Thursday, October 29, 2015

வ.உ.சிதம்பரனாரைச் சிந்திப்போம்

 செப்டம்பர்-5 வ.உ.சி பிறந்த நாள்.
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை கோவைச் சிறைச்சாலையில் அவருடைய மனைவி மக்களும் அவருடைய ஆப்தராகிய ஸ்ரீ வள்ளிநாயக சாமியாரும் வேறொரு நண்பரும் பார்வையிடச் சென்றிருந்தார்கள். அவர்கள் மூலமாக வ.உ.சி அவர்கள் தமிழ்ச் சமுதாயத்தின் தேசபக்தர்களுக்கு வெளியிட்ட செய்தி:
தமிழர்களெல்லாரும் வள்ளுவர் குறளை உரையுடன் அறிந்து பாராயணம் செய்து வர வேண்டும். 1330 குறளையும் பொருளுடன் உணர்ந்திலாத தமிழர் முற்றத்துறந்த முனிவரேயாயினும், என்னைப் பெற்ற தந்தையேயாயினும், யான் பெற்ற மக்களேயாயினும், யான் அவரைப் பூர்த்தியாக மதிப்பதுமில்லை; நேசிப்பதுமில்லை. ஞானமும் திறமையும் இல்லாத ஜாதியார் விரைவில் நாசமடைவார்கள். அவையிரண்டுமுடையார் நீடுழி வாழ்வர். ஆதலால் பாரதபக்தர் அனைவரும் அவ்விரண்டையும் விரைவில் கைக்கொள்வாராக. தெரியாது என்ற வார்த்தையும் முடியாது என்ற வார்த்தையும் பாரத பக்தர்கள் தவிர ஏனையோரின் பொருட்டாகவே உண்டாகின்றன. இவ்வுண்மை உங்கள் மனதில் எப்போதும் நிற்கட்டும்.
- கர்மயோகி பத்திரிகையில் ஸௌம்ய வருஷம் பங்குனி மாதம் -மார்ச் 1910- வெளிவந்த செய்தி.

vochidambaram-largeதமிழகத்தின் மிகப் பெரிய தேசிய எழுச்சியின் பிள்ளையார் சுழியாக அமைந்தது தூத்துக்குடி தொழிலாளர் வேலை நிறுத்தமும் அதனை தொடர்ந்து தென்தமிழகத்தில் எழுந்த சுதேசி உணர்வும் தான். அதனைத் தொடக்கி வைத்தவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்கள். தூத்துக்குடியில் விவேக பானு எனும் ஆன்மிக இதழை நடத்தி வந்த அவர் ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகானந்தர் ஆகியவர்களைக் குறித்து பல கட்டுரைகளை வெளியிட்டார். பின்னர் அந்த இதழ் பிரசுர அலுவலகம் மதுரைக்கு இடம் பெயர்ந்த போது அவருக்கு சுவாமி விவேகானந்தரின் குருபாயியும் சசி மகராஜ் என அழைக்கப்படுபவருமான சுவாமி ராமகிருஷ்ணானந்தாவுடன் தொடர்பு ஏற்பட்டது. வ உ சிதம்பரம் அவர்கள் 1901 ஆம் ஆண்டு ஐஸ் ஹவுஸ் என அழைக்கப்பட்ட விவேகானந்தர் இல்லத்தில் சசி மகாராஜை சந்தித்தார். சசி மகராஜ் வ.உ.சியிடம் சுதேசி இயக்கத்தில் ஈடுபடச் சொன்னார். வ.உ.சி எல்லாமே மாயைதானே நிலையில்லாதது தானே என கூறினார். சசி மகராஜ் மிக மென்மையாக சுதேசியின் பயன்களை எடுத்துக்கூறி வ.உ.சியை சுதேசி சிந்தனைக்கு ஆற்றுப்படுத்தினார். பின்னர் வ.உ.சி இந்நிகழ்ச்சியை குறித்து “சுதேசியால் பல நல்ல விளைவுகள் ஏற்படும் அதனை பின்பற்றுக” எனும் சுவாமி இராமகிருஷ்ணானந்தரின் வார்த்தைகளே என்னுள் சுதேசி சிந்தனையின் விதைகளை வித்திட்டன” என்று கூறுகிறார்.
- சென்னை ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ள Vivekanandar Illam – Vivekananda House the birthplace of Ramakrishna Movement in South India என்ற நூலில் இருந்து (பக்.109)

“அஞ்சாமை கல்வி அடக்கம் கருணை
எஞ்சாமல் நிரம்பிய் என் வள்ளிநாயகம்
இலகுநம் தேயம் இன்புற வுழைக்குந்
திலகன், அரவிந்தன், கப்பர்டே, மூஞ்சி,
சீனிவாசன், பாரதி செப்பரும் பிறசிலர்
நானிவண் உணர்ச்சியால் நட்ட நண்பினர்”

வ.உ.சி சிறையிலிருந்த போது பரலி.சு.நெல்லையப்பர் கேட்டுக்கொண்டதற்கிணங்க தமது சுயசரிதை முழுவதையும் அகவற்பாவில் எழுதினார் (காலம் 1912). மேற்காணும் குறிப்பு அதில் காணப்படுகிறது. 1936ல் வ உ சியின் மறைவுக்கு பிறகு நெல்லையப்பரின் “லோகோபகாரி” இதழில் அவர் சுயசரிதை தொடராக வெளிவந்தது. 1946ல் நூலாக பதிப்பித்த போது இப்பாவுக்கு கொடுக்கப்பட்ட தலைப்பு “மாண்பு நிறைந்த நண்பர்கள்” (ஆ.இரா.வேங்கடசலாபதி, வ. உ.சியும் பாரதியும்). இதில் மூஞ்சி என்பது யார் தெரிகிறதா? மாபெரும் விடுதலை வீரரும், ஹிந்து மகாசபையின் மிக முக்கியமான தலைவருமானடாக்டர் மூஞ்சி (Dr. B. S Moonje) தான் அவர். ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் நிறுவனர் டாக்டர் ஹெக்டேவாரின் வழிகாட்டியாகவும், குருவாகவும் திகழ்ந்தவர்.
சிறையிலிருந்து வெளிவந்த பிறகும் அவருடைய உள்ளத்தில் சுதேசிய உணர்வும், பாரத பக்தியும் துடித்துக்கொண்டிருந்தன. “சிவ நேசன்” எனும் பத்திரிகைக்கு அவர் எழுதிய கடிதம் ஒரு எடுத்துக்காட்டு.
பலவான்குடி “சிவநேசன்” ஆசிரியர் அவர்களுக்கு,
ஐயா,
v_o_chidambaram_stampசிவநேசனாகவோ தமிழ்நேசனாகவோ அவ்விருபொருள் நேசனாகவோ என்னை மதித்து என்னிடமிருந்து யாதொரு கைமாறும் கருதாது, “சிவநேசன்” வாரந்தோறும் என்னைக் காணும்படி நீங்கள் செய்ததற்காக யான் உங்கள் பால் நன்றி செலுத்தக் கடமைப்பட்டுள்ளேன். சிவநேசன் தமிழ் நடையைப் படிக்குந்தோறும் யான் அடையும் இன்பத்துக்கு அளவேயில்லை. அவ்வின்பமே “சிவநேசனை”ப் பற்றிப் பின்வரும் வரிகளை எழுதும்படித் தூண்டிற்று. எனது நண்பர் சி.சுப்பிரமணிய பாரதியான் இவ்வுலகை நீத்த பின்னர் யான் இனிய தமிழ் நடைக் குறிஞ்சியைக் காணாது கடிய தமிழ்நடைப்பாலையில் அமர்ந்து வருந்திக் கொண்டிருந்தேன். அவ்வருத்தத்தையெல்லாம் உங்கள் “சிவநேசன்” நீக்கிவிட்டது. தமிழ்மொழி நடையின் இனிமையை யாரேனும் காண விரும்புவாராயின் அவர் சிவநேசனைப் படிக்கவேண்டுமெனத் தெரியப்படுத்திக் கொள்கிறேன். சிவநேசனில் சிவப்பொருளைக் கண்டிலீரோ என வினவின் அகத்தின் ஆட்டத்தையே எப்போழ்தும் சூழக்கண்டு கொண்டிருக்கும் யான் சிவப்பொருளை எங்ஙனம் காணுதல் கூடும்? சிற்சில சமயங்களில் சிவநேசனில் காணப்படும் பொருள்கள் எனது உள்ளத்தைக் கவர்கின்றன. அவற்றில் ஒன்று ஆவணி மீ கஉ-உ வெளிவந்த “சிவநேசன்” அ-ம் பக்கத்திலுள்ள ஸ்ரீ சுவாமி விவேகானந்தர் வாக்கு. என் போன்ற சீர்திருத்தக்காரருக்கு அஃது ஒப்புயர்வற்ற ஓர் மருந்தாக விளங்குகின்றது. அதனை இச்சமயம் வெளியிட்டதற்காக யான் பேருவகை யெய்துகின்றேன்.
உண்மையுள்ள,
வ.உ.சிதம்பரம் பிள்ளை
கோவில்பட்டி
29-8-’28
வேளாளன் சிறை புகுந்தான் தமிழகத்தார்
மன்னனென மீண்டான் என்றே
கேளாத கதை விரைவில் கேட்பாய் நீ,
வருந்தலையென் கேண்மைக் கோவே
தாளாண்மை சிறிது கொலோ யாம்புரிவேம்?
நீ இறைக்குத் தவங்கள் ஆற்றி
வாளாண்மை நின்துணைவர் பெறுகெனவே
வாழ்த்துதி நீ வாழ்தி வாழ்தி

1944 இல் சக்தி காரியாலயம் வெளியிட்ட பரலி சு நெல்லையப்பர் எழுதிய வ.உ.சி.வரலாற்றின் பிற்பகுதியில் “வீர சிதம்பரம் – புதுச்சேரி ஸ்ரீ அரவிந்தாசிரமவாசி சுவாமி சுத்தானந்த பாரதியார் 20-12-1939 இல் எழுதியது” என்ற குறிப்புடன் வெளியான கட்டுரையில், ”கோவை சிறையில் வ.உ.சியை காணச்சென்ற நெல்லையப்பரிடம் சுப்பிரமணிய பாரதி மூன்று அழகிய பாடல்களை எழுதி அனுப்பினார்; அதில் இதுவே கிடைத்தது” என்ற குறிப்புடன் சுத்தானந்த பாரதியார் இப்பாடலை வெளியிட்டுள்ளார். ஆனால் பாரதி பாடல்களில் அவர் வாழ்ந்த காலத்தில் இது வெளிவரவில்லை. தற்போது வெளிவரும் எல்லாத் தொகுப்புகளிலும் உள்ளது. 
http://www.tamilhindu.com/2009/09/in-the-sacred-memory-of-voc/

No comments:

Post a Comment