Thursday, November 6, 2014

கோயில்களின் நகரம் : ஓஷோ சொன்ன கதை



ஓஷோ சொன்ன கதை

ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு ஒரு நகரத்தில் உள்ள கோயில்கள் அனைத்தையும் கடல் விழுங்கியது. கடலுக்குள் இருந்த ஆலயமணிகள் அவ்வப்போது ஒலிக்கும். தண்ணீரால் சில நேரம் மணிகள் அசைக்கப்படும். மீன்கள் சில நேரங்களில் மணிகளை ஆட்டிவிடும். அந்த மணிகளின் இசை, கடலின் கரைவரை கேட்கும். இன்றும்கூட அந்த நகரத்தில் கோவில் மணிஓசை அருமையான இசையாகக் கேட்டுக்கொண்டிருக்கிறது..

அந்த நகரத்துக்கு நானும் செல்ல ஆசைப்பட்டேன். அதனால் அந்தக் கடலைத் தேட ஆரம்பித்தேன். பல ஆண்டுகள் அலைச்சலுக்குப் பின்னர், நான் அந்தக் கரையை அடைந்தேன். ஆனால் அங்கே கடலின் பேரிச்சைல்தான் கேட்டது. அலைகளின் ஓயாத ஓலம், பாறை மேல் அறையும் சத்தங்கள் அந்தத் தனிமையான இடத்தில் பெரும் ஆர்ப்பரிப்பாக இருந்தன. அங்கே இசையும் இல்லை. ஆலய மணி ஓசைகளையும் கேட்க முடியவில்லை.


நாம் கடற்கரையிலேயே அதிககாலத்தைக் கழித்துவிட்டதால், திரும்பும் வழியையும் மறந்து விட்டேன். இந்தக்கடற்கரைதான் எனது கல்லறையாகப் போகிறதோ என்ற அச்சம் என்னுள் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் ஆலயமணி ஓசை பற்றிய எண்ணம் கூட படிப்படியாக மறக்கத் தொடங்கியது. நான் அந்தக் கடற்கரையையே என் வாசமாக மாற்றிக்கொண்டேன்.

ஒரு நாள் இரவு கடலில் மூழ்கியிருந்த கோவில்களிலிலிருந்து மணிகள் அடிக்கத் தொடங்கின. அந்த இனிய இசை எனது உடலை உற்சாகத்தால் நிரப்பியது. உறக்கம் முழுக்க கண்களிலிருந்து அகன்றது. விழிப்புணர்வடைந்த ஒரு நபர் என் கூடவே இருப்பது போல உணர்ந்தேன். தூக்கமே என்னை விட்டுப் போய்விட்டது. வாழ்க்கை முழுவதும் ஒளியால் நிரம்பிவிட்டது. இருட்டே இல்லை.

நான் சந்தோஷமாக ஆனேன். சந்தோஷத்தின் அவதாரமாகவே ஆனேன். கடவுளின் ஆலயத்தி லிருந்து இசை வரும்போது ஒருவரிடம் துளிகூட சோகம் குடிகொண்டிருக்க முடியாது. நீங்களும் அந்தக் கடற்கரைக்குச் செல்ல ஆசைப்படுகிறீர்களா? நாம் சேர்ந்து போகலாம். நமக்குள் நாம் நகர்வோம். ஒருவரின் இதயம் அந்தக் கடலைப் போன்றதுதான். அதன் ஆழத்தில் மூழ்கிய ஆலயங்களின் நகரம் உள்ளது.

ஆனால் எல்லா வகையிலும் ஒருவர் அமைதியாகவும், கூர்ந்த கவனத்துடனும் இருக்க முடிந்தால் தான் அந்தக் கோவில்களிலிருந்து ஒலிக்கும் மணிகளைக் கேட்க முடியும். எண்ணங்களும் ஆசைகளும் உக்கிரமாகப் போரிடும் இரைச்சலின் பின்னணியில் இந்த ஆலய மணிகளை எப்படிக் கேட்க முடியும்? அதைக் கேட்கும் ஆசைகூட அதைக் கேட்பதற்குத் தடையாகிவிடும்.


நன்றி :- தி இந்து


No comments:

Post a Comment