Friday, November 7, 2014

ரெங்கராஜனுக்கு சுஜாதா ! லட்சுமணனுக்கு உலகம்மா !



குழந்தை  எழுத்தாளர்  அழ.  வள்ளியப்பாவைப்  போலாக  வேண்டுமென்பது அவரது  ஆசை !

யார்  இவர் ?  காஸ்  விநியோகம்  அவருக்குச்  சோறு  போடுகின்றது.  பத்தாம் வகுப்பில்  தோல்வியடைந்தவர் !

நாகர்கோவிலை  அடுத்த  கோதை  கிராமம்  அவருக்குச்  சொந்த  ஊர் !  எளிய குடும்பத்தில்  பிறந்தவர்.  உடல் நலக்  குறைவால்  வேலைக்குச்  செல்ல முடியாத  அப்பா ! இவருக்கு இரண்டு  தங்கையர்.  ஒரு  தம்பி.  ஏழ்மை காரணமாக  ஐந்தாம்  வகுப்பிலிருந்தே  விடுமுறை  நாள்களில்  நெசவுத் தொழிலுக்குச்  செல்வது  வழக்கம். வறுமை  தந்த  மன  அழுத்தத்தால்  பத்தாம் வகுப்பில்  தேர்ச்சி  பெற  இயலாமற்  போனது. படிப்புக்கு முழுக்குப்ப் போட்டார்.

கோட்டாறு  கடைகளில்  சரக்குப்போடும்  வேலையில்  துவங்கியது  இவரது வாழ்க்கை !  தற்போது  எச்.பி.  நிறுவனத்தில்  காஸ்  ஊழியராக  வேலை பார்த்து  வருகின்றார்.

தொடர்ந்து  பள்ளியில்  படிக்க  முடியாத  வேதனைக்கு  நூலகங்கள்   அடைக்கலமாகத்  திகழ்ந்தன.

இராமலிங்க  அடிகளார்,  கண்ணதாசன்,  குழந்தக்  கவிஞர்  அழ. வள்ளியப்பா ஆகியோரது  படைப்புகள்  பரவசமூட்டின, இவருக்கு ! தமிழ்  மொழியின்பாற்  நாட்டம்  அதிகரித்தது.

”தமிழ்வழிப்  பள்ளியில்  குழந்தைகளைச்  சேருங்கள்” என்று  நண்பர்களிடம்  வற்புறுத்தியபோது  “பைத்தியக்காரன்”  பட்டம்தான்  கிடைத்தது.

நன்னெறிகளையும்,  ஒழுக்கத்தையும்  தாய்மொழியில்  கொண்டு  சேர்க்கும் ஆவல்  எழுதத்  தூண்டியது.

கண்மணிகளுக்கான  கதைகள்,  குழந்தைகளுக்கான  குரு  சிஷ்யக்  கதைகள், விலங்குகள்  கூறும்  விசித்திரக்  கதைகள்,  நல்ல  நல்ல  நெடுங்கதைகள்  உள்பட  17  கதைத்  தொகுப்ப்புகளை  எழுதி  வெளியிட்டுள்ளார்.

ஆரம்பத்தில்  பிறந்த  ஊரின் பெயரையும்  சேர்த்து  கோதை  சிவக்கன்ணன் என்ற  பெயரில்  எழுதத்  துவங்கினார்.

இவருக்குப்  பல்லாற்றானும்  துணைநிற்கும்  இவரது  துணைவியார் உலகம்மாள்.  எனவே, தற்போது  “உலகம்மா”  என்னும்  பெயரில்  எழுதி வருகின்றார்.

ஸ்ரீரெங்கம்  ரெங்கராஜன்  தன்  மனைவி  சுஜாதாவின்  பெயரில்  எழுதியதை நினைவு  கொண்டதாலே  இப்பதிவுக்கு  மேற்படித்  தலைப்பு !

தகவல்  உதவி :- என்.சுவாமிநாதன், தி இந்து, வெள்ளி, நவம்பர், 7, 2014

Thursday, November 6, 2014

கோயில்களின் நகரம் : ஓஷோ சொன்ன கதை



ஓஷோ சொன்ன கதை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகரத்தில் உள்ள கோயில்கள் அனைத்தையும் கடல் விழுங்கியது. கடலுக்குள் இருந்த ஆலயமணிகள் அவ்வப்போது ஒலிக்கும். தண்ணீரால் சில நேரம் மணிகள் அசைக்கப்படும். மீன்கள் சில நேரங்களில் மணிகளை ஆட்டிவிடும். அந்த மணிகளின் இசை, கடலின் கரைவரை கேட்கும். இன்றும்கூட அந்த நகரத்தில் கோவில் மணிஓசை அருமையான இசையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது..

அந்த நகரத்துக்கு நானும் செல்ல ஆசைப்பட்டேன். அதனால் அந்தக் கடலைத் தேட ஆரம்பித்தேன். பல ஆண்டுகள் அலைச்சலுக்குப் பின்னர், நான் அந்தக் கரையை அடைந்தேன். ஆனால் அங்கே கடலின் பேரிச்சைல்தான் கேட்டது. அலைகளின் ஓயாத ஓலம், பாறை மேல் அறையும் சத்தங்கள் அந்தத் தனிமையான இடத்தில் பெரும் ஆர்ப்பரிப்பாக இருந்தன. அங்கே இசையும் இல்லை. ஆலய மணி ஓசைகளையும் கேட்க முடியவில்லை.


நாம் கடற்கரையிலேயே அதிககாலத்தைக் கழித்துவிட்டதால், திரும்பும் வழியையும் மறந்து விட்டேன். இந்தக்கடற்கரைதான் எனது கல்லறையாகப் போகிறதோ என்ற அச்சம் என்னுள் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆலயமணி ஓசை பற்றிய எண்ணம் கூட படிப்படியாக மறக்கத் தொடங்கியது. நான் அந்தக் கடற்கரையையே என் வாசமாக மாற்றிக்கொண்டேன்.

ஒரு நாள் இரவு கடலில் மூழ்கியிருந்த கோவில்களிலிலிருந்து மணிகள் அடிக்கத் தொடங்கின. அந்த இனிய இசை எனது உடலை உற்சாகத்தால் நிரப்பியது. உறக்கம் முழுக்க கண்களிலிருந்து அகன்றது. விழிப்புணர்வடைந்த ஒரு நபர் என் கூடவே இருப்பது போல உணர்ந்தேன். தூக்கமே என்னை விட்டுப் போய்விட்டது. வாழ்க்கை முழுவதும் ஒளியால் நிரம்பிவிட்டது. இருட்டே இல்லை.

நான் சந்தோஷமாக ஆனேன். சந்தோஷத்தின் அவதாரமாகவே ஆனேன். கடவுளின் ஆலயத்தி லிருந்து இசை வரும்போது ஒருவரிடம் துளிகூட சோகம் குடிகொண்டிருக்க முடியாது. நீங்களும் அந்தக் கடற்கரைக்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களா? நாம் சேர்ந்து போகலாம். நமக்குள் நாம் நகர்வோம். ஒருவரின் இதயம் அந்தக் கடலைப் போன்றதுதான். அதன் ஆழத்தில் மூழ்கிய ஆலயங்களின் நகரம் உள்ளது.

ஆனால் எல்லா வகையிலும் ஒருவர் அமைதியாகவும், கூர்ந்த கவனத்துடனும் இருக்க முடிந்தால் தான் அந்தக் கோவில்களிலிருந்து ஒலிக்கும் மணிகளைக் கேட்க முடியும். எண்ணங்களும் ஆசைகளும் உக்கிரமாகப் போரிடும் இரைச்சலின் பின்னணியில் இந்த ஆலய மணிகளை எப்படிக் கேட்க முடியும்? அதைக் கேட்கும் ஆசைகூட அதைக் கேட்பதற்குத் தடையாகிவிடும்.


நன்றி :- தி இந்து