Saturday, November 21, 2015

வாசிப்பு இயக்கமாகும் ‘நம் கல்வி நம் உரிமை’




அரசுப் பள்ளிகளைக் கொண்டாடும் ‘நம் கல்வி நம் உரிமை’ புத்தகத்தை வெளியிடுவதில் ‘தி இந்து’ நாளிதழோடு கைகோத்துக்கொண்ட ‘தமிழ்நாடு அறிவியல் இயக்கம்’ தனது வாசிப்பு முகாம்கள் மூலமாகவும் அந்தப் புத்தகத்தைத் தமிழகமெங்கும் கொண்டுசெல்கிறது.

புதுக்கோட்டை அரசு கல்வியியல் கல்லூரியில் கடந்த மாதம் 24, 25 தேதிகளில் ‘நம் கல்வி நம் உரிமை’ புத்தகத்துக்கான முதல் வாசிப்பு முகாம் நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஆசிரியர்கள் வந்திருந்தனர். பார்வைத் திறனற்ற பேராசிரியர் முருகேசனின் பங்கேற்பு அனைவரையும் ஈர்த்தது.

ஏழு ஏழு பேராகப் பிரித்துக்கொண்டு கல்லூரி வளாகத்தின் வெவ்வேறு இடங்களில் ஆசிரியர்கள் புத்தக வாசிப்பை மேற்கொண்டனர். குழுவில் உள்ள ஒவ்வொரு வரும் ஒரு அத்தியாயம் என்று வரிசையாக வாசிக்க, மற்றவர்கள் புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு கண்ணாலும் காதாலும் சொற்களைப் பின்தொடர்ந்தார்கள். இடையிடையே விவாதங்கள், பகிர்தல்கள். நல்ல அனுபவம் அது.

குழு வாசிப்புக்குப் பிறகு தங்கள் கருத்துகளை ஆசிரியர்கள் பகிர்ந்துகொண்டனர். அரசுப் பள்ளிகளைக் காப்பதிலும், அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுப்பதிலும் ‘தி இந்து’ காட்டிவரும் அக்கறை தொடர வேண்டும் என்றார்கள்.

அடுத்து, டிசம்பர் 5-ல் புதுச்சேரியிலும் (புதுச்சேரி அறிவியல் இயக்கம்), டிசம்பர் 26, 27 தேதிகளில் கல்பாக்கத்திலும் ‘நம் கல்வி நம் உரிமை’ புத்தகத்துக்கான வாசிப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. கல்பாக்கம் வாசிப்பு முகாமில் கூடவே, சு.கி ஜெயகரன் எழுதிய ‘மூதாதையரைத் தேடி…’ என்ற நூலும் இடம்பெறுகிறது.

இந்த முகாம்களில் பங்கேற்க விரும்பும் ஆசிரியர்கள் இந்த எண்களைத் தொடர்புகொள்ளலாம்: 7598225040, 9488011128 (தமிழ்நாடு அறிவியல் இயக்கம்); 9443481818, 9894842678, 9444746260 (புதுச்சேரி அறிவியல் இயக்கம்).

இந்த வாசிப்பு முகாம்கள் நல்ல தொடக்கம். நிற்கக் கூடாத தொடரோட்டம் இது!


நன்றி ;- தி இந்து

No comments:

Post a Comment