Friday, November 20, 2015

"நான் இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ்!" -இரா. கார்த்திகேயன்




கரகர குரலில் ‘வாக்கி டாக்கி' தொடர்ந்து ஒலிக்கிறது... ‘ங்கொய்ய்ய்..' என்று ஓலமிட்டுக் கொண்டு கடக்கும்’ காவல்துறை உங்கள் நண்பன்' ஜீப்... கைகளில் புகார்களோடு மக்கள் வந்துகொண்டும் போய்க்கொண்டும்... எந்த நேரத்திலும் அங்கு ஒரு ‘ஆக் ஷன்' காட்சி நடக்கலாம் என்கிற அளவில் அவரின் அலுவலகம் அவ்வளவு பிஸி!

திருப்பூர் மாநகரக் காவல்துறை துணை ஆணையராக இருந்து கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பதவியேற்றுள்ள திருநாவுக்கரசுவுக்கு தன்னம்பிக்கை நூலாசிரியர் என்ற இன்னொரு முகமும் உண்டு.

அவர் எழுதிய முதல் படைப்பான ‘உன்னுள் யுத்தம் செய்’ புத்தகம் இளைஞர்களிடையே ‘டாக் ஆஃப் தி டவுன்!'.

புத்தகம் வெளியான சில நாட்க‌ளிலேயே முதல் பதிப்பு விற்றுத்தீர, இரண்டாம் பதிப்பு தயாராகி, தற்போது விற்பனையாகிக் கொண்டிருக்கிறது. ஆளுமைத் திறன் குறித்து திருப்பூர் மாவட்ட பள்ளி, கல்லூரிகளின் மேடைகளை அலங்கரித்தவர்.

மாணவர்கள் என்றில்லை, அவர்களது பெற்றோர்களும் ஆசிரியர்களும் கூட அவரது பேச்சுக்கு ரசிகர்கள். சமீபத்தில் இவரது பணியிட மாற்றம் ஏற்படுத்திய வருத்தத்தில், வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கில் பலரும் தங்களது ஃபுரொபைலில் இவரின் ஒளிப்படத்தை வைத்து, இவருக்குப் பிரியாவிடை தந்தனர்.

"அப்பா, அம்மா இரண்டு பேரும் ஆசிரியர்கள். தேனி மாவட்டம் ரெங்கநாதபுரம்தான் சொந்த ஊர். வைகை அணை கட்டும்போது, கூலிக்கு மண் அள்ளியவர் என் தந்தை. பின்னர் கஷ்டப்பட்டுப் படித்து, உழைத்து அரசுப் பள்ளி ஆசிரியராகி எங்களை வழிநடத்தியவர்.

பத்தாம் வகுப்புவரை ரெங்கசமுத்திரம் அரசுப் பள்ளியிலும், பிளஸ் டூ படிப்பை, பள்ளியின் முதல் மாணவனாக ஆண்டிப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியிலும் முடித்தேன்.

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள திருவேடகம் விவேகானந்தர் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல் படித்தேன். உடலையும், மனதையும் ஒருமுகப்படுத்தக் கற்றுக்கொண்டது இங்கேதான்.

கல்லூரி முதல்வர் சுப்பிரமணியம், இயற்பியல் துறைப் பேராசிரியர் முருகேசன், முதுநிலை படிக்கும்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பேராசிரியர் கே.ராமச்சந்திரன் ஆகிய மூவரும் கல்லூரிக் காலத்தில் எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்தவர்கள்.

வாழ்க்கையில் யதார்த்தமாக நடக்கும் ஒரு சம்பவம் நம் வாழ்க்கைக்கே பெரிய அடித்தளமாக அமைந்துவிடும். அந்த வகையில், கல்லூரிக் காலத்தில் பார்வையாளனாகச் சென்ற வினாடி வினா போட்டிக்கு, போட்டியாளர்கள் தவறவிடும் பதில்களை, பார்வையாளர்கள் சொல்லலாம். அப்படி, அங்கு நிறைய கேள்விகளுக்குப் பதில் அளித்தேன். அப்போது அங்கு இருந்த செல்லதுரை என்பவர், ‘உங்களது அறிவைப் பொதுத்தேர்வுகளுக்குப் பயன்படுத்துங்கள்' என்றார்.

சட்டம் பயின்றுகொண்டே பொதுத்தேர்வுகளுக்கு விண்ணப்பித்து எழுதினேன். குரூப் 1 தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றிபெற்றேன். டி.எஸ்.பி.யாக விருதுநகர் மாவட்டம் வில்லிப்புத்தூரில் பணியைத் தொடங்கினேன். வீரப்பனைத் தேடி, சிறப்பு அதிரடிப்படை முகாமில் 7 ஆண்டுகள் காட்டிற்குள்ளேயே வாழ்ந்தேன். வால்டர் தேவாரம், விஜயகுமார், நட்ராஜ் ஆகியோரின் கீழ் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தது. முதல்வரின் வீரதீரச் செயல் விருதுடன், பதவி உயர்வும் கிடைத்தது. 2015-ம் ஆண்டு ஐ.பி.எஸ். ஆகப் பதவி உயர்வு பெற்றேன்.

சிறுவயதில் பாரதியார், பாரதிதாசன் கவிதைகள் தொடர்ந்து படிப்பேன். திருக்குறளுக்குப் பலர் எழுதிய‌ உரையைப் படித்திருக்கிறேன். இவையே என் புத்தக வாசிப்பை விரிவுபடுத்தின‌. தமிழ் ஆர்வத்தைத் தூண்டி, பலரின் புத்தகங்களைத் தேடிப் படிக்க வைத்தன‌.

நான் படித்த காலத்தில் என்னைவிட நன்றாகப் படித்த மாணவர்கள் சிலர், பின்னாளில் வாழ்வின் மோசமான நிலைக்குச் சென்றதைப் பல்வேறு சம்பவங்கள் மூலம் உணர்ந்தேன். மேலும் இன்றைக்குக் கல்லூரி மாணவர்கள் பலரும் தங்கள் வாழ்வின் பொன்னான நேரத்தை கேளிக்கையிலும் வெட்டிப்பேச்சிலும் பொழுதுபோக்கிலும் செலுத்துவதால் லட்சியப் பாதை சிதறுவதை என் கண் முன்னே கண்டிருக்கிறேன்.

அப்படிப்பட்டவர்களுக்காகத்தான், ‘உன்னுள் யுத்தம் செய்' எனும் தலைப்பில் புத்தகம் ஒன்றை எழுதினேன்.

‘ஒவ்வொருவரிடமும் உள்ள தீமையை எதிர்த்து, நல்லதை உயர்த்தவும் எதிர்மறை எண்ணத்தை அழிக்கவும், இந்தப் புத்தகம் பயன்படுவதாக' இதைப் படித்த பலரும் சொல்கிறார்கள். இந்தப் புத்தகம் முன்பே கிடைத்திருந்தால், என் வாழ்க்கைப் பாதை, எப்போதோ மாறியிருக்கும் என என் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் பாராட்டினார்.

புத்தகத்திற்குக் கிடைத்த வரவேற்பைக் கருத்தில் கொண்டு, திருக்குறளோடு தன்னம்பிக்கைக் கதைகளைச் சொல்லும்விதமாக, ‘ஒரு குறள் ஒரு பொருள்' எனும் தலைப்பில் தமிழ்வாசல் பதிப்பகத்தின் மாத இதழில் எழுதி வருகிறேன்.

என் காவல் பணிகளுக்கிடையே எழுத்துப் பணிகளையும் கவனிக்க முடிகிறதென்றால் அதற்குக் காரணம், மனைவி லாவண்யா ஷோபனா. ‘இளைஞர்களைச் செதுக்கும் ஒரு உளி' என அவரே இந்தப் புத்தகத்தைப் பாராட்டிவிட்டார்!" என்று சொல்லிச் சிரித்துக் கைகுலுக்குகிறார் இரா.திருநாவுக்கரசு ஐ.பி.எஸ், கம்பீரம் குறையாமல்!

Keywords: புத்தக அறிமுகம், நம்பிக்கை கதை, ஐபிஎஸ் பயிற்சி, ஐபிஎஸ் வழிகாட்டி, காவல்துறை துணை ஆணையர், தன்னம்பிக்கை நூலாசிரியர் உன்னுள் யுத்தம் செய்


நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment