Thursday, October 15, 2015

பாத யாத்திரை -வீடில்லாப் புத்தகங்கள்திருச்செந்தூருக்கும், பழநிக்கும், வேளாங் கண்ணிக்கும் பாதயாத்திரை போகிறவர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

பாதயாத்திரையின் நோக்கம் வழிபாடு என்றாலும் அதன் வழியே அடையும் அனுப வம் உடலையும் மனதையும் மாற்றிவிடக் கூடியது. கிடைத்ததை உண்டு, சூழ்நிலைக்கு ஏற்ப கிடைத்த இடத்தில் படுத்து உறங்கி, பலதரப்பட்ட மக்களையும் ஊர்களையும் கடந்து செல்வது அபூர்வமான அனுபவம்!

பெங்களுரு தேசிய விமான ஆய்வுக் கூடத்தில் பணியாற்றி ஓய்வுபெற்றவர் ஆ.பெருமாள். இவர் காட்டி சுப்ரமண்யா, திருப்பதி, மந்திராலயா போன்ற கோயில் களுக்கு பாதயாத்திரையாகப் போய் வந்த அனுபவத்தை சுவைபட எழுதியிருக்கிறார்.

‘காலச்சுவடு’ பதிப்பகம் வெளியிட்டுள்ள ‘பாதயாத்திரை’ என்ற நூல் வித்தியாசமான பயண நூலாகும். சுவாச ஒவ்வாமை நோயில் அவஸ்தை பட்டுவந்த பெருமாள், தனது பாதயாத்திரையின் மூலம் எப்படி நோய் நீங்கினார் என்பதை வாசிக்கும்போது வியப்பாக இருக்கிறது.

தனது பயணம் பற்றி விளக்கிக் கூறும் பெருமாள், ‘நடப்பது ஒரு சுகம். அதை நடந்து பார்த்தவர்கள் மட்டுமே உணர முடியும் பாதயாத்திரையின்போது கிடைப்பதை உண்ண வேண்டும். சூழ்நிலையையொட்டி உறங்க வேண்டும். வழியில் சந்திக்கும் மனிதர்கள் உங்களுக்கு சந்தோஷமும் தரலாம், சங்கடமும் தரலாம். ஆகவே, இதற்கெல்லாம் உடலும் உள்ளமும் பக்குவப் பட வேண்டும். பயணம் செய்பவர்களுக்கு ஒரே அறிவுரை நடங்கள் சுகப் படுங்கள்’ என்பதே என்கி றார்.

இவரது முதல் பயணம் எப்படி தொடங்கியது? பெருமாளின் நண்பரான நாகராஜ் 1994-ம் ஆண்டு பெங்களுருவில் இருந்து தர்மஸ்தலா வரை 330 கிலோ மீட்டர் தூரம் பாதயாத்திரை மேற்கொண்டு திரும்பினார்.

அந்த ஆசை பெருமாளுக்கும் தொற்றிக் கொண்டது. ஆனால், சுவாச ஒவ்வாமையால் எப்படி நீண்ட தூரம் நடக்க முடியும் என உள்ளூற பயம். இதற்காக முதல் நடைப்பயணமாக பெங்களுருவில் இருந்து 60 கிலோ மீட்டரில் உள்ள காட்டி சுப்ரமண்யா கோயிலுக்குப் போய்வருவது என முடிவு செய்துகொண்டார். திடீரென ஒருநாளில் மிக நீண்ட தூரம் நடக்க முடியாது என்பதால் பயணத்தின் முன்பாகவே தினமும் சில மைல்கள் நடந்து போய்வரத் தொடங்கினார். இதனால் நடப்பது எளிதாக மாறியது.

தன்னைப் போலவே கோயிலுக்குப் பாத யாத்திரை மேற்கொள்ளும் குழு ஒன்றுடன் இணைந்துகொண்டார் பெருமாள். நீண்ட தூரம் நடந்து பழக்கம் இல்லாததால் பயணம் தொடங்கிய முதல் நாளிலேயே உடல் சோர்ந்துவிட்டது. ஆனாலும் மனஉறுதியோடு நடந்து கொண்டேயிருந்திருக்கிறார்.

இரவு ஒரு வீட்டில் ராத்தங்கல். அங்கே ராகிக் களியும் குழம்பும் சாப்பிடத் தந்தார்கள். அதை சிரமத்தோடு சாப்பிட்டு முடித்து மொட்டை மாடியில் காற்றாட உறங்கினார். மறுநாள் அதிகாலையிலே நடைப்பயணம் தொடங்கியது.

அதிகாலையில் நல்ல காற்றையும் காலை வெயிலையும் அனுபவித்துக் கொண்டு நடந்தார். ஆனால், பலரும் வேகமாக அவரை தனியே விட்டு நடந்து போய்விட்டார்கள். மாலையில் அயர்ந்துபோய் கோயிலைப் போய்சேர்ந் தார். அவருக்காககாத்தி ருந்தவர்களுடன் வழிபாட் டுக்காக சென்றார்.

அடுத்தது திருப்பதி பாத யாத்திரை. முந்தைய பயண அனுபவம் இந்த முறை நடப்பதில் சிரமம் ஏற்படுத் தவில்லை. ஒவ்வொரு ஊராகத் தங்கி கிடைத்த உணவை உண்டு நடந்தார். மணிக்கு 6 கிலோ மீட்டர் நடப்பவர்கள் வழியில் எங்காவது இடம் கிடைத்தால் உறங்கி ஓய்வு எடுப்பார்கள். ஆனால், பெருமாள் மணிக்கு 4 கிலோ மீட்டர் நடக்க கூடியவர் என்பதால் ஆங்காங்கே சில நிமிடங்கள் ஒய்வு எடுத்துக்கொண்டு அசதியோடு நடந்து கொண்டேயிருந்தார்.

தசைப் பிடிப்புதான் நடைப்பயணத்தின் பெரிய பிரச்சினை. உணவு ஒத்துக்கொள் ளாமல் போவதால் ஏற்படும் வயிற்றுப் பிரச்சினைகளும் காய்ச்சலும் வராமல் பார்த்துக்கொண்டார்,

கால்வலி அதிகமாகவே ஒரு இடத்தில் அரை மணி நேரம் ஒய்வு எடுத்தார். ஆனால், மீண்டும் நடப்பதற்கு எழுந்து கொள்ள முயன்றபோது கால்களை அசைக்க முடிய வில்லை. தசைகள் பிடித்துக் கொண்டு விட்டன. லேசான காய்ச்சல் உண்டாகியிருந்தது. துணைக்கு யாருமில்லை. வேறுவழியின்றி அந்த வழியே வந்த இரண்டு இளைஞர்களிடம் உதவி கேட்டு சிரமப்பட்டு நாங்கலி என்ற ஊரை அடைந்தார். அன்றிரவு நன்றாக உறங்கி எழுந்தார். மறுநாள் காலையில் உடல் நலம் ஒரளவு தேறியிருந்தது. மனஉறுதியோடு மீண்டும் நடைப்பயணத்தை மேற்கொண்டார்.

அதிகாலை பயணமும் மலையேற்றமும் அவரது நுரையீரலை வலுப்படுத்தியது. பல ஆண்டுகளாக அவருக்கு இருந்துவந்த சுவாச ஒவ்வாமையின் தீவிரம் மிகவும் குறைந்துபோனது. தனது பயணத்தின் வழியே மனமும் உடலும் பண்பட்டுவிட்டன என்கிறார் பெருமாள்.

இரண்டு நடைப்பயணங்கள் தந்த உத்வேகம் காரணமாக பெங்களுருவில் இருந்து 400 கிலோ மீட்டர் தூரம் உள்ள மந்திராலயா நோக்கிய பாதயாத்திரைக்கு அடுத்து திட்டமிட்டார்.

இந்தப் பயணத்தில் தங்களைப் போலவே ஆயிரக்கணக்கான குழுக்கள் நடந்து போய்க் கொண்டேயிருப்பதை கண்டார். ஆகவே, எங்கேயும் உணவுக்கும் உறங்கும் இடத்துக்கும் பிரச்சினை வரவேயில்லை. பொதுமக்களும் குடிநீரும், பழங்களும் தந்து உதவி செய்தார்கள்.

தனது நடைப்பயணத்தில் தங்கிய வீடுகள், சந்தித்த மனிதர்களை சுவைபட விவரிப்ப தோடு பாதயாத்திரை குழுக்களுக்குள் நடக்கும் சண்டைகள், குருவாக வழிநடத்து பவர் செய்யும் அட்டூழியங்கள் என யாவற் றையும் வெளிப்படையாக பகிர்ந்துகொண்டி ருக்கிறார் பெருமாள்.

வயது வேறுபாடுகளைக் கடந்து கூட்டம் கூட்டமாக மனிதர்கள் புனித யாத்திரையாக நடந்து கொண்டேயிருப்பது நூற்றாண்டு களாக தொடர்ந்து வருகிறது. நடையால் மனிதர்கள் ஒன்று சேருகிறார்கள், வலுப்பெறு கிறார்கள் என்பது சந்தோஷம் அளிக்கவே செய்கிறது.

எண்ணங்களைப் பகிர்ந்துகொள்ள: writerramki@gmail.com

நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment