மாதொருபாகன்' நாவல் தொடர்பாக எழுந்த சர்ச்சை, தற்போது விஸ்வரூபம் எடுத்து உள்ளது.
தமிழகத்தில், ஓரு எழுத்தாளனை கண்டித்து, கடையடைப்பு நடப்பது இதுவே முதல்முறை. ஏன் இந்தியாவில் கூட, இதுவே முதல்முறையாக கூட இருக்கலாம். அடிப்படைவாதிகளின் கூடாரமாக, தமிழகம் மாறி வருகிறதோ என்று நினைக்கும் அளவுக்கு, நாவல் எரிப்பு, கடையடைப்பு போன்ற சம்பவங்கள் நடந்து வருகின்றன. பல்வேறு மிரட்டல்களால், நாமக்கல்லை விட்டு வெளியேறி உள்ள எழுத்தாளர் பெருமாள் முருகன், தமிழகத்தில் அகதியை போல் அலைந்து வருகிறார்.
அவருடன் பேசியதில் இருந்து.....
உங்களை எதிர்த்து நடக்கும் இந்த போராட்டங்களின் பின்னணியில் இருப்போர் யார்?
துவக்கத்தில், இந்து முன்னணியின் பின்னணி இருந்தது. என்னை கைது செய்யக் கோரி, காவல் நிலையத்தில் கொடுக்கப்பட்ட நான்கு புகார்களில், இந்து முன்னணியின் புகாரும் ஒன்று. ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு, நூலை தீயிலிட்டு எரித்தது. எங்களுக்கும் இந்த சம்பவத்துக்கும் தொடர்பில்லை என்று தலைமை அறிவித்தவுடன், இந்த அமைப்புகள் வெளிப்படையாக இயங்காமல், பின்னணியில் இருந்து இயக்கி கொண்டிருக்கின்றன. இன்று வரை மிரட்டல்கள் நின்றபாடில்லை.
என்ன மாதிரியான மிரட்டல்கள் வருகின்றன?
முதலில், தொலைபேசியில் மிரட்டல் விடுத்தனர். பின், இடதுசாரி அமைப்புகள் எனக்கு ஆதரவாக போராட முன் வந்தபோது, கொஞ்சம் பின்வாங்கினர்.கூட்டங்கள் நடத்தி, எழுதிய கைகளை வெட்டுவேன், கொலை செய்வேன் என, போராட்டங்களில் மிரட்டல் விடுத்தனர். திருமாவளவன், ஈ.வி.கே.எஸ்., இளங்கோவன், நல்லகண்ணு, ராமகிருஷ்ணன் போன்ற தலைவர்கள் அறிக்கை விடுத்த பின், சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாவலின் குறிப்பிட்ட பகுதி, மக்களிடம் எப்படி சேர்க்கப்பட்டது? நாவல் இலவசமாக வினியோகிக்கப்பட்டதா?
இந்த பிரச்னை குறித்து, தனியாக துண்டு பிரசுரங்கள் தயாரித்தனர்.அதில், நாவலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் பிரசுரித்து, 'நம் ஊரையும், பெண்களையும், இந்து மதத்தையும் கேவலப்படுத்தி உள்ளார்' என, திட்டமிட்டு பிரசாரம் நடத்தினர். 16 பக்கங்கள் கொண்ட, 10 ஆயிரம் துண்டு பிரசுரங்களை, வீதி வீதியாக வழங்கினர்.நாவலின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் படித்தால், கேவலப்படுத்தியது போன்றே தோன்றும். இது எல்லா எழுத்தாளர்களுக்கும் பொருந்தும். இந்த வகையில், ஜாதியையும், மதத்தையும் ஒருங்கிணைத்து, திட்டமிட்டு செயல்படுகின்றனர்.
நாவலில் இருந்து ஊரின் பெயரை நீக்குவதாக அறிவித்த பின்னரும், போராட்டங்கள் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறதே. இதை எப்படி எதிர் கொள்ளப் போகிறீர்கள்?
மத்தியில், பா.ஜ.,ஆளுவதால், மதங்களை முன்னிறுத்தி இந்தப் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாவலில் இருந்து ஊர் பெயரை நீக்குவதாக விளக்கம் கொடுத்த பின்பும், போராட்டங்கள் தொடர்வதால், அவர்கள் முடிவுகளை முன்கூட்டியே தீர்மானித்து, அதன் வழியில் செல்வது போல தோன்றுகிறது. அதை தமிழக காவல்துறையும் வேடிக்கை பார்க்கிறது. ஜெயலலிதா மட்டும் முதல்வராக இருந்திருந்தால், இந்தப் பிரச்னையை வேறுவிதமாக கையாண்டிருப்பார்.
எழுத்தாளர்கள் குரல் எழுப்ப வேண்டும்! காலச்சுவடு பதிப்பக உரிமையாளர் கண்ணன் கூறியதாவது:இது, கருத்து சுதந்திரத்துக்கு எதிரான நடவடிக்கை. நாவல் வெளியாகி, நான்கு ஆண்டுகள் கழித்து, போராட்டங்கள் நடத்துவதும், எழுத்தாளனை கைது செய்ய வேண்டும் என கோருவதும், உள்நோக்கம் கொண்டவை.
நாவலுக்கு ஆதரவாக, பல்வேறு இயக்கங்கள், போராட்டம் நடத்துவதற்கு அனுமதிக்காத காவல்துறை, எதிர்தரப்பினர் நடத்தும் போரட்டங்களுக்கு தடை விதிப்பதில்லை. இதன் பின்னணியை ஆராய வேண்டும். இதற்கு எதிராக, எழுத்தாளர்கள் ஒருமித்த குரல் எழுப்ப வேண்டும்.
இன்று அமைதி பேச்சு: நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்தவர், பெருமாள்முருகன்; அரசுக் கல்லூரி பேராசிரியர் மற்றும் நாவலாசிரியர். நாமக்கல், மோகனூர் சாலையில், குடும்பத்துடன் வசித்து வருகிறார். நான்காண்டுக்கு முன், அவர் எழுதிய, 'மாதொருபாகன்' என்ற நாவல், தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
திருச்செங்கோட்டைச் சேர்ந்த சிலர், மொபைல் போன் மூலம் மிரட்டல் விடுத்தனர். கடந்த 9ம் தேதி, திருச்செங்கோடு நகரில் கடையடைப்புபோராட்டம் நடந்தது. பல அமைப்பினரும், சில அரசியல் கட்சிகளும், பெருமாள்முருகனுக்கு எதிராக கருத்து தெரிவித்து, போராட்டங்களை அறிவித்து வருகின்றன. 'திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் சுவாமி, தேர்த்திருவிழா, பெண்கள் ஆகியோரை கேவலமாகச் சித்தரித்து எழுதியதாக, பெருமாள் முருகனை கைது செய்ய வேண்டும். அவரது, 'மாதொருபாகன்' புத்தக விற்பனையை தடுக்க வேண்டும். விற்கப்பட்ட புத்தகங்களை திரும்ப பெற வேண்டும். பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்' என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை சிலர் முன் வைத்துள்ளனர். இந்நிலையில், '
தினமலர்' நாளிதழில், 'இந்த பிரச்னையை, சில அரசியல் கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு ஆதாயம் தேடி வருவதாகவும்; மாவட்ட நிர்வாகம், எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை' என, செய்தி வெளியானது. அதையடுத்து, நாமக்கல்லில் உள்ள பெருமாள்முருகன் வீட்டிற்கு, நேற்று காலை முதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாவட்ட நிர்வாகம், இப்பிரச்னையைத் தீர்க்க, இன்று மாலை, மாவட்ட வருவாய் அலுவலர் சுப்புலட்சுமி தலைமையில், திருச்செங்கோட்டை சேர்ந்தவர்களுடன் அமைதி பேச்சு நடத்த ஏற்பாடு செய்துள்ளது.
நன்றி :- தினமலர், 12-01-2015
No comments:
Post a Comment