Monday, October 27, 2014

மதுரையில் மகிழ்ச்சி வெள்ளம் - கரந்தை ஜெயகுமார்


மதுரை மன்னர் திருமலை நாயக்கர் அவர்களின் விருப்பப்படி, திருமலை நாயக்கர் மகாலைக் கட்டிட, மண் வளம் வாய்ந்த ஓர் இடத்தினைத் தேர்வு செய்து, அங்கு, 305 மீட்டர் நீளமாகவும், 290 மீட்டர் அகலமாகவும் தோண்டித் தோண்டி மண் எடுத்துச் சுட்டு, செங்கல் கற்களை உருவாக்கினர்.

      நாயக்கர் மகாலும் அழகுற கம்பீரமாய் உருவானது. மண் தோண்டி எடுத்த இடத்தில், பாங்குற ஒரு குளமும் உருவானது. இக்குளம்தான், வண்டியூர் மாரியம்மன் தெப்பக் குளம்

       இத்தெப்பக் குளத்தின் நடுவே ஓர் மைய மண்டபம். மண்டபத்தில் விநாயகர். மண்டபத்தைச் சுற்றிலும் அழகிய தோட்டம். தெப்பக் குளத்தின் தோற்றமே, காண்பவர் கண்களைக் கொள்ளை கொள்ளும்.

      மாரியம்மன் தெப்பக் குளத்தின் கரையில், அழகுற காட்சியளிக்கிறது,
கீதா நடன கோபால நாயகி மந்திர்.


நாள் 26.10.2014 ஞாயிற்றுக் கிழமை. காலை 9.00 மணி. சோழ நாட்டில் பௌத்தம், முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், நான், எனது மனைவி, மகள் நால்வரும் அரங்கினுள் நுழைகிறோம்.

    அரங்கமே பரபரப்பில் மூழ்கி இருந்தது. மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதந்து கொண்டிருந்தது. தமிழ் நாடு முழுமையும் இருந்தும், கடல் கடந்தும் பதிவர்கள் வந்த வண்ணம் இருந்தனர்.

     ஒருவரை ஒருவர் அடையாளம் கண்டு கொண்டு, கரம் பற்றி, எழுப்பிய உற்சாகக் குரல் ஒலி, அரங்கம் எங்கும் எதிரொலித்துக் கொண்டிருந்தது.

     முகம் நோக்காது இதுநாள் வரை பழகிய உறவுகள், முகங் கண்டு, அகம் மகிழ, சிரித்து மகிழும், இக்காட்சியைக் காண, கொடுத்துதான் வைத்திருக்க வேண்டும்.

     அக்கொடுப்பினை, இவ்வாண்டு எனக்குக் கிடைத்தது.


மதுரை, தீதும் நன்றும் பிறர் தர வாரா, ரமணி ஐயாவை சந்திக்க வேண்டும் என்பது எனது நெடு நாள் கனவு. இதோ முதலாவது ஆளாக நிற்கிறார். கரம் பற்றி நலம் விசாரித்தேன்.


     தேவ கோட்டையில் பிறந்து, அபுதாபியில் பணியாற்றும், பன் மொழி வித்தகர் கில்லர்கி, முகத்தினையே மறைக்கும் மீசையுடன், முகமெல்லாம் மகிழ்ச்சி பொங்க, இரு கரம் நீட்டி, இழுத்து அணைக்கிறார். வாருங்கள் நண்பரே, வாருங்கள் நண்பரே என மனம் மகிழ அழைக்கிறார்.

     இதோ மின்னல் வரிகள் பால கணேஷ். தமிழ் மணத்தில், முதலிடத்தை, நிலையாய் பிடித்து வைத்துப் பாதுகாக்கும், ஜோக்காளி பகவான்ஜி.

     வலைப் பூவில் நான், கணித மேதை சீனிவாச இராமானுஜன் தொடரினை எழுதிய போது, அன்போடு அழைத்துப் பேசிப், பாராட்டி, தமிழ் மணம் வாக்குப் பட்டையினை, வலையில் இணைத்துக் கொடுத்த, மூங்கில் காற்று திரு டி.என்.முரளிதரன்.

     தனது வயதையும் பொருட்படுத்தாது, சிறு குழந்தைபோல், திரு ஜி.எம். பாலசுப்பிரமணியன் ஐயா அவர்கள்.

     வங்கிப் பணியாற்றி ஓய்வு பெற்ற பிறகும், தேனீ போல் சுறு சுறுப்பாய், சுழன்று, சுழன்று படமெடுத்து, பதிவில் பாங்குற இணைக்கும், திருச்சியின் மூத்த பதிவர், எனது எண்ணங்கள் திரு தி. தமிழ் இளங்கோ அவர்கள்.
  



கையில் நீண்ட புகைப் பட கருவியுடன், திரையுலக ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா போல், தருமி அவர்கள்.
     

கவிதைகளால் மனங்களைக் கொள்ளையடிக்கும், சிவகுமாரன் கவிதைகள் திரு சிவ குமார் அவர்கள்.



உலகம் சுற்றும் வாலிபன்
கடற் பயணங்கள் சுரேஷ் அவர்கள்
    



அநீதி கண்ட இடத்து வெகுண்டு எழும், வேல் வெற்றியின் திரு அ. வேல் முருகன் அவர்கள்.

      தனது தனித்துவமான நடையால், மனதைக் கவர்ந்திழுத்துச் சொக்க வைக்கும், சிட்டுக் குருவி திரு விமலன் அவர்கள்.


முக நூலில் உலகையே கலக்கும்,
ஸ்ரீவில்லிப் புத்தூர்
திரு இரத்தினவேல் நடராஜன் அவர்கள்

அரங்கத்து வாசலில் ஒரு வேன் வந்து நிற்க, ஒட்டு மொத்த, புதுக் கோட்டைப் பதிவர் உலகமும், முழுதாய் வந்து இறங்கியது.

       வளரும் கவிதை திரு கவிஞர் முத்து நிலவன் அவர்கள் தலைமையில், மலர்தரு கஸ்தூரி ரங்கன், மகிழ்நிறை சகோதரி மைதிலி கஸ்தூரி ரங்கன், வேலுநாச்சியார் சகோதரி மு. கீதா, நண்பர் மகா சங்கர், சகோதரி கல்வியாளர் ஜெய லட்சுமி, சகோதரி மாலதி என புதுக் கோட்டைப் பதிவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே சென்றது.

     நண்பர்களே, சொன்னால் நம்ப மாட்டீர்கள், அனைவரையும் காண, அனைவருடனும் பேச, இரு கண்களும், ஒரே ஒரு வாயும் போதவே இல்லை. அவற்றைக் கடன் வாங்கவும் வழியேயில்லை. தவித்தே போய்விட்டேன்.

     ஒவ்வொரு பதிவராய் மேடையேறி அறிமுகம் செய்து முடிக்கவே, அரை நாள் கடந்து விட்டது., இடையில் நாவினிக்க, உடல் குளிர ஓர் ஜிகர்தண்டா.

     பிற்பகல் நிகழ்ச்சியாக, குடந்தையூர் சரவணன் அவர்களின் இயக்கத்தில் தயரான, ஓர் குறும் படம்.
சில நொடி சிநேகம்

     இக்குறும் படம் ஓடியதென்னவோ, ஏழே ஏழு நிமிடங்கள்தான். ஆனால் அதன் தாக்கம் விலகத்தான் நீண்ட நேரம் பிடித்தது.

குடந்தையூர் சரவணன் அவர்கள்,
எதிர்காலத்தில், திரையுலகில்
ஓர் நிரந்தர இடத்தினை
எட்டிப் பிடிப்பார் என்பது உறுதி.

வாழ்த்துக்கள் நண்பரே.

     நண்பர் தில்லையகத்து துளசிதரன், கோவை ஆவி, கரை சேரா அலை அரசன் மூவரும், ஏதோ நீண்ட கால அனுபவமிக்க நடிகர்கள் போல், இயல்பான நடிப்பால் உள்ளம் கவர்ந்தனர்.

வாழ்த்துக்கள் நண்ப, நடிகர்களே.

அடுத்த நிகழ்வாக, நூல்கள் வெளியீட்டு விழா.

கரந்தை மாமனிதர்கள்

    தமிழ் வலைப் பதிவர்களின் திருவிழா, மதுரையில் நடைபெற விருக்கின்றது, என்ற செய்தியினை அறிந்த மறு நிமிடமே, வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்களைத் தொடர்பு கொண்டேன். எனது நூல் ஒன்றினை வெளியிட விரும்புகிறேன் என்றேன். மகிழ்ச்சி, மகிழ்ச்சி வெளியிடுங்கள் என்றார்.

    அதன் பின்னரே, என்ன வெளியிடலாம் என்று யோசித்தேன். வலைப் பதிவுத் திருவிழாவிற்கென்றே உருவான நூல்தான கரந்தை மாமனிதர்கள்.
     



பி.எஸ்.என்.எல். தொழிற் சங்க, மதுரை மாவட்டச் செயலாளர், மனித நேயப் பண்பாளர் திரு எஸ். சூரியன் அவர்கள், தனது பல்வேறு அலுவலகப் பணிகளுக்கு இடையிலும், பல்வேறு தொழிற் சங்க அலுவல்களுக்கு இடையிலும், அரை நாள் நேரம் ஒதுக்கி, மன மகிழ்ந்து, அரங்கிற்கு வருகை தந்து, நூலினை வெளியிட்டு, வாழ்த்தி மகிழ்ந்தார்.

     வலைப் பூ உலகிற்கு, என்னைக் கரம்  பிடித்து இழுத்து வந்து, வழி காட்டிய, நெறி படுத்திய, சோழ நாட்டில் பௌத்தம் முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்கள், முதற் படியினைப் பெற்றுச் சிறப்பித்தார்.

      இந்த எளியேனின் மீது, அளவு கடந்த அன்பு வைத்துள்ள, கவிஞர் முத்து நிலவன் ஐயா அவர்கள், கரந்தை மாமனிதர்களின் முகப்பு அட்டையினை, மின்னஞ்சல் வழி பெற்று, மேடையில் வெளியிடுவதற்கான, புத்தக மாதிரியினை, பெரிய அளவில், தயாரிக்கச் செய்து வழங்கி மகிழ்ந்தார்.

மதுரை எஸ்.சூரியன் அவர்களுக்கும்,
முனைவர் பா.ஜம்புலிங்கம் அவர்களுக்கும்
கவிஞர் நா.முத்து நிலவன் அவர்களுக்கும்
இருகரம் கூப்பி,
என் நெஞ்சார்ந்த
நன்றியினைத்
தெரிவிப்பதில் பெருமிதம் அடைகின்றேன்.


தேன் மதுரத் தமிழ்
சகோதரி கிரேஸ் பிரதீபா அவர்களின்,
துளிர் விடும் விதைகள்
வேலுநாச்சியார்
சகோதரி மு.கீதா அவர்களின்
ஒரு கோப்பை மனிதம்
சட்டப் பார்வை
திரு பி.ஆர்.ஜெயராமன் அவர்களின்
நல்ல எழுதுங்க... நல்லதையே எழுதுங்க

என புத்தம் புது நூல்கள், அடுத்தடுத்து வெளியிடப் பெற்றன.

    வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன் அவர்கள், நன்றி கூற வலைப் பதிவர் விழா சிறப்புடன் நிறைவுற்றது.

     என்ன, விழா அதற்குள் நிறைவு பெற்று விட்டதா? மணி ஐந்தாகி விட்டதா? அனைவருமே, நம்பாமல், தங்கள் கை கடிகாரத்தினை மீண்டும், மீண்டும் பார்த்து வியப்படைந்தனர்.

     காலை முதல் மாலை வரை, ஒரு பதிவர் கூட அரங்கை விட்டு வெளியே செல்லாமல், விழாவில் மனமகிழ்வோடு கலந்து கொண்டதே,
இவ்வாண்டின் பதிவர் திருவிழா
வெற்றி    வெற்றி    வெற்றி
என்பதை பறைசாற்றியது.

     ஒரு நாள் பதிவர் திரு விழா சிறப்புடன் அரங்கேற, பல மாதங்கள் அயராது பாடுபட்ட, தங்களின் சொந்தப் பணிகளை எல்லாம் புறந்தள்ளி விட்டு,
முழு மூச்சாய் களமிறங்கிச்
செயலாற்றி
சாதித்துக் காட்டிய
தமிழ்வாசி பிரகாஷ்
வலைச் சித்தர் திண்டுக்கல் தனபாலன்
பகவான் ஜி
தமிழன் கோவிந்தராஜ்
மதுரை சரணவன்

நிகழ்ச்சியினைத் தொய்வின்றித் தொகுத்து வழங்கிய
மகேந்திரன் பன்னீர்செல்வம்
தீபா நாகராணி
மற்றும்
இவர்களை,
தங்களது நல் அனுபவத்தால், நல் வழி காட்டி இயங்கிய
அன்பின் சீனா
தீதும் நன்றும் பிறர் தர வாரா ரமணி
அவர்களுக்கும்,
மனமார்ந்த நன்றியினை
வலைப் பூ நண்பர்கள் அனைவரின் சார்பிலும் தெரிவித்து மகிழ்கின்றேன்.

இவ்விழா வெற்றி பெற, பால மாதங்கள்
அலைந்து, அலைந்து
சிறித இளைத்தே போய்விட்ட
தமிழ் வாசி பிரகாஷ் அவர்களுக்கு
மீண்டும் ஒரு முறை நன்றியினை காணிக்கையாக்குகிறேன்.

சாதித்துவிட்டீர்கள் நண்பர்களே.


Sunday, October 26, 2014

வாங்க பழகலாம்!


நல்லதோ கெட்டதோ செயல் ரீதியாக ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து பழக உங்களுக்கு எவ்வளவு நாள் பிடிக்கும் என்ற கேள்வியோடு ஆரம்பிக்கும் புத்தகம்தான் ஜெர்மி டீன் எழுதிய ‘மேக்கிங் ஹேபிட்ஸ் ப்ரேக்கிங் ஹேபிட்ஸ்’ என்ற புத்தகம். நல்லதை பழகவும் கெட்டதை விட்டொழிக்கவும் மனிதன் என்ன செய்யவேண்டும். இதைச் செய்ய ஒருவருக்கு எத்தனை நாள் தேவை என்பதையும் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்னால் டீன் கூகுளில் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள எத்தனை நாள் தேவைப்படும் என்று தேடியபோது அது தந்த பெரும்பாலான விடைகள் இருபத்தியோரு நாட்கள் என்றே இருந்ததாம்.

உடற்பயிற்சி, புகைபிடித்தல், டைரி எழுதுதல் என எதுவென்றாலும் சரி விடுவதற்கோ அல்லது தொடர்வதற்கோ இருபத்தியோரு நாட்கள் போதுமானது என்றதாம் கூகுள். ஆராய்ச்சிகளுமே ஒரு விஷயத்தை எப்பாடு பட்டாவது 21 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவிட்டால் 21வது நாளுக்கு மேல் கிட்டத்தட்ட உங்களின் ரொட்டீனில் ஒன்றாக மாறிவிடுகின்றது என்றே சொல்கின்றது.

சூழ்நிலையின் முக்கியத்துவம்

இந்த 21 நாள் என்பது ஒரு அறிவியல் ஆதாரமில்லாத குத்துமதிப்பே என்று சொல்லும் ஆசிரியர், புதிதாய் நாம் பழக நினைக்கும் ஒரு பழக்கத்தை எப்படி வழக்கமாக்கிக்கொள்வது என்பதை விலாவாரியாக இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார். காலையில் எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து பழகவேண்டும் என நினைக்கின்றீர்கள். இது 21 நாளில் சாத்தியம். தினமும் ஜிம்முக்குப் போகவேண்டும் என நினைக்கின்றீர்கள். இதை வழக்கமாக மாற்ற 21 நாள் போதாது. பழக்கம் குறித்து மூன்று குறிப்பிடத்தக்க முக்கிய விஷயங்களை டீன் பட்டியலிடுகின்றார்.
முதலாவதாக பழக்கம் வழக்கமான பின்னர் மூளை ரொம்பவும் அந்தச் செயலைப் (நல்லதோ/கெட்டதோ) பற்றி பிராய்ந்து சிந்தித்துப் பார்ப்பதில்லை. அது கிட்டத்தட்ட அனிச்சை செயலாகி விடுகின்றது. இரண்டாவதாக, தொடர்ந்து வழக்கமாய் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச் செயல் குறித்த எமோஷன் என்பதே இல்லாமல் போய்விடுகின்றது.

மூன்றாவதாக, நல்லதோ கெட்டதோ பழக்கம், வழக்கமாக மாறும் சூழல் இருக்கின்றதே அதில்தான் அது எவ்வளவு கெட்டியாக நம்முடன் ஓட்டிக்கொள்கின்றது என்பதன் சூட்சுமமே இருக்கின்றது என்கின்றார் ஆசிரியர். ஸ்ட்ரெஸ்ஸுடன் இருக்கும்போது சிகெரெட் பிடித்து பழகுவதும், சோகத்தில் இருக்கும்போது பழகும் குடிப்பழக்கத்தினில் இருந்து மீளமுடியாமல் திணறுவதும் இதனாலேயேதான்.

எண்ணமும் பழக்கமும்

நான் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் மனதில் இருந்தால் நல்ல பழக்க வழக்கங்கள் கைகூடும் என்று யாராவது காதில் பூ சுத்தினால் நம்பாதீர்கள் என்கின்றார் டீன்.

எண்ணத்தினால் பழக்கத்தை உருவாக்கவே முடியாது. யாருக்குத்தான் நம்முடைய நேரத்தையும் எனர்ஜியையும் உபயோகமான வழியில் செயல்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அப்புறம் ஏன் சார் பார்ட்டியிலும் பப்பில்லும் கூட்டம் அலைமோதுகின்றது? வெட்டி அரட்டைகள் ஏன் கனஜோராய் நடக்கின்றது என்று கேட்கும் டீன், நினைப்புதான் பிழைப்பை கெடுக்குது என்று சொல்வார்கள். அது என்னவோ பழக்க வழக்கத்தில் சரிதான் என்கின்றார்.

தொழிலில் முன்னேற நெட்வொர்க் வேண்டும் என நினைத்து பார்ட்டிக்கு போவீர்கள். அங்கேதான் உங்கள் ஆழ்மனத்தில் இருக்கும் ஆட்டோ பைலட் வேலை செய்ய ஆரம்பித்து, மகனே என்ஜாய்! என கட்டளையிட்டு தொழில் பற்றிப் பேசாமல் குடித்துக்குடித்து மட்டையாவீர்கள் என்கின்றார். 
உன்னை யறிந்தால் நீ உன்னையறிந்தால் பழக்கத்தை மடித்து கக்கத்தில் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பழக்கம் உன்னை மடித்து கக்கத்தில் வைத்துக் கொள்ளும் என்கின்றார் டீன்.

ஒரு தடவை முடிவு பண்ணி ஆழ்மன செட்டிங்கை மாற்றிவிட்டால் அதற்கப்புறம் பழக்கம் உங்கள் கக்கத்தில் என்கின்றார் டீன். ஆபீஸ் இடைவேளையில் சிகரெட்டையும் லைட்டரையும் பார்த்தவுடன் சிகரெட் பழக்கமில்லாதவர் கேஷிவலாயும் பழக்கமுடையவர் பரபரவென்றும் மாறுவதைப் பார்க்கின்றீர்களில்லையா? ஏன் சிகரெட் பழக்கமுள்ளவருடைய கை ஆட்டோமேட்டிக்காய் சிகரெட்டை எடுக்கின்றது. மற்றவர் வெறுமனே வேடிக்கை பார்க்கின்றார். உள்ளே செட்டிங் அப்படியிருக்கின்றது. எனவே, பழக்கத்தை மாற்ற செட்டிங்கை மாற்றவேண்டுமே தவிர இருபத்தியோரு நாள் தவமிருக்க முயற்சிக்கக் கூடாது என்கின்றார்.

கைமேல் பலன்

நல்ல பழக்கங்கள் முன்னேற்றத்தைத் தரும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தானே!. அப்புறம் ஏன் அனைவரும் நல்லபழக்கங்களை கொண்டிருப்பதில்லை என்ற கேள்விக்கு அருமையான விடையைத் தருகின்றார் ஆசிரியர். நல்ல பழக்கம் நன்மை பயக்கும் என்பது சரி. எவ்வளவு நேரத்தில் அந்த நன்மை நமக்கு வந்துசேரும் என்பதில்தான் பிரச்சினையே. மனித மனம் உடனடி நன்மையை விரும்புகின்றது. ஜாலியாய் இருக்கணுமா போனைப் போடு நண்பர்களைக் கூப்பிடு. ஜாலி உடனடியாய் கேரண்ட்டீ. பொழுது போகணுமா பேஸ் புக்கிற்கு போ! கைமேல் பலன் (பொழுது போவதில் இருந்து போதாது என்று ஆகிவிடுகின்றதே). அதே சமயம் வேலையில் பதவி உயரணுமா? ஒழுங்காய் வேலையைப் பார். ஒரு நாள் மட்டுமா? இல்லை தொடர்ந்து பல நாள். அது சரி எப்போது பதவி உயர்வு வரும்? வரும்போது வரும்! இன்க்ரிமெண்ட்?!. தரும்போது தருவோம்! அடப்போங்கப்பா! நான் போறேன் பேஸ்புக்குக்கு!. உடனடியாக பலன்கிடைக்காது என்ற விஷயத்தை பழக்கப்படுத்திக்கொள்வதுதான் கடினம். அதிகமா சாப்பிட்டா குண்டாயிடுவே. ஓ.கே. ஆனா நாக்குல டேஸ்ட் ஒட்டிக்கிடுச்சே!. தொடர்ந்து எக்ஸர்சைஸ் செய்தா பிட்டா இருப்பே. இன்னைக்கு ஜிம்முக்கு போனேன். எய்ட் பேக்ஸ் வரலியே! அப்புறம் எதுக்குப் போகணும். இதுதான் மனிதர்களின் பிரச்சினை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கின்றார் டீன்.

இன்டர்நெட்டின் அடிமை

அன்றாடம் நாம் கொண்டுள்ள சோஷியல் பழக்கங்கள், வேலைப் பழக்கங்கள், ட்ராவல் பழக்கங்கள், உணவுப் பழக்கங்கள், ஷாப்பிங் பழக்கங்கள் என அத்தனையிலுமே இந்த நிலையேதான். உடனடி லாபம் இருக்கின்றதா. இறங்கு அதில் என்பதைத்தான் மனிதனின் ஆழ்மனம் சொல்கின்றது. இன்டர்நெட் மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதன் சூட்சுமத்தையும் டீன் சொல்கின்றார். ஈ-மெயில், ட்விட்டர், பேஸ்புக் என பழக்கத்துக்கு அடிமையாக்கும் (நேரம் தின்னும் வகை) பல விஷயங்கள் எப்படி மனிதர்களை பழக்கத்துக்கு அடிமையாக்குகின்றன என்பது குறித்து விரிவாகச் சொல்லியுள்ள டீன் ட்விட்டரில் இன்ட்ரெஸ்ட்டிங் ட்வீட்டுகள் வந்தாலும் நேரம் வேஸ்ட். கொஞ்சம் நேரத்துக்கு ஒன்றுமே வராவிட்டாலும் ஒன்றுமே வரலியே என கவலைப்பட்டு நேரம் வேஸ்ட் ஆகின்றது என்கின்றார்.

ட்விட்டரில் உங்கள் நண்பர்கள் இருக்கின்றார்கள். நாலு நல்ல விஷயங்கள் உடனுக்குடன் கிடைக்கும் என்ற சப்பைக்கட்டை கட்டிக்கொண்டுதானே நீங்கள் சேர்ந்தீர்கள். சேர்ந்த பின்னால் முகம் தெரியாத கூட்டம் அதிகமாகி அதனால் காரணகாரியம் இல்லாமல் தொடர்ந்து செக்பண்ணி நேரத்தை வீணடிக்கின்றீர்களே என்கின்றார் டீன். இன்னும் கொஞ்சம் பின்னால் போவோம். டீவி எதற்குப் பார்க்கின்றீர்கள்? பொழுதுபோக்கு, செய்திகள், கல்வி போன்ற உபயோகமான விஷயங்களுக்காக என்பீர்கள்தானே! அதுதான் காரணம் என்றால் செய்திகள் முடிந்தவுடனேயும், உங்களுக்கு பிடித்த சீரியல் முடிந்தவுடனேயும் ஆஃப் செய்துவிட்டு வேறுவேலையைப் பார்க்கலாமே. சேனல் அப் அண்ட் டவுனை அமுக்கி ஒரே மொக்கையாய் ப்ரோகிராம் போடுறாங்க என்று ஏன் கம்ப்ளெயிண்ட் அடிக்கின்றீர்கள்.

ஓ! டீவி உங்களுக்கு டைம் பாஸுக்குமா!. அப்ப சீக்கிரமா உருப்பட்டு விடுவீர்கள் என கிண்டலடிக்கின்றார் டீன். டீவியைப் போல் எதற்கோ ஆரம்பித்து எதிலோ கொண்டு விடுவதுதான் பழக்கங்கள். அலர்ட்டாக இல்லாவிட்டால் ஆளைச் சாய்த்துவிடும் என்று எச்சரிக்கின்றார். நல்லதைப் பழகவும் தீயதைப் புறந்தள்ளவும் ஒரு மனிதனுக்கு என்னென்ன தெரியவேண்டும் என புட்டுப்புட்டு வைத்துள்ளார் டீன். ஒரு புறம் பழக்கத்துக்கு அடிமையாக இருந்துகொண்டு மறுபுறம் வாழ்வில் உருப்படவும் வேண்டும் என்று கனவுகாணும் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம் இது.

p.krishnakumar@jsb.ac.in


நன்றி :- தி இந்து