில் பட்டுவிட்டன. ஆனால், மக்கள் சக்தி ஒன்றுதிரண்டால் எந்த சக்தியையும் முறியடிக்க முடியும். அத்தகைய மக்கள் சக்தியின் போராட்டத்துக்கு உந்துசக்தியாகவும் இந்த நூல் இருக்கும் என்பது நிச்சயம்.

- வி. தேவதாசன்

நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment