Tuesday, October 6, 2015

அருட்பிரகாசர் வள்ளலாரைச் சிந்திப்போம் -05-10-1824 -1874
அகம் கருத்து, புறம் வெளுத்து கண்டதே காட்சி கொண்டதே கோலமென இருள் நெறியில் வாழ்ந்திருந்த மக்களை சன்மார்க்க நெறிக்கு அழைத்திட இறைவன் என்னை இந்த உலகத்தில் பிறக்கச் செய்தான் என்பதை,

அகத்தே கருத்து புறத்தே வெளுத்திருந்த
உலகர் அனைவரையும்
ஜகத்தே திருத்தி சன்மார்க்கத்து அடைவித்திட இந்த
உலகத்தே என்னை வருவிக்க உற்றேன்
அருளைப் பெற்றேன்!

என்று ஆணித்தரமாகக் கூறுகிறார் வள்ளலார். 19-ஆம் நூற்றாண்டில் (5.10.1824) இறைவன் அனுப்ப, இப்பூவுலகில் வந்து அவதரித்த வள்ளலார், 1874-ஆம் ஆண்டு மரணமிலா பெருவாழ்வு பெற்றார் - அருட் ஜோதியானார்.
குழந்தை இராமலிங்கத்தை உரிய வயதில் பள்ளியில் சேர்த்தனர். உலகியல் படிப்பில் நாட்டம் செல்லாததை அறிந்த ஆசிரியர், தன் முயற்சியில் பயனில்லையென முடிவுக்கு வந்தார். இறைநாட்டத்துடன் சென்னை கந்தசாமி கோயிலுக்கும் திருவொற்றியூர் தியாகராஜப் பெருமான் கோயிலுக்கும் செல்வதை வழக்கமாகக் கொண்ட குழந்தை இராமலிங்கத்தின் மீது கோபம் கொண்ட அண்ணன் சபாபதி தன் மனைவியிடம் தம்பிக்கு "சோறு போட வேண்டாமென' உத்தரவிட்டார். அண்ணியின் வேண்டுகோளுக்கிணங்க வீட்டு மாடியில் தனி அறையில் இருந்தபோது முருகப் பெருமானை நினைத்து கசிந்துருகிக் கண்ணீர் விட்டழுத குழந்தைக்கு, முருகப்பெருமான் கண்ணாடியில் தோன்றி காட்சியளித்தார். அக்காட்சியைக் கண்ட குழந்தை பாடியது. பள்ளிக்குச் செல்லாத குழந்தை எப்படிப் பாடியது?

சீர்கொண்ட தெய்வ வதனங்களாறும் திகழ் கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும்
தாமரைத் தாள்களும் ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்
நற்கோழிக் கொடியும் அருட்
கார்கொண்ட வண்மைத்தணி
காசலமும் என் கண்ணுற்றதே!

என்று பாடியதோடு,

""ஏது மறியாதிருளில் இருந்த சிறியேனை
எடுத்து விடுத்து''

என்ற பாடலின் மூலம் முருகன் தனக்கு எல்லாக் கல்வியையும் ஓதுவித்தான் என்கிறார். முருகன் அருள் கிடைத்த பின்பு 6000 பாடல்களும் உரைநடையும் எழுதிக் குவித்தார். அவர் பாடிய பாடல்களில் ஆயிரம் பாடல்கள் கொல்லாமை, புலால் உண்ணாமை, பிறர் துன்பம் சகியாமை, ஆகியவற்றை வலியுறுத்தியும், ஜாதியாசாரம், சமயாசாரம் மூடப்பழக்கம்
போன்றவற்றை கண்டித்தும் பாடப்பட்டனவாகும்.

வள்ளற் பெருமானாரின்
பன்முக ஞானம்:
மனுமுறைகண்ட வாசகம், ஜீவகாருண்ய ஒழுக்கம் ஆகிய நூல்களை இயற்றியமையால் நூலாசிரியர்; ஒழிவிலொடுக்கப் பாயிர விருத்தி உரை, தொண்டை மண்டல சதகத்தின் கடவுள் வாழ்த்துப் பாடல் உரை முதலியவற்றைச் செய்தமையால் உரையாசிரியர்; ஒழிவிலொடுக்கப் பாயிரவிருத்தி, தொண்ட மண்டல சதகம், சின்மயதீபிகை ஆகியவற்றைப் பதிப்பித்தமையால் பதிப்பாசிரியர்; சன்மார்க்க விவேகவிருத்தி எனும் பத்திரிகையைத் தொடங்கியமையால் பத்திரிகையாசிரியர்; தொழுவூர் வேலாயுத முதலியார், இறுக்கம் இரத்தின முதலியார், நரசிங்கபுரம் வீராசாமி முதலியார், பண்டார ஆறுமுக ஐயா, பொன்னேரி சுந்தரம் பிள்ளை, காயாறு ஞானசுந்தர ஐயர் ஆகிய பலருக்கும் பாடம் போதித்தமையால் போதகாசிரியர்; திருவருள் ஞானத்தை உலகத்தவருக்கு வாரி வழங்கியமையால் ஞானாசிரியர்; "உலகெலாம்' எனும் மெய்ம்மொழிப் பொருள் விளக்கம், "தமிழ்' எனும் சொல்லுக்கிட்ட உரை முதலிய வியாக்கியானங்களைச் செய்தமையால் வியாக்கியான கர்த்தர், மேலும், சித்த மருத்துவர், ரசவாதக்கலை வித்தகர், அருட்கவிஞர், அருள்ஞானி, சீர்திருத்தவாதி எனப் பன்முகத் தன்மையின் மொத்தத் திருவுருவம் வள்ளற் பெருமானார்.

வள்ளலார் தந்த இரு விருந்து:
வள்ளலார் வாழ்ந்த காலத்தில் 12 முறை பஞ்சம் நிலவியது. தாங்கொணா துயரத்தில் ஆழ்ந்த வள்ளலார், 1867-இல் வடலூரில் சத்திய தருமச் சாலை தோற்றுவித்தார். அன்று முதல் இன்று வரை (அணையா அடுப்பு) பசியாறும்பணி நடந்து
வருகிறது.
"பசியென்னும் புலியை அடக்குதலே ஜீவகாருண்யம்; பசியென்னும் நெருப்பை அணைப்பதே ஜீவகாருண்யம்; பசியென்னும் விசக்காற்றை அவிப்பதே ஜீவகாருண்யம்; பசியின் கொடுமை, பசியின் சகியாமை, பசி வந்தால் இந்த உடம்பில் என்ன மாற்றம் ஏற்படும் என்றெல்லாம் அறிவியல் ரீதியாக விளக்கம் தந்த ஒரே ஞானி வள்ளலார்தான்.
வயிற்றுப்பசிக்கு தருமச்சாலை தோற்றுவித்த வள்ளலார், ஞானப்பசிக்கு சத்திய ஞானசபையைக் கட்டி, இரு பசிக்கும் விருந்தளித்தவர்.

வள்ளலார் நிகழ்த்திய திருக்குறள் புரட்சி:
சத்திய தருமச்சாலை, சத்திய ஞானசபை ஆகியவற்றைத் தோற்றுவித்த வள்ளலார், சமரச சுத்த சன்மார்க்கத்தையும் தோற்றுவித்தார். வள்ளலாருக்கு முன் தோன்றிய அருளாளர்கள் எல்லாம் மடங்களைக் கட்டினர். மடங்களில் பெண்களுக்கு இடமில்லை என்றனர். இதை அறிந்த வள்ளலார் சங்கம் அமைத்து, பெண்களுக்குச் சம உரிமையும் ஞான உபதேசமும் தேவையெனக் கருதினார். தனிக் கொடியும் கண்டார். சன்மார்க்க நெறியைப் போதித்தார். திருக்குறள் பாடம் நடத்தினார். தமிழ் நாட்டில் முதன் முதலில் திருக்குறள் பாடல் நடத்திய பெருமை வள்ளலாருக்கு மட்டுமே உண்டு!

வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு:
""ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும்
ஒருமையுளாகி உலகியம் நடத்தல் வேண்டும்
செத்தாரை மீட்டும் இங்கே எழுப்பியிடல் வேண்டும்
திருச்சபைக்கே என்னை அடிமைகளாய்
செய்வித்திடல் வேண்டும்'' என்றும்,
""அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும்
ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்'' என்றும்,
""ஒருமையின் உலகெலாம் ஓங்குக எனவே
ஊதின சின்னங்கள் ஊதின சங்கம்
பெருமைகொள் சமரச சுத்த சன்மார்க்கப் பெரும்புகழ் பேசினர்'' என்பார்.

வள்ளற் பெருமானாரின் தனிச்சிறப்புகள்:
* தமது கொள்கைக்கென்று தனி மார்க்கத்தைக் கண்டவர்.
* தமது மார்க்கத்திற்கென்று தனிச் சங்கத்தை
நிறுவியவர்.
*தமது மார்க்கத்திற்கென்று தனிக்கொடி
கண்டவர்.
* தமது மார்க்கத்திற்கென்று தனி மந்திரம்
கண்டவர்.
* தமது மார்க்கத்திற்கென்று தனிச் சபையையும் கட்டியவர்.

வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்:
* கதிர் நலம் என்னிரு கண்களில் கொடுத்தே
அதிசயம் இயற்றென அருட்பெருஞ்சோதி!
* கற்பகம் என்னுளம் கைதனில் கொடுத்தே
அற்புதம் இயற்றென அருட்பெருஞ்சோதி!
* வல்லப சத்தி வகையெலாம் அளித்து என்
அல்லலை அகற்றிய அருட்பெருஞ்சோதி!
* சிவமே பொருளென் றறிவால் அறிந்தேன்
செத்தாரை மீட்கின்ற திண்மையைப் பெற்றேன்!
என்றெல்லாம் மேற்கூறியவாறு பல அற்புதங்களை இறைவன் திருவருளால் நிகழ்த்தியவர் வள்ளலார். அவர் கூறிய புலை, கொலை தவிர்த்து, அன்பு, கருணை, தயவு, இரக்கத்துடன் சுத்த சன்மார்க்க நெறியில் வாழ்ந்தால் கட்டாயம் "மரணமிலாப் பெருவாழ்வு' வாய்க்கும்!
-சு.ம.பாலகிருஷ்ணன்
நாளை: 5.10.15 அருட்பிரகாச வள்ளலார் அவதாரத் திருநாள்
நன்றி - தினமணி


No comments:

Post a Comment