Tuesday, October 6, 2015

"பிரதாப முதலியார் சரித்திரம்' தமிழின் முதல் நாவல் : கதைகளால் நிரம்பிய கதை




"பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற தமிழின் முதல் நாவலை எழுதிய மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்தது 1826-ஆம் ஆண்டு அக்டோபர் 11-ஆம் நாள்.
வேதநாயகம் பிள்ளை, பிரதாப முதலியார் சரித்திரம், சுகுணசுந்தரி ஆகிய இரு புதினங்களைத் தவிர, உரைநடை, கவிதை, சமயம், இசை, மொழிபெயர்ப்பு எனப் பல்துறை நூல்களை எழுதி
னாலும் 1879-ஆம் ஆண்டு தன்வரலாற்றுத் தன்மையோடு எழுதிய "பிரதாப முதலியார் சரித்திரம்' என்ற நாவலின் வழிதான் அனைவராலும் அறியப்படுகிறார்.
மரபிற்கும் நவீனத்திற்குமான இடைப்பட்ட ஒரு காலப்பகுதியில்தான் இந்நாவல் வெளிவந்தது. தொண்டை மண்டலத்திலுள்ள சத்தியபுரி என்னும் கிராமத்தில் பிறந்த பிரதாப முதலி என்ற சிறுவன் வழியாகத்தான் இந்நாவலின் கதை சொல்லப்படுகிறது.
பல நீதிக்கதைகளின் தொகுப்புதான் பிரதாப முதலியார் சரித்திரம். இந்த உரைநடை நூலை எழுதியதற்கான காரணங்களை அவரே பின்வருமாறு குறிப்பிடுகிறார்: ""தமிழில் உரைநடை நூல்கள் இல்லையென்பது ஒப்புக்கொள்ளப்படுகிறது. இந்தக் குறைபாட்டைப் பற்றி எல்லோரும் வருந்துகின்றனர். இக்குறையை நீக்கும் நோக்கத்துடன்தான் இந்தக் கற்பனை நூலை எழுத முன்வந்தேன். மேலும், ஏற்கெனவே வெளிவந்துள்ள எனது நூல்களான நீதி நூல், பெண்மதி மாலை, சமரசக் கீர்த்தனம் ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் அறநெறிக் கொள்கைகளுக்கு உதாரணங்கள் காட்டவும் இந்த நவீனத்தை எழுதினேன்.''
ராஜா-ராணி கதைகள் போன்ற மிகை யதார்த்தக் கதைகளில் மயங்கிக் கிடந்த தமிழ் வாசகர்களுக்கு, நடப்பியல் கதாபாத்திரங்களை உருவாக்கி அப்பாத்திரங்களின் வழியாக நீதியைப் போதிக்க மட்டுமே பிள்ளை பிரயத்தனப்பட்டிருக்கிறார். ஆனால், இந்த நவீனத்தின் வழியாக அக்காலத்தில் நிலவிய சில சீர்கேடுகளை வெளிப்படையாகவும் மறைமுகமாகவும் சுட்டிக்காட்டுகிறார்.
தான் கற்ற மேலை இலக்கியங்களை எல்லாம் தமிழர்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உந்துதலும் பிள்ளைக்கு இருந்திருக்கிறது. அதே நேரத்தில் தமிழர் பண்பாட்டை ஆங்கிலேயருக்குத் தெரிவிக்கவும் இப்புனைவைப் பயன்படுத்திக் கொண்டார். இதற்காகத்தான் தமிழர் பண்பாடு, ஒழுக்கம், மொழிப்பெருமை தொடர்பான பல கிளைக்கதைகளை தன் நாவலில் சேர்த்திருக்கிறார். இதன் ஆங்கிலப் பதிப்பு இங்கிலாந்திலும் வெளியாகி ஆங்கிலேயரின் கவனத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
 தமிழில் வசன நூல்கள் இல்லாத குறையைத் தீர்க்க இந்நூல் எழுதப்பட்டிருந்தாலும், பிள்ளையின் புதிய முயற்சியைத் தொடர்ந்துதான் தமிழ் நாவல் மரபு உருவாகியிருக்கிறது என்பதை மறுக்க முடியாது.
-பேராசிரியர் சு.இரமேஷ்

அக். 11 மாயூரம் வேதநாயகம் பிள்ளை பிறந்த நாள்
நன்றி :-தினமணி

No comments:

Post a Comment