Sunday, October 26, 2014

வாங்க பழகலாம்!


நல்லதோ கெட்டதோ செயல் ரீதியாக ஒரு விஷயத்தை தொடர்ந்து செய்து பழக உங்களுக்கு எவ்வளவு நாள் பிடிக்கும் என்ற கேள்வியோடு ஆரம்பிக்கும் புத்தகம்தான் ஜெர்மி டீன் எழுதிய ‘மேக்கிங் ஹேபிட்ஸ் ப்ரேக்கிங் ஹேபிட்ஸ்’ என்ற புத்தகம். நல்லதை பழகவும் கெட்டதை விட்டொழிக்கவும் மனிதன் என்ன செய்யவேண்டும். இதைச் செய்ய ஒருவருக்கு எத்தனை நாள் தேவை என்பதையும் சொல்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். இந்தப் புத்தகத்தை எழுதுவதற்கு முன்னால் டீன் கூகுளில் ஒரு பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ள எத்தனை நாள் தேவைப்படும் என்று தேடியபோது அது தந்த பெரும்பாலான விடைகள் இருபத்தியோரு நாட்கள் என்றே இருந்ததாம்.

உடற்பயிற்சி, புகைபிடித்தல், டைரி எழுதுதல் என எதுவென்றாலும் சரி விடுவதற்கோ அல்லது தொடர்வதற்கோ இருபத்தியோரு நாட்கள் போதுமானது என்றதாம் கூகுள். ஆராய்ச்சிகளுமே ஒரு விஷயத்தை எப்பாடு பட்டாவது 21 நாட்களுக்கு தொடர்ந்து செய்துவிட்டால் 21வது நாளுக்கு மேல் கிட்டத்தட்ட உங்களின் ரொட்டீனில் ஒன்றாக மாறிவிடுகின்றது என்றே சொல்கின்றது.

சூழ்நிலையின் முக்கியத்துவம்

இந்த 21 நாள் என்பது ஒரு அறிவியல் ஆதாரமில்லாத குத்துமதிப்பே என்று சொல்லும் ஆசிரியர், புதிதாய் நாம் பழக நினைக்கும் ஒரு பழக்கத்தை எப்படி வழக்கமாக்கிக்கொள்வது என்பதை விலாவாரியாக இந்தப் புத்தகத்தில் சொல்லியுள்ளார். காலையில் எழுந்தவுடன் இரண்டு டம்ளர் தண்ணீர் குடித்து பழகவேண்டும் என நினைக்கின்றீர்கள். இது 21 நாளில் சாத்தியம். தினமும் ஜிம்முக்குப் போகவேண்டும் என நினைக்கின்றீர்கள். இதை வழக்கமாக மாற்ற 21 நாள் போதாது. பழக்கம் குறித்து மூன்று குறிப்பிடத்தக்க முக்கிய விஷயங்களை டீன் பட்டியலிடுகின்றார்.
முதலாவதாக பழக்கம் வழக்கமான பின்னர் மூளை ரொம்பவும் அந்தச் செயலைப் (நல்லதோ/கெட்டதோ) பற்றி பிராய்ந்து சிந்தித்துப் பார்ப்பதில்லை. அது கிட்டத்தட்ட அனிச்சை செயலாகி விடுகின்றது. இரண்டாவதாக, தொடர்ந்து வழக்கமாய் ஒரு செயலைச் செய்யும்போது அந்தச் செயல் குறித்த எமோஷன் என்பதே இல்லாமல் போய்விடுகின்றது.

மூன்றாவதாக, நல்லதோ கெட்டதோ பழக்கம், வழக்கமாக மாறும் சூழல் இருக்கின்றதே அதில்தான் அது எவ்வளவு கெட்டியாக நம்முடன் ஓட்டிக்கொள்கின்றது என்பதன் சூட்சுமமே இருக்கின்றது என்கின்றார் ஆசிரியர். ஸ்ட்ரெஸ்ஸுடன் இருக்கும்போது சிகெரெட் பிடித்து பழகுவதும், சோகத்தில் இருக்கும்போது பழகும் குடிப்பழக்கத்தினில் இருந்து மீளமுடியாமல் திணறுவதும் இதனாலேயேதான்.

எண்ணமும் பழக்கமும்

நான் முன்னேற வேண்டும் என்ற எண்ணமும் அதற்கான பழக்க வழக்கங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் மனதில் இருந்தால் நல்ல பழக்க வழக்கங்கள் கைகூடும் என்று யாராவது காதில் பூ சுத்தினால் நம்பாதீர்கள் என்கின்றார் டீன்.

எண்ணத்தினால் பழக்கத்தை உருவாக்கவே முடியாது. யாருக்குத்தான் நம்முடைய நேரத்தையும் எனர்ஜியையும் உபயோகமான வழியில் செயல்படுத்தி முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இல்லை. அப்புறம் ஏன் சார் பார்ட்டியிலும் பப்பில்லும் கூட்டம் அலைமோதுகின்றது? வெட்டி அரட்டைகள் ஏன் கனஜோராய் நடக்கின்றது என்று கேட்கும் டீன், நினைப்புதான் பிழைப்பை கெடுக்குது என்று சொல்வார்கள். அது என்னவோ பழக்க வழக்கத்தில் சரிதான் என்கின்றார்.

தொழிலில் முன்னேற நெட்வொர்க் வேண்டும் என நினைத்து பார்ட்டிக்கு போவீர்கள். அங்கேதான் உங்கள் ஆழ்மனத்தில் இருக்கும் ஆட்டோ பைலட் வேலை செய்ய ஆரம்பித்து, மகனே என்ஜாய்! என கட்டளையிட்டு தொழில் பற்றிப் பேசாமல் குடித்துக்குடித்து மட்டையாவீர்கள் என்கின்றார். 
உன்னை யறிந்தால் நீ உன்னையறிந்தால் பழக்கத்தை மடித்து கக்கத்தில் வைத்துக் கொள்ளலாம். இல்லாவிட்டால் பழக்கம் உன்னை மடித்து கக்கத்தில் வைத்துக் கொள்ளும் என்கின்றார் டீன்.

ஒரு தடவை முடிவு பண்ணி ஆழ்மன செட்டிங்கை மாற்றிவிட்டால் அதற்கப்புறம் பழக்கம் உங்கள் கக்கத்தில் என்கின்றார் டீன். ஆபீஸ் இடைவேளையில் சிகரெட்டையும் லைட்டரையும் பார்த்தவுடன் சிகரெட் பழக்கமில்லாதவர் கேஷிவலாயும் பழக்கமுடையவர் பரபரவென்றும் மாறுவதைப் பார்க்கின்றீர்களில்லையா? ஏன் சிகரெட் பழக்கமுள்ளவருடைய கை ஆட்டோமேட்டிக்காய் சிகரெட்டை எடுக்கின்றது. மற்றவர் வெறுமனே வேடிக்கை பார்க்கின்றார். உள்ளே செட்டிங் அப்படியிருக்கின்றது. எனவே, பழக்கத்தை மாற்ற செட்டிங்கை மாற்றவேண்டுமே தவிர இருபத்தியோரு நாள் தவமிருக்க முயற்சிக்கக் கூடாது என்கின்றார்.

கைமேல் பலன்

நல்ல பழக்கங்கள் முன்னேற்றத்தைத் தரும் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தானே!. அப்புறம் ஏன் அனைவரும் நல்லபழக்கங்களை கொண்டிருப்பதில்லை என்ற கேள்விக்கு அருமையான விடையைத் தருகின்றார் ஆசிரியர். நல்ல பழக்கம் நன்மை பயக்கும் என்பது சரி. எவ்வளவு நேரத்தில் அந்த நன்மை நமக்கு வந்துசேரும் என்பதில்தான் பிரச்சினையே. மனித மனம் உடனடி நன்மையை விரும்புகின்றது. ஜாலியாய் இருக்கணுமா போனைப் போடு நண்பர்களைக் கூப்பிடு. ஜாலி உடனடியாய் கேரண்ட்டீ. பொழுது போகணுமா பேஸ் புக்கிற்கு போ! கைமேல் பலன் (பொழுது போவதில் இருந்து போதாது என்று ஆகிவிடுகின்றதே). அதே சமயம் வேலையில் பதவி உயரணுமா? ஒழுங்காய் வேலையைப் பார். ஒரு நாள் மட்டுமா? இல்லை தொடர்ந்து பல நாள். அது சரி எப்போது பதவி உயர்வு வரும்? வரும்போது வரும்! இன்க்ரிமெண்ட்?!. தரும்போது தருவோம்! அடப்போங்கப்பா! நான் போறேன் பேஸ்புக்குக்கு!. உடனடியாக பலன்கிடைக்காது என்ற விஷயத்தை பழக்கப்படுத்திக்கொள்வதுதான் கடினம். அதிகமா சாப்பிட்டா குண்டாயிடுவே. ஓ.கே. ஆனா நாக்குல டேஸ்ட் ஒட்டிக்கிடுச்சே!. தொடர்ந்து எக்ஸர்சைஸ் செய்தா பிட்டா இருப்பே. இன்னைக்கு ஜிம்முக்கு போனேன். எய்ட் பேக்ஸ் வரலியே! அப்புறம் எதுக்குப் போகணும். இதுதான் மனிதர்களின் பிரச்சினை என்பதைப் புரிந்துகொள்ளுங்கள் என்கின்றார் டீன்.

இன்டர்நெட்டின் அடிமை

அன்றாடம் நாம் கொண்டுள்ள சோஷியல் பழக்கங்கள், வேலைப் பழக்கங்கள், ட்ராவல் பழக்கங்கள், உணவுப் பழக்கங்கள், ஷாப்பிங் பழக்கங்கள் என அத்தனையிலுமே இந்த நிலையேதான். உடனடி லாபம் இருக்கின்றதா. இறங்கு அதில் என்பதைத்தான் மனிதனின் ஆழ்மனம் சொல்கின்றது. இன்டர்நெட் மனிதர்களை அடிமைப்படுத்தி வைத்திருப்பதன் சூட்சுமத்தையும் டீன் சொல்கின்றார். ஈ-மெயில், ட்விட்டர், பேஸ்புக் என பழக்கத்துக்கு அடிமையாக்கும் (நேரம் தின்னும் வகை) பல விஷயங்கள் எப்படி மனிதர்களை பழக்கத்துக்கு அடிமையாக்குகின்றன என்பது குறித்து விரிவாகச் சொல்லியுள்ள டீன் ட்விட்டரில் இன்ட்ரெஸ்ட்டிங் ட்வீட்டுகள் வந்தாலும் நேரம் வேஸ்ட். கொஞ்சம் நேரத்துக்கு ஒன்றுமே வராவிட்டாலும் ஒன்றுமே வரலியே என கவலைப்பட்டு நேரம் வேஸ்ட் ஆகின்றது என்கின்றார்.

ட்விட்டரில் உங்கள் நண்பர்கள் இருக்கின்றார்கள். நாலு நல்ல விஷயங்கள் உடனுக்குடன் கிடைக்கும் என்ற சப்பைக்கட்டை கட்டிக்கொண்டுதானே நீங்கள் சேர்ந்தீர்கள். சேர்ந்த பின்னால் முகம் தெரியாத கூட்டம் அதிகமாகி அதனால் காரணகாரியம் இல்லாமல் தொடர்ந்து செக்பண்ணி நேரத்தை வீணடிக்கின்றீர்களே என்கின்றார் டீன். இன்னும் கொஞ்சம் பின்னால் போவோம். டீவி எதற்குப் பார்க்கின்றீர்கள்? பொழுதுபோக்கு, செய்திகள், கல்வி போன்ற உபயோகமான விஷயங்களுக்காக என்பீர்கள்தானே! அதுதான் காரணம் என்றால் செய்திகள் முடிந்தவுடனேயும், உங்களுக்கு பிடித்த சீரியல் முடிந்தவுடனேயும் ஆஃப் செய்துவிட்டு வேறுவேலையைப் பார்க்கலாமே. சேனல் அப் அண்ட் டவுனை அமுக்கி ஒரே மொக்கையாய் ப்ரோகிராம் போடுறாங்க என்று ஏன் கம்ப்ளெயிண்ட் அடிக்கின்றீர்கள்.

ஓ! டீவி உங்களுக்கு டைம் பாஸுக்குமா!. அப்ப சீக்கிரமா உருப்பட்டு விடுவீர்கள் என கிண்டலடிக்கின்றார் டீன். டீவியைப் போல் எதற்கோ ஆரம்பித்து எதிலோ கொண்டு விடுவதுதான் பழக்கங்கள். அலர்ட்டாக இல்லாவிட்டால் ஆளைச் சாய்த்துவிடும் என்று எச்சரிக்கின்றார். நல்லதைப் பழகவும் தீயதைப் புறந்தள்ளவும் ஒரு மனிதனுக்கு என்னென்ன தெரியவேண்டும் என புட்டுப்புட்டு வைத்துள்ளார் டீன். ஒரு புறம் பழக்கத்துக்கு அடிமையாக இருந்துகொண்டு மறுபுறம் வாழ்வில் உருப்படவும் வேண்டும் என்று கனவுகாணும் அனைவருமே படிக்கவேண்டிய புத்தகம் இது.

p.krishnakumar@jsb.ac.in


நன்றி :- தி இந்து

No comments:

Post a Comment